ஆரஞ்சு மிட்டாய் – விமர்சனம்

நடந்துசெல்ல மட்டுமே வசதி உள்ள குக்கிராமத்தில் வசிக்கும் பெரியவர் விஜய்சேதுபதி நெஞ்சுவலியில் துடிப்பதாக ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு தகவல் வருகிறது அவசர மருத்துவ உதவியாளர் ரமேஷ் திலக்கும், ஓட்டுனர் ஆறுபாலாவும் ஆம்புலன்ஸுடன் அவரது கிராமத்திற்கு செல்கிறார்கள். ஆனால் விஜய்சேதுபதியோ வெகு சாதாரணமாக தலைசீவி, பவுடரடித்து பிக்னிக் போவது போல கிளம்புகிறார்.

நடக்கமாட்டேன் என அடம்பிடிக்கும் அவரை ஸ்ட்ரெச்சரில் உட்கார வைத்து ஆம்புலன்ஸ் வரை கொண்டுவருகிறார்கள். அங்கிருந்து மருத்துவமனைக்கு வருவதற்குள் அவர்கள் இருவரையும் வம்பிழுத்து, பேசிப்பேசியே டார்ச்சர் செய்கிறார் விஜய்சேதுபதி. ரமேஷ் திலக் கோபம் வந்தாலும் அடக்கிக்கொள்ள, ட்ரைவர் பாலவோ பதிலுக்கு பதில் எகிறுகிறார்.

மருத்துவமனை, லேப் ரிப்போர்ர்டில் விஜய் சேதுபதியின் உடலுக்கு ஒன்றும் இல்லையெனவும் அவர் இப்படி அடிக்கடி ஆம்புலன்ஸுக்கு போன் செய்து டவுனுக்கு வந்து செல்வதாகவும் ரமேஷ் திலக்கிற்கு தெரிய வருகிறது. ஒரு பக்கம் கோபம் வந்தாலும், தனிமையில் தவிக்கும் அவர் மீது பரிதாபமும் எழுகிறது. இரண்டு முரண்பட்ட கேரக்டர்கள் எப்படி ஒரு புள்ளியில் நட்பாக இணைகின்றனர் என்பதாக படம் முடிகிறது.

இது விஜய்சேதுபதிக்கான படம் இல்லையென்றாலும் தானே வலிந்து வந்து இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டிருப்பது அவரது நடிப்பிலும் வயதான கெட்டப்பிலும் தெரிகிறது. அதற்காக அவரை மனம் விட்டு பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் நடிப்பு செட்டாகும் அளவுக்கு வயதான தோற்றம் விஜய்சேதுபதிக்கு செட்டாகவில்லை என்றே சொல்ல தோன்றுகிறது.. ஒருவேளை காட்சிகளில் விறுவிறுப்பு கூடியிருந்தால் இது மறைந்திருக்குமோ என்னவோ..?

மருத்துவ உதவியாளராக வந்து விஜய்சேதுபதியின் முரண்டுகளுக்கு ஈடுகொடுத்து சமாளிக்கும்போதும் டீடெய்ல்ஸ் சொல்கிறேன் என டாக்டருக்கே ஐடியா கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ளும்போதும் பரிதாபம் அள்ளுகிறார் ரமேஷ் திலக்.. காதலி அஷ்ரிதா அவர் இஷ்டத்துக்கு, தன்னை தவறாக நினைத்து பேச, இறுதியில் தனது சுயமரியாதையை விட்டுகொடுக்காமல் பேசிவிட்டு வரும்போது ‘கெத்து’ காட்டியுள்ளார் ரமேஷ் திலக்.

ஆட்டோ ட்ரைவரா இல்லை. ஆம்புலன்ஸ் ட்ரைவரா என சந்தேகப்படும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆறுபாலா தோற்றத்திலும் நடிப்பிலும் ஆடுகளம் முருகதாசையும் காளிவெங்கட்டையும் மிக்ஸ் பண்ண முயற்சித்து காமெடி என்கிற பெயரில் படுத்துகிறார். விஜய்சேதுபதியின் டார்ச்சரில் சிக்கி காண்டாவதும், ரமேஷ் திலக்கின் காதலியை உனக்கு செட் பண்ணிவிடட்டுமா என விஜய்சேதுபதி கேட்கும்போது கண்களில் ஆர்வம் காட்டுவதுமாக சில இடங்களில் பரவாயில்லை.

கதாநாயகி அஷ்ரிதாவுகிக்கு நான்கே காட்சிகளில் தான் வேலை.. கிராமத்து கேரக்டரில் சரியாக பொருந்துகிறார். மற்றபடி பல காட்சிகளில் எஸ்.எம்.எஸ் குரல் மூலமாகவே அமுங்கிபோகிறார். நட்புக்காக விஜய்சேதுபதியின் மகனாக இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் கருணாகரன், க்ளைமாக்ஸில் மட்டுமே தலைகாட்டும் அசோக் செல்வன் இவர்களைப்பற்றி என்ன சொல்ல.?

வயதான ஒருவரின் தனிமையும் ஆதரவில்லாமல் அவர் தடுமாறும் சூழ்நிலையும் புளிப்பாக இருக்கும் அவரின் பேச்சுக்களை மீறி இனிப்பாக இருக்கும் அவரது மனது கண்டு அவருடன் போகப்போக நட்பாகி அவருது உருவத்தில், இறந்துபோன தன் தந்தையை காண முயற்சிக்கும் இளைஞனும் என்கிற இந்த நல்ல கான்செப்ட் குறும்படமாக(வே) இருந்திருந்தால் சுவையாக இருந்திருக்கும். சினிமா எனும்போது அலுப்பு ஏற்படவே செய்கிறது.

ஆம்புலன்ஸ் என்கிற விஷயம் எந்தவித சீரியசும் இல்லாமல் பிக்னிக் வாகனமாக இதில் காட்டப்பட்டுள்ளது ரொம்பவே மைனஸ்.. விஜய்சேதுபதி எழுதியுள்ள வசனங்கள் காட்சிகளை சுவராஸ்யப்படுத்த உதவியிருக்கின்றன. அறிமுக இயக்குனராக களம் இறங்கி ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, டைரக்சன் என பல சுமைகளை சுமந்திருக்கும் இயக்குனர் பைஜூ விஸ்வநாத், திரைக்கதையிலும் அந்த சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் படம் மனதில் அழுத்தமாக தைத்திருக்கும்.