நோட்டா – விமர்சனம்

NOTA-review

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், யாஷிகா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர்

இசை : சாம் சி.எஸ்

ஒளிப்பதிவு : சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரன்

டைரக்சன் : ஆனந்த் ஷங்கர்

தெலுங்கில் குறுகிய காலத்தில் இளைஞர்களின் கவனம் ஈர்த்த நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகி இருக்கும் படம் தான் இந்த நோட்டா. டைட்டிலுககேற்றவாறு சூடான அரசியல் களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அப்பா நாசர் முதலைமைச்சர் என்றாலும் மகன் விஜய் தேவரகொண்டாவோ வெளிநாட்டில் வீடியோ கேம் உருவாக்கும் வேலையில் ஆர்வம் காட்டுகிறார். சாமியார் ஒருவரின் அறிவுரைப்படி இரண்டு வாரம் அரசியலில் இருந்து விலகியிருப்பதற்காக, தனது மகனை தற்காலிகமாக சி.எம்.ஆக்குகிறார் நாசர்.. ஆனால் இரண்டு வாரம் கழிந்த நிலையில் ஒரு வழக்கில் சிக்கி திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

முதலில் வேண்டாவெறுப்பாக முதல்வர் பதவியில் அமரும் விஜய் தேவரகொண்டா, தனது தந்தையின் கைதால் ஏற்படும் கலவரத்தை பார்த்து சடாரென சுதாரித்து அரைமணி நேரத்தில் கலவரத்தை அடக்குகிறார். தந்தையின் அரசியல் சகாக்களை ஒதுக்கி வைத்து விட்டு, மூத்த பத்திரிகையாளரான சத்யராஜின் ஆலோசனைப்படி சில நல்ல பணிகளை துவங்குகிறார்.

இந்நிலையில் ஜெயிலில் இருந்து வெளியாகும் நாசர் மர்மநபர்களின் வெடி விபத்தில் சிக்கி சுய நினைவை இழக்க, அதன் பின்னணியில் பல கோடி மதிப்புள்ள தனது தந்தையின் பினாமி சொத்து விபரம் காரணமாக இருப்பதும் அதற்கு காரணமானவர்கள் யார் என்பதும் தெரிய வருகிறது. அவர்களிடமிருந்து அந்த பணத்தை மீட்க முயலுகையில், சுயநினைவுக்கு வரும் நாசர் மூலமும் எதிர்க்கட்சி தலைவரான சன்சனா நடராசன் மூலமும் விஜய் தேவரகொண்டாவின் பதவிக்கு ஆபத்து வருகிறது. இவற்றையெல்லாம் சமாளித்து தான் நினைத்ததை விஜய் தேவரகொண்டாவால் சாதிக்க முடிந்ததா என்பது மீதிக்கதை.

ஜாலியாக நண்பர்கள், பெண்களுடன் ஊரை சுற்றும் இளைஞன் ஒருவனை திடீரென அரசியல் களத்தில் இறக்கவிட்டால் எப்படி திணறிப்போவான் என்பதை தனது இயல்பான நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் நாயகன் விஜய் தேவரகொண்டா. தமிழுக்கு அழகான புது வரவு. பிரஸ்மீட்டில் சலசலவென பேசும் பத்திரிகையாளர்களை ஒரு விரல் சொடுக்கில் அடக்கும் காட்சி சூப்பர்ப்.

நாயகனின் ஆலோசகராக சத்யராஜுக்கு பண்பட்ட வேடம். சிறப்பாக செய்திருக்கிறார்.. நீண்ட நாளைக்குப்பின் நாசரை, ஒரு கேரக்டராகவே பார்க்க முடிவது மகிழ்ச்சி. அரசியல்வாதியாக எம்.எஸ்.பாஸ்கருக்கு படம் முழுதும் வரும் ரோல்.. வெளுத்து வாங்கியிருக்கிறார் மனிதர். மெஹ்ரீன், யாஷிகா, சன்சனா என மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் கதையின் போக்கில் அவர்களை ஊறுகாயாகத்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். கருணாகரனும், மொட்ட ராஜேந்திரனும் இருந்தாலும் காமெடி குறைவுதான்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். பாடல்களை குறைத்து பின்னணி இசையில் அதிரவைக்கிறார். அப்பல்லோ விவகாரம், கூவத்தூர் அரசியல், ஆர்கே நகர் தேர்தல் என நடப்பு அரசியல் விவகாரங்களை கேப் கிடைக்கும் இடங்களில் எல்லாம் உள்ளே நுழைத்து ரசிக்க வைக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். ஆனால் முதல் பாதியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு இடைவேளைக்குப்பின் கதையை ஒரே இலக்கில் நகர்த்தி செல்வதில் நன்றாகவே திணறியிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸை முடித்த விதம் ஏமாற்றம் தருகிறது. நாசர், சத்யராஜ் பிளாஸ்பேக் காட்சிகள் சரியான காமெடி.

இருந்தாலும் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் அரசியல் கதைக்களமும் படத்தை போரடிக்காமல் பார்க்க ரசிகனை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.