நிபுணன் – விமர்சனம்

nibunan movie review 1

ஆக்சன் அர்ஜுனின் 150வது படம் என்கிற சிறப்பம்சத்துடன் வெளியாகி உள்ளது ‘நிபுணன்’.

அர்ஜூன் தலைமையில் இயங்கும் என்கவுண்டர் டீமின் வலதுகை வரலட்சுமி.. இடதுகை பிரசன்னா. நகரத்தில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன.. கொலைகள் பண்ணுபவன் ஒரு ஒரு சைக்கோ சீரியல் கில்லர்.. ஒவ்வொரு கொலை நடந்தபின்னபின்னும் அடுத்த கொலைக்கான க்ளூவையும் விட்டு செல்கிறான் கொலைகாரன்.. வரிசையாக நடக்கும் இரண்டு கொலைகளை வைத்து மூன்றாவதாக யாரை கொல்லப்போகிறான் என யூகிக்கும் அர்ஜூன் அதை தடுக்க நினைக்கும் முயற்சியில் தோல்வியடைகிறார்..

அவனின் மொத்த டார்கெட் நான்குபேர் என்பதும் அதில் நான்காவது ஆள் தான் தான் என்பதும் அவன் கொலை செய்வதற்கு காரணமாக தான் ஏற்கனவே ஈடுபட்ட வழக்கு ஒன்றுதான் காரணம் என்பதும் அர்ஜுனுக்கு தெரிய வருகிறது. அர்ஜூனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல் பாதிப்பால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர சொல்கிறார் உயரதிகாரி.

மருத்துவமனையில் சேர்ந்தாலும் வரலட்சுமியையும் பிரசன்னாவையும் சீரியல் கில்லரை பின் தொடரச்சொல்கிறார் அர்ஜூன். ஆனால் கொலைகாரனோ அவர்கள் இருவரையும் மடக்கி, தூக்கு கயிற்றில் மாட்டி, அவர்களை பணயமாக வைத்து அர்ஜுனையும் தனது இடம் நோக்கி வரவழைக்கிறான். காப்பாற்ற வந்த இடத்தில் அர்ஜுனின் உடல் பாதிப்பு அவரை செயல்பட விடாமல் தடுக்கிறது. வில்லனின் கை ஓங்குகிறது.

முடிவு என்ன ஆனது..? சீரியல் கில்லர் யார்..? தொடர்ந்து கொலைகள் பண்ணுவதன் நோக்கம் என்ன என்பது தெரியவேண்டுமென்றால் முழுப்படத்தையும் நீங்கள் பார்க்கத்தான் வேண்டும்…

வழக்கமாக போலீஸ் யூனிபார்ம் அணிந்து அதிரடி காட்டும் அர்ஜூன் இதில் ஸ்டைலிஷாக கோட் சூட் அணிந்து அதே அதிரடியை தொடர்கிறார்.. குறிப்பாக கொலைகாரனுடன் அந்த க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் காட்டும் வேகத்தில், தான் இன்னும் அதே ஆக்சன் கிங் தான் என்பதை நிரூபிக்கிறார். என்ன ஒரு சின்ன வருத்தம் என்றால் அவருக்கு இன்னும் இரண்டு சண்டைக்காட்சிகளை சேர்த்து கொடுத்திருந்தால் சண்டை பிரியர்களுக்கு இன்னும் கொஞ்சம் தீனி கிடைத்திருக்கும்.

வரலட்சுமி வழக்கம்போல படபட பட்டாசாக பொரிந்து தள்ளுகிறார். காதல் கீதல் என இல்லாமல் கலகலப்பான பிரண்ட்ஷிப்புடன் வரலட்சுமி-பிரசன்னா எபிசோடை ஜாலியாக நகர்த்தியிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குமே என்கவுண்டர் அதிகாரிகளாக கொடுக்கப்பட்ட பணி புதிது.. அதில் கூடுமானவரை தங்களை திறம்பட பொருத்திக்கொண்டு இருக்கிறார்கள்.. அர்ஜுனின் மனைவியாக ஸ்ருதி ஹரிஹரனுக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் கூட கவனம் ஈர்க்கவே செய்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் சுமனும் சுஹாசினியும் காட்டியிருக்கும் முகங்கள் புதிது. அவர்களது எபிசோட் மூலமாக வடமாநில மாணவி ஒருவரின் மர்ம மரணம் ஓனரை காட்சிப்படுத்தியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.. கொஞ்ச நேரமே திரையில் வந்தாலும், அந்த முகத்தில் காட்டும் வன்மமும் கொடூரமும் என சீரியல் கில்லராகவே மாறிவிட்ட அந்த நபர் யாரென்பது தியேட்டரில் பார்க்கும் வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்..

சீரியல் கொலைகள் என்பது ஆளுக்காள் வெவேறு காரணங்களுக்காக வேறுபடும் என்றாலும், பொதுவாக யாரோ சிலரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நபர் பழிதீர்ப்பதற்காக செய்வதுதான் அது.. இங்கேயும் அதே காரணம் தான் என்றாலும் கூட, கொலை வழக்கை அர்ஜூன் கையாளும் விதம் கொஞ்சம் டெக்னாலஜி ரீதியாக புதிது தான்.

ஆனால் படம் முழுதும் வந்தாலும் கூட வில்லன் கதாபாத்திரம் தன்னை க்ளைமாக்ஸில் தான் வெளிப்படுத்துவதால், இடையில் ஆக்சன் காட்சிகளுக்கான முகாந்திரம் சற்றே அடிபட்டு போய்விடுகிறது. மற்றபடி ஒரு விறுவிறுப்பான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லருக்கான பல அம்சங்கள் இந்தப்படத்தில் ஒன்று சேர்ந்துள்ளது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், நவீனின் இசையும் த்ரில்லருக்கான மூடை எந்நேரமும் தக்கவைக்கின்றன.

படத்தின் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையக்கூடாது என இயக்குனர் அருண் வைத்தியநாதன் மெனக்கெட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.. இருந்தாலும் அர்ஜூன் – அவர் மனைவி சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை குறைத்திருக்கலாம். கொலைகாரன் க்ளூ கொடுத்து சவால் விடுவதுடன் நின்று விடாமல், அவனை இன்னும் நெருங்கி வர வைத்திருந்தால் விறுவிறுப்பு டபுளாக மாறி இருக்கும்..

ஆனாலும் ஒரு ஆக்சன் திரில்லர் பிரியர்களுக்கு நிபுணன் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டே தருகிறார்..