ஒவ்வொரு விஷயத்திலும் நேர்மையாக இருக்கும் ஜெயம் ரவி, அரசு தரப்பில் லஞ்சம் புரையோடிப்போய் இருப்பதைக்கண்டு வெகுண்டு எழுகிறார். தனியாளாக அதே சமயம் நேர்மையாக அவரால் எதுவும் செய்யமுடியவில்லை என்கிற நிலையில் நண்பனுடன் சேர்ந்து மீடியா உதவிக்கு கோபிநாத்தையும், சட்ட உதவிக்கு சுப்பு பஞ்சுவையும் உடன் வைத்துக்கொண்டு லஞ்சம் வாங்கும் ஒரு குரூப்பையே சட்டத்திடம் சிக்கவைக்கிறார்.
ஆனால் அதற்கு அவர் கையாண்ட முறை நேர்மையானதாக இல்லை.. அதைப்பயன்படுத்தியே சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள் அரசு அதிகாரிகள். அதற்காக அவர்கள் ஆந்திராவில் இருக்கும் நரசிம்ம ரெட்டியின்(இவர் இன்னொரு ஜெயம் ரவி) உதவியை நாடுகிறார்கள். அவரை ஏன் தேடிப்போகிறார்கள் என்பதும் முடிவில் வென்றது யார் என்பதும் க்ளைமாக்ஸ்..
அரவிந்த் சிவசாமி, நரசிம்ம ரெட்டி என ஜெயம் ரவிக்கு இரண்டு வேடங்கள்.. சமூக கோபம் கொண்ட இளைஞன் இப்படித்தான் இருப்பான் என அவனுக்கு உருவம் கொடுத்திருக்கிறார். மேலும் நரசிம்ம ரெட்டியாக வித்தியாசம் காட்டினாலும் முன்னவர் தான் நம் மனதில் நிற்கிறார்.
ஜெயம் ரவியை விரட்டி விரட்டி காதலிக்கும் அமலாபால் க்யூட்.. சரத்குமார் பத்து நிமிடமே வந்தாலும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டுப் போகிறார். முழுநேர நடிகராக சேனல் மூலம் ஜெயம் ரவிக்கு உதவும் நல்ல மனிதராக கோபிநாத்தும், லாயராக சுப்பு பஞ்சுவும் படம் முழுவது வந்து படத்தின் வேகத்துக்கு தோள் கொடுக்கிறார்கள் நண்பனுக்கு உதவி செய்யும் சூரி, காமெடியுடன் பல இடங்களில் சென்டிமென்டாகவும் நம்மை கவர்கிறார்.
நேர்மையான ஏட்டாக தம்பி ராமையா, அராஜக போலீஸாக அனில் முரளி, மூணார் ரமேஷ், அடாவடி அதிகாரிகளாக கு.ஞானசம்பந்தம், சித்ரா லட்சுமணன், நமோ நாராயணன், படவா கோபி உட்பட பல கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் படத்தின் கதையோட்டத்தை தடை செய்வதுபோல அவ்வப்போது வந்துபோவதை தவிர்த்திருக்கலாம். இரண்டு ஜெயம் ரவிகளுக்கும் இடையே நடக்கும், சேசிங் காட்சிகளில் சுகுமார் மற்றும் ஜீவனின் கேமரா விளையாடியிருக்கிறது.
சரி.. இனி கதைக்கு வருவோம். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான போராட்டமாக ‘நிமிர்ந்து நில்’ படத்தை தர நல்லதொரு முயற்சியை செய்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. இந்த சமயத்தில் இந்தியன், ரமணா, சிட்டிசன், சிவாஜி போன்ற படங்கள் நம் நினைவுக்கு வருவது வழக்கம் தான். அதற்கேற்ற மாதிரி அமலாபாலின் தந்தை கைதாவது, லஞ்சத்துக்கு எதிராக ஓவ்வொரு அலுவலகத்திலும் ஒருவரை தேடிப்பிடிப்பது என பல இடங்களில் அதை தவிர்க்க எந்த முயற்சியும் செய்யாமல் விட்டிருப்பது திரைக்கதையை பலவீனப்படுத்துகிறது.
மேலும் இடைவேளை வரை ஜெட் வேகத்தில் கதை சொல்லியிருக்கும் சமுத்திரக்கனி, இடைவேளைக்குப்பிறகு அரசு அதிகாரிகள் தப்பிக்க எடுக்கும் நடவடிக்கையில் இன்னொரு ஜெயம் ரவியை நுழைத்ததின் மூலம் பாதையை மாற்றியதும் நமக்கு ஏமாற்றம் தான்.
ஆனால் லஞ்சத்திற்கான ஆணிவேரே ஆடம்பரமும் குடும்பத்தில் உள்ள பெரும்பாலானோர் அதை அங்கீகரிப்பதும் தான் என்கிற உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் சமுத்திரகனி. கூடவே நம் சமுதாய கட்டமைப்பு மாறவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார். அதற்காகவே நாம் அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.