ஓடு ராஜா ஓடு – விமர்சனம்

ஜோக்கர் குரு சோமசுந்தரம் நடிப்பில் நிஷாந்த்-ஜிதின் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ஓடு ராஜா ஓடு.

மனைவி லட்சுமி பிரியா கணவன் சோமசுந்தரத்திடம் செட்டாப் பாக்ஸ் வாங்கி வந்து மாட்டும்படி சொல்லி பணம் கொடுக்கிறார். கஞ்சாவை விற்று பிழைப்பை ஓட்டும் நண்பன் பீட்டரை அழைத்துக் கொண்டு செல்லும் போது அவரால் பணத்தையும் பறி கொடுத்து, கஞ்சா கடத்தல் தலைவன் சொல்லும் ரிஸ்க்கான வேலையை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார் குரு சோமசுந்தரம்.

இதற்கிடையே தாதா நாசரை போட்டுத் தள்ள முயலும் அவரது தம்பி, நாசரால் சிறை செல்ல நேரிட்ட அவரது வேலையாள் மகன் ஆனந்த் சாமி, சின்னச்சின்ன திருட்டுக்களை செய்து அன்றாட வாழ்க்கையை நகர்த்தும் நான்கு சிறுவர்கள் என கிளைக்கதைகளும் சமகாலத்தில் தொடர்கின்றன..இந்த கிளைக்ககதை மனிதர்கள், குரு சோமசுந்தரத்தின் மெயின் கதையில் எப்படி இணைகிறார்கள்.. அதனால் ஆகிறது என்பது மீதிக்கதை. செட்டாப் பாக்ஸ் வாங்கி மனைவி லட்சுமி பிரியாவின் ஆசையை குரு சோமசுந்தரம் நிறைவேற்றினாரா என்பது க்ளைமாக்ஸ்..

ஒரு செட்டாப் பாக்ஸ் வாங்குவதில் ஆரம்பித்த பிரச்சனை தான் என்றாலும் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் கதை வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறது. இது ஜோக்கர் படம் வெளியாவதற்கு முன்பு எடுக்கப்பட்டபடம் என்பதால் குரு சோமசுந்தரத்தின் இயல்பான முகத்தையும் பிளாக் ஹ்யூமர் நடிப்பையும் பார்க்க முடிகிறது. குருவின் மனைவியாக வரும் லட்சுமி பிரியா செட்டாப் பாக்ஸே உயிரென கிடப்பதும், தன்னிடம் ஜொள்ளுவிடும் பக்கத்து வீட்டு இளைஞனுக்கு டோஸ் விடுவதுமாக கொடுத்த வேலையை செய்கிறார்..

விதவிதமான இடங்களில் மருவை மாற்றி மாற்றி ஒட்டிக்கொண்டு தாதாவாக வலம் வரும் நாசர் பாதி நேரம் அடிபட்ட மயக்கத்தில் கார் டிக்கியிலேயே பயணித்தாலும் அதை படு யதார்த்தமாக செய்துள்ளதில் தான் சபாஷ் போட வைக்கிறார். நாசரை பழிவாங்குவதற்காக நினைத்து அவரை கடத்துவதற்கு பதிலாக தனது தந்தையையே ஆனந்தசாமி கடத்தும் இடமும், அதன்பின் அவருக்கு கொடுக்கும் டார்ச்சர் எல்லாமே காமெடி ரகம் தான். படத்தில் மற்ற கதாபாத்திரங்குக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் இயக்குனர்கள் நிஷாந்தும் ஜிதினும்.

இடைவேளைக்குப்பின் படம் விறுவிறுப்பு கூடினாலும், பிளாக் ஹியூமர் காமெடியை எத்தனை பேர் புரிந்து சிரிப்பார்கள் என்பது தான் கேள்வியே.