நிமிர் – விமர்சனம்

nimir review

தென்காசி பகுதியில் தனது வயதான தந்தை மகேந்திரனுடன் வசித்து வரும் உதயநிதி போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்திவருகிறார். பள்ளிக்காலத்து தோழி பார்வதி நாயருடன் காதல் நன்றாக போய்க்கொண்டு இருந்த சமயத்தில், அவரது தந்தை அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து வைக்க, அப்படியே அப்செட் ஆகி நிற்கிறார் உதயநிதி.

இந்த சமயத்தில் உதயநிதியின் பக்கத்த்தில் கடை வைத்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கரை பக்கத்து ஊர்க்காரன் வம்பிழுக்க அதை தட்டிக்கேட்க போன உதயநிதியை ஊரார் முன்னிலையில் வைத்து அடித்து துவைக்கிறார் அந்த கேங்கின் தலைவனனான சமுத்திரக்கனி. இதனால் அவமானப்பட்ட உதயநிதி அவரை அடிக்கும் வரை தன் கால்களில் செருப்பே அணிவதில்லை என்கிற சபதம் எடுப்பதோடு, சில தினங்கள் கழித்து சமுத்திரக்கனியை திருப்பி அடிப்பதற்காக அவருடைய ஊருக்கு செல்கிறார்.

ஆனால் சமுத்திரக்கனியோ அதற்கு முதல்நாள் தான் வேலைக்காக வெளிநாட்டு சென்றுவிட்டார் என்பது தெரிய வர அதிர்ச்சியாகிறார். இந்தநிலையில் உதயநிதியின் வாழ்க்கையில் கல்லூரி மாணவி நமீதா பிரமோத் குறுக்கிடுகிறார். போட்டோ எடுத்து தருவதில் ஆரம்பித்த நட்பு, பின்னர் அப்படியே காதாலாக மாறுகிறது. கூடவே சமுத்திரக்கனியின் தங்கை தான் அவர் என்கிற விஷயமும் தெரியவருகிறது.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தனது பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு வருகிறார் சமுத்திரக்கனி. தனது பழியை தீர்ப்பதற்காக அவருடன் உதயநிதி நேருக்கு நேர் மோதி வெற்றிகண்டு அதனால் இந்த காதலியையும் இழந்தாரா..? அல்லது காதலுக்காக மோதலை தவிர்த்து அவருடன் சமாதானமாக சென்றாரா..? என்பது க்ளைமாக்ஸ்.

யதார்த்தமான வேட்டி கட்டிய கிராமத்து இளைஞனாக, நேஷனல் செல்வம் என்கிற சாதாரண ஒரு அமெச்சூர் போட்டோகிராபராக இந்தப்படத்தில் டோட்டலாக உருமாறியுள்ளார் உதயநிதி. பார்வதியுடன் காதல் முறிந்தாலும் நமீதா பிரமோத்துடன் காதல் துளிர்க்கும்போது பஹத் பாசிலின் முகத்தில் படரும் வெட்கம் இருக்கிறதே.. அட..அடா.. அதேசமயம் எதிராளியிடம் அடிவாங்கி வேட்டி அவிழ்ந்து உள்ளாடையுடன் நிற்கும் அவமானத்தையும், பின்னர் பழிக்கு பழியாக அவன் ஊருக்கே சென்று இழுத்து போட்டு துவைக்க முற்படும் அந்த ஆவேசத்தையும் இம்மி பிசகாமல் பிரதிபலித்துள்ளார் உதயநிதி.

கதாநாயகிகளில் ஒருவரான பார்வதி நாயர், சந்தர்ப்பவாதியாக மாறி காதலை முறித்துக்கொண்டு ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டிக்கொள்கிறார். ஆனால் பின்னர் என்ட்ரி கொடுக்கும் இன்னொரு நாயகி நமீதா பிரமோத், தான் வரும் காட்சிகளில் எல்லாம் தனது படு யதார்த்தமான நடிப்பாலும் புன்னகையாலும் கண் அசைவுகளாலும் ரசிகர்களை உற்சாகமூட்டிக்கொண்டே இருக்கிறார்.

சூழல் காரணமாக வில்லனாகும் முரட்டுத்தனமான கேரக்டரில் செம பிட்டாக பொருந்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.. உதயநிதியை போட்டு புரட்டி எடுக்கும் காட்சிகளில் நமக்கு கோபத்தை ஏற்படுத்துகிறார். உதயநிதியின் நண்பனாக வரும் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் காமெடி ஏரியாவை கவனித்துக்கொள்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக வரும் அந்த அழகுப்பெண்ணும் படம் முழுதும் துறுதுறுவென வலையவந்து நம் கண்களை விட்டு அகல மறுக்கிறார். உதயநிதியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குனர் மகேந்திரன் குறைவான வசனங்களால், அழுத்தமான முகபாவங்களால் அப்ளாஸ் அள்ளுகிறார். பார்வதியின் அப்பாவாக வரும் சண்முகராஜன், கஞ்சா கருப்பு, பஞ்சாயத்து தலைவராக வரும் அருள்தாஸ், வெளிநாட்டு தொழிலதிபராக வரும் இமான் அண்ணாச்சி ஆகியோரும் கதையுடன் கலந்த காமெடி காட்சிகளில் இயல்பாக ஒன்றியுள்ளனர்.

குறிப்பாக தோப்பு விஷயத்தில் மத்தியஸ்தம் செய்து அருள்தாஸ் அவமானப்படும் காட்சியில் தொடங்கி, உதயநிதி அடிவாங்கும் வரையிலான சுமார் கால்மணி நேர காட்சிகளை ஒன்றுக்கொன்றுடன் தொடர்பு படுத்தி காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதுசுதான். ஒரு அமெச்சூர் போட்டோகிராபர் எப்போது கைதேர்ந்த போட்டோகிராபராக மாறுகிறான் என்பதற்கான காட்சி ‘நச்’..

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு தென்காசி கிராமங்களின் அழகை கதைக்கேற்ற சூழலுடன் சரியாக பொருத்தி இருக்கிறது. மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற வெற்றி பெற்ற மலையாள படத்தை, அதன் இயல்பு கெடாமல் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக ரீமேக் செய்த விஷயத்தில் ‘நிமிர்’ந்து நிற்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்..