“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஐரா. கே.எம்.சர்ஜுன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கேஜேஆர் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலையரசன் பேசும் போது,” மெட்ராஸ் படம் போல இந்த படம் எனக்கு ஒரு புதிய திருப்பத்தை கொடுக்கும். எச்சரிக்கை படத்திலேயே சர்ஜுனுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு நழுவிப்போனது. ஐராவில் ஒரு நல்ல கதாபாத்திரம் இருக்கிறது என கூறி என்னை தேர்வு செய்ததற்கு அவருக்கு நன்றி. நயன்தாரா தான் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது கடைசி நேரத்தில் தான் எனக்கு தெரியவந்தது” என கூறினார்

இயக்குனர் கே.எம்.சர்ஜுன் பேசும்போது, “இந்த படத்தில் நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் ஒன்றுக்கொன்று எந்த தொடர்பும் இருக்காது. வழக்கமாக இப்படிப்பட்ட படங்களில் இரண்டு கேரக்டர்களுக்கும் இணைப்பு வைத்திருப்பார்கள்.. ஆனால் அப்படி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்து இதை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தை நான் ரசித்து ரசித்து படமாக்கினேன். குறிப்பாக அந்த பிளாக் அண்டு ஒயிட் காட்சிகள். அந்தக் காட்சிகளில் எல்லாம் நயன்தாரா தான் நடித்தாரா என்று எங்களுக்கு தெரியவில்லை.. அந்த அளவுக்கு அந்த கேரக்டராக மாறி விட்டார்” எனக் கூறினார்