ஒரு குப்பை கதை ; விமர்சனம்

oru kuppai kathai review

குப்பை அள்ளும் மனிதனின் வாழ்க்கையிலும் எவ்வளவு உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன என்பதை சொல்லும் நல்ல கதை தான் இந்த ‘ஒரு குப்பை கதை’..

சென்னையில் குப்பை அள்ளும் வேலை பார்க்கும் தினேஷுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள மலைகிராமத்தில் இருக்கும் மனிஷாவை பெண் பார்த்து, தனது வேலை பற்றி சொல்லாமல் மறைத்து, திருமணம் செய்து சென்னைக்கு அழைத்து வருகிறார் தினேஷ்.. நகர வாழ்க்கைக்கு செல்கிறோம் என ஆயிரம் கனவுகளோடு வரும் மனிஷாவுக்கு தினேஷ் இருக்கும் பகுதியும், அவர் குப்பை அள்ளுபவர் என்கிற விஷயமும் நரக வாழ்க்கையாகி விடுகிறது.

குழந்தை பிறந்தவுடன் மனைவிக்காக வசதியான அபார்ட்மெண்ட் வாழ்க்கைக்கு மாறுகிறார் தினேஷ்.. ஆனால் அங்கே ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் சுஜோ மேத்யூ தனது செயல்களால் மனிஷாவை ஈர்க்கிறார். ஒருகட்டத்தில் சுஜோவுடன் குழந்தையுடன் மனிஷா வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார்.

மனைவியின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தினேஷ், தனது குழந்தையையாவது அவரிடம் இருந்து வாங்கிவரலாம் என மனிஷாவை தேடி கிளம்புகிறார்.. ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார்.. கொலையானது யார், மனிஷாவின் கதை என்ன ஆனது என்பதற்கு மீதிப்படம் விடை சொல்கிறது.

கதையின் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் தினேஷ் மாஸ்டர் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார். ஒரு குப்பை அள்ளும் தொழிலாளியாகவே வந்து மனதில் நிற்கிறார்.

மனிஷா யாதவ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து கவர்ந்திருந்தாலும், இந்த படத்தில் குடும்ப பெண்ணாக, குழந்தைக்கு அம்மாவாக அவரது கதபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

யோகி பாபு காமெடியுடன் குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறார். ஜார்ஜ், அதிரா, கோவை பானு. செந்தில், லலிதா என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்திருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜோஸ்வா ஸ்ரீதரின் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

குப்பை அள்ளுபவன், உள்ளத்தால் சுத்தமாக இருக்கிறான். நாகரீகமாக இருப்பவர்கள், உள்ளத்தால் குப்பையாக இருக்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர் காளி ரங்கசாமி. படத்தின் திரைக்கதையும், வசனமும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. முதல் படம் என்பதால் கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் சேர்க்காமல் கருத்தான அம்சங்களை சேர்த்து சமரசம் இல்லாமல் படமாக்கி இருக்கும் இயக்குனர் காளி ரங்கசாமியை தாராளமாக பாராட்டலாம்.