நானும் ரௌடி தான் – விமர்சனம்

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனின் இரண்டாவது படமாக வெளிவந்துள்ள இந்த ‘நானும் ரௌடி தான்’ ஆடியன்சின் பல்ஸை சரியாக பிடித்திருக்கிறதா..? பார்க்கலாம்.

பாண்டிச்சேரி போலீஸ் அதிகாரியான ராதிகாவின் மகன் விஜய்சேதுபதிக்கு சிறுவயதிலேயே ரௌடிகளின் பந்தாவை பார்த்து தானும் ஒரு ரௌடியாக வேண்டும் என்பது ஆசை.. லட்சியம்.. ஆனால் அம்மாவின் வற்புறுத்தலால் போலீஸ் வேலைக்கும் ட்ரெய்னிங் எடுக்கிறார்.

இன்னொரு பக்கம் ரவுடி பார்த்திபனால் தனது அம்மாவை சிறுவயதிலேயே வெடிவிபத்தில் பறிகொடுத்து, தன்னுடைய கேட்கும் திறனையும் இழந்து விடுகிறார் போலீஸ் அதிகாரி அழகம்பெருமாளின் மகளான நயன்தாரா.. பல வருடங்கள் கழித்து பார்த்திபனை பழிவாங்கப்போனபோது அழகம்பெருமாளும் கொல்லப்படுகிறார்..

இந்த சமயத்தில் நயன்தாராவுடன் நட்பாகும் விஜய்சேதுபதி, அவருக்கு ஆதரவு அளிப்பதோடு அவருடன் காதலிலும் விழுகிறார். ஆனால் தனது தந்தையை கொன்ற பார்த்திபனை தன் கையாலேயே கொல்லவேண்டும் என துடிக்கும் நயன்தாரா, அதற்கு உதவினால் மட்டுமே விஜய்சேதுபதியை காதலிக்க முடியும் என செக் வைக்கிறார்..

ரௌடி மாதிரி சும்மா பாவ்லா காட்டும் விஜய்சேதுபதியால், ஒரிஜினல் ரௌடியான பார்த்திபனை ஏதாவது பண்ண முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் டைட்டிலையும் மேலே சொன்ன கதைச்சுருக்கத்தையும் படித்துவிட்டு, சீரியசான ஆக்சன் படம் என்று நினைத்தால் பாவம் ஏமாந்துதான் போவீர்கள்.. நயன்தாராவின் எபிசோட் மட்டும் அதுவும் கொஞ்சூண்டு தான் படத்தில் சீரியஸ் போர்ஷன். மற்றபடி ஹீரோ, ரௌடி எல்லோருமே காமெடிக்கு ட்யூன் பண்ணப்பட்டிருக்கிறார்கள்.

ரௌடியாக பந்தா காட்டுவது விஜய்சேதுபதிக்கு எளிதாக பொருந்துகிறது.. அம்மா ராதிகாவை ‘மி’ என செல்லமாக அழைப்பது, காதுகேட்காத நயன்தாராவிடம் காதலில் வழிவது, ரௌடி பார்த்திபனை கொல்ல திட்டம் போட்டு சொதப்புவது, பின்னர் அவரிடமே மாட்டிக்கொண்டு அசடு வழிய கெஞ்சுவது, என எந்த பாலையும் மிஸ்ஸாக்காமல் சிங்கிள் முதல் சிக்ஸர் வரை தட்டிவிட்டு ஸ்கோர் பண்ணுகிறார்.

வாவ்.. கேட்கும் திறனற்ற பெண்ணாக நயன்தாராவுக்கு உண்மையிலேயே இது புது அனுபவமாக இருந்திருக்கும் என்பது அவர் அந்த கதாபாத்திரத்தை ரசித்து செய்திருக்கிறார் என்பதை பார்க்கும்போதே தெரிகிறது… தந்தையை நினைத்து அவ்வப்போது கண்கலங்கினாலும், காமெடி மூடுதான் அவருக்கு சரியாக செட்டாகி இருக்கிறது.

கொலை பண்ணினால் கூட தனது நடை உடை பாவனையில் எடக்கு மடக்கான வசனங்களால் நான் ரௌடி அல்ல’ என காட்சிக்கு காட்சி வெளிப்படுத்தி விடுகிறார் பார்த்திபன். ரௌடியாக கெத்து காட்டிவிட்டு, அடுத்த காட்சியில் தன்னை பழிவாங்க வந்த நயன்தாராவுக்கு பாவமன்னிப்பு கொடுப்பது செம கலாட்டா.

படம் முழுவதும் வரும் ஆர்ஜே பாலாஜிக்கு தேவையான இடத்தில் மட்டும் மூக்கை நுழைத்து கைதட்டல் வாங்கும் அளவுக்கு கச்சிதமான வசனங்களை கொடுத்திருக்கிறார்கள்.. ராதிகாவின் போலீஸ் கெட்டப்பைவிட அவர் குழைவாக பேசும் டயலாக் டெலிவரி புதுசாக இருக்கிறது. விஜய்சேதுபதிக்கு லைவாக கொலைகளை பண்ணி காண்பிக்கும் மொட்டை ராஜேந்திரன் கொஞ்ச நேரமே வந்தாலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.. மன்சூர் அலிகான், அழகம்பெருமாள் மற்றும் வாட்ஸ் அப்பையும் கூகுள் மேப்பையும் பயன்படுத்தும் அந்த ஹைடெக் ராகுல் தாத்தா என பலரும் தங்களது பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்..

அனிருத்தின் இசையில் தங்கமே பாடல் சூப்பர். ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா பாண்டிச்சேரியை புது ஆங்கிளில் காட்டியிருக்கிறது. ரௌடி கதைக்கு காமெடி முலாம் பூசி கடைசிவரை ரௌடியிசமே தலைதூக்காமல் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தாலும் நிறைவான காமெடியால் அந்த குறையை ஓரளவு சரிசெய்ய முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஹிட்டான டயலாக்குகளை ஆங்காங்கே சமயோசிதமாக கோர்த்து கைதட்டல் அள்ளும் வேலையையும் சரியாக செய்திருக்கிறார்.

ஆக்சன் படம் என எதிர்பார்க்கமால் போனால் இந்த ரௌடி நல்லவன் தான்..