ஓ காதல் கண்மணி – விமர்சனம்

திருமணம் பண்ணிக்கொள்ளாமலேயே வாழும் லிவிங் டுகெதர் வாழ்க்கை பேச்சளவில் ஓகே.. ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்பதை, ஆராய்ச்சியெல்லாம் செய்யாமல், உணர்வுப்பூர்வமாக அணுகியிருக்கிறார் மணிரத்னம்…

ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரின் முதல் சந்திப்பு, தொடரும் நட்பு, அது காதலாக மாறுவது, ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் குடித்தனம் பண்ணுவது, வெளிநாட்டு பயணத்தால் பிரியப்போகும் வலி என அவர்களின் ஆறுமாத வாழ்க்கை பயணத்தில் நாமும் பார்வையாளர்களாய் நுழைந்ததுபோல இருக்கிறது..

ட்ரெண்டி யூத் ஐகான் என அவார்டே தரலாம் துல்கர் சல்மானுக்கு.. சந்தோசத்தை அள்ளிக்கொட்டுவது, கோபத்தை அளவாய் கொட்டுவது, காதலை கண்களிலேயே தேக்கி வைப்பது என படு கேஷுவலான நடிப்பு அவருடையது. காதல் காட்சிகளில் இளமை குறும்பு நூறு சதவீதம் கொப்பளிக்கிறது.. வருஷத்துக்கு ஒரு படம் தமிழ்லயும் பண்ணுங்க துல்கர்.

நித்யா மேனன் என்றால் புன்னகை அரசி என்று அர்த்தமோ தெரியவில்லை.. எப்போதும் துறுதுறுவென கொஞ்சம் அகன்ற புன்னகையுடன் வலம் வரும் நித்யா மேனனின் நடிப்பு இயல்பாக இருந்தாலும், மணிரத்னத்தின் வசனங்களால் சில நேரம் அவரது நடிப்பு அன்னியப்பட்டு தெரிவதும் உண்மை.

அடைத்து வைத்த சிங்கம் போல ஒரு வீட்டுக்குள்ளேயே உலா வந்தாலும் கணபதி அங்கிள் ஆக மஞ்சள் கோட்டை தாண்டாத நடிப்பு பிரகாஷ்ராஜுடையது. அவரது மனைவியாக புதுமுக லீலா சாம்சன்.. சான்ஸே இல்லை.. குறிப்பாக அவரது மறதி நோய் ஆரம்பத்தில் சிரிப்பையும் இறுதியில் நெகிழ்வையும் தருகிறது. அட.. விஜய் டிவி ரம்யாவும் கூட இருக்கிறாருங்க..

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தையும் காட்சிகளுக்கு இடையே சொருகியதே தெரியாமல் புகுத்தியிருப்பதால் ஆடியோவாக கேட்டதை விட விஷுவலாக பார்க்கும்போது அத்தனை பாடல்களுமே மனதை அள்ளுகிறது. வழக்கமாக பரபரப்பான மும்பையையே தமிழ்ப்படங்களில் பார்த்து பழகிய ரசிகர்களுக்கு பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மும்பையின் புதிய வாசலை திறந்து காட்டியுள்ளது.

வழக்கம்போல காமெடிக்கு என தனியாக ஆள் சேர்க்காமல் படத்தின் முக்கிய கேரக்டர்களையே தேவைக்கேற்ப காமிக்கலாக ட்யூன் பண்ணியிருக்கிறார் மணிரத்னம். படத்தின் காதல் காட்சிகளை பார்க்கும்போது மணிரத்னத்தின் பென்சிலுக்கு இன்னும் வயதாகவில்லை என்பது பளிச்சென்று தெரிகிறது.

அதிரடி ட்விஸ்ட் இல்லை, அடிதடி, ரவுடியிசம், காதலுக்கு எதிர்ப்பு என எதையும் கலக்காமல் காதல்..காதல்..காதலை மட்டுமே பிரதானப்படுத்தி இருகிறார் மணிரத்னம். அதோடு இறுதியில் நமது சமூக மரபை மீறாத முடிவை சொல்லி திருமண பந்தத்தை வலுப்படுத்தியிருக்கிறார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்துக்கு வருகிறவர்களுக்கு மணிரத்னம் பெரிய ஏமாற்றம் எதையும் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.