நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் – விமர்சனம்

தங்கள் சுயநலத்துக்காக நல்லா இருந்த ஒரு ஊரை நாசக்கேடாக்கிய நாலு சிரிப்பு போலீசுகளின் கதை தான் படம்.

ஒருதாய் மக்களாக பழகி வரும் பொற்பந்தல் கிராம மக்கள் வஞ்சகம், சூதுவாது இல்லாத மனிதர்கள். அதனால், அங்கே வெட்டு குத்து, திருட்டு என எதுவுமே இல்லை.. ஐந்து முறை சிறந்த கிராமத்திற்கான ஜனாதிபதி விருதும்கூட வாங்கியிருக்கிறார்கள். அப்புறம் எதற்கு அந்த ஊரில் போலீஸ் ஸ்டேஷன் என நினைக்கும் அரசாங்கம், இரண்டு மாதங்களுக்குள் அதை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்து விட்டு, அங்கே இருக்கும் நாலு போலீஸையும் கலவர பூமியான ராமநாதபுரத்துக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுகிறது.

ராமநாதபுரத்திற்கு போக விரும்பாத இந்த நாலு போலீசும் ஊருக்குள்ளேயே சினச்சின்ன பிரச்சனைகளை தூண்டிவிட்டு, ஸ்டேஷனுக்கு வழக்குகளை வரவழைத்து ஸ்டேஷனை மூடவிடாமல் தக்ககவைக்க சில தகிடுதத்தங்கள் செய்கிறார்கள். ஆனால் அது விபரீதமாக மாறி, ஒன்றாக இருந்த ஊர் ரெண்டாக மாறுகிறது.. நல்லவர்களுக்குள் சந்தேகம் வந்தால் ஒரு ஊர் என்ன கதியாகும் என்பதை சிரிக்க சிரிக்க, அதேசமயம் மனது கணக்க சொல்லியிருக்கிறார்கள்.

அரசியல், தாதாயிசம் என எதுவுமே இல்லாததால் போலீஸாக இருந்தும் அருள்நிதிக்கு முஷ்டியை மடக்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது. ஸ்டேஷனை கூட்டுவது, தப்பி ஓடும் எருமை மாட்டை பிடிப்பது, காதலியிடம் கனவிலேயே காதலை சொல்வது என சிம்பிளாக சவாரி செய்கிறார். டீச்சராக வரும் ரம்யா நம்பீசன் பார்க்க பார்க்க பரவசப்படுத்துகிறார் என்றாலும் அவரை எப்போது பள்ளிக்கூடத்திலேயே தான் காட்டவேண்டுமா..?

மீதி மூணு போலீஸ்களில் ஏட்டையாவாக வரும் சிங்கம்புலி பெர்பார்மன்ஸ் சூப்பர். சொல்லப்போனால் படத்தின் கதையே அவரையும் அவர் பண்ணும் கோக்குமாக்குகளையும் வைத்தே நகருவதால் கதையின் மைய நாயகனாகவே மாறியிருக்கிறார். கூடவே வரும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பகவதி பெருமாள் சுருள்பட்டாசாக வெடிக்க முயல்கிறார். இன்னொரு போலீஸான ராஜ்குமார் புஸ்வாணமாகிப்போகிறார்.

இவர்கள் எல்லாரையுமே ஜஸ்ட் லைக் தட் பைபாஸில் வந்து ஓவர்டேக் செய்கிறார் திருடனாக வரும் யோகிபாபு.. படம் முழுக்க வரும் இவரது அலட்டல் இல்லாத காமெடியும், திருடனாக இருந்து அமைதியாக் மாறும் இவர், போலீஸாரின் சுயநலத்தால் மீண்டும் பழைய பாதைக்கே திரும்புவதும் என யோகிபாபுவின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.

பஞ்சாயத்து தலைவராக வரும் ‘களவாணி’ திருமுருகன் நமக்கு இப்படி ஒரு ஊராட்சி தலைவர் கிடைக்கமாட்டாரா என ஏங்கவைக்கிறார். படம் முடிந்து வெளியே வந்தபின்னும் அந்த மளிகை கடை அண்ணாச்சி நம் மனதைவிட்டு நீங்க மறுக்கிறார்.

‘சித்தன்’ மோகன் தன்னை பார்க்கவரும் சிங்கப்பூர் மாப்பிள்ளைக்கு தனது கிராமத்தின் அருமை பெருமைகளை காட்டி வியப்புடன் அனுப்பி வைக்கும் ஆரம்ப காட்சியிலும், பிற்பாடு அந்த ஊர் கலவர பகுதியாக மாறிப்போனது தெரியாமல் வரும் அதே மாப்பிள்ளையையும் அவரது மனைவியையும் உயிரை கையில் பிடித்தபடி தப்பிக்க வைத்து அனுப்பும் காட்சியிலும் ஊர் மாறிப்போன.., ஸாரி நாறிப்போன கதையை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

எல்லாமே நன்றாக இருந்தும் பல காட்சிகள் யதார்த்தம் மீறியதாக இருப்பதால் படத்தில் வரும் கிராமம் நம் மனதில் நிற்கும் அளவுக்கு, படம் நம் மனதில் பெரிதாக ஒட்ட மறுக்கிறது. பொற்பந்தல் போல ஒரு ஊர் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற ஆதங்கத்தை மட்டும் மனதில் விதைத்த விதத்தில் சபாஷ் பெறுகிறார் இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா. காமெடிக்கு குறைவில்லை என்பதால் படம் பார்க்கவரும் ரசிகனை சோர்வடையாமல் அனுப்புவதற்கு மினிமம் கியாரண்டி தருகிறார்கள் இந்த நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும்.