நெருப்புடா – விமர்சனம்

neruppuda review 1-1

தீயணைப்பு வீரர்களாகிய ஐந்து நண்பர்கள் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்ளும் ஒரு இக்கட்டிலிருந்து மீள்வதற்கு நடத்தும் போராட்டம் தான் இந்த ‘நெருப்புடா’ படத்தின் கதை. இது விக்ரம் பிரபுவின் முதல் தயாரிப்பும் கூட.

விக்ரம் பிரபு, வருண் உள்ளிட்ட ஐந்து நண்பர்கள்.. தீயணைப்பு துறையில் வேலைக்கு சேர்வதையே லட்சியமாக கொண்டு படித்து வேலைக்கு தயாராகும் இவர்கள், வேலை கிடைக்கும் வரை தனியாருடன் இணைந்து தீயணைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.. ஒருநாள் இவர்களில் தனியாக வரும் வருணிடம் ரவுடி ஒருவன் வம்பிழுக்க, அப்போது ஏற்பட்ட கைகலப்பில் வருண் தள்ளிவிட்டதில் உயரிழக்கிறான் ரவுடி.

இறந்தவன் மிகப்பெரிய தாதாவான மதுசூதனின் வலதுகை.. இதனால் ரவுடியின் கொலைக்கு காரணமானவனை கொல்வதற்கு வெறியோடு தேடுகிறார் மதுசூதனன். இந்தநிலையில் இந்த நண்பர்கள், தங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஏரியா கவுன்சிலர் மொட்ட ராஜேந்திரனிடம் இந்த விஷயத்தை சொல்லி வைக்க, ஒருகட்டத்தில் அவர் மூலமாக விஷயம் மதுசூதனனின் காதுகளுக்கு செல்கிறது.

நண்பர்கள் டீமை கடத்திவந்து கொல்வதற்கு அவர் முயல, பதிலுக்கு மதுசூதனனை அடித்து உதைத்து எச்சரித்து அனுப்புகிறார் விக்ரம் பிரபு.. ஆனால் விக்ரம் பிரபு உள்ளிட்ட நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தையும் சும்மா விட மாட்டேன் என சவால் விடுகிறார் மதுசூதனன். அடுத்து வரும் நாட்களில் விக்ரம் பிரபுவின் தந்தை பொன்வண்ணன் கொல்லப்பட, கோபத்துடன் மதுசூதனனை பழிவாங்க கிளம்புகிறார் விக்ரம் பிரபு..

ஆனால் அங்கே மதுசூதனனும் அவரது ஆட்களும் கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகின்றார். அந்த அதிர்ச்சி விலகும் முன்னே விக்ரம் பிரபுவின் நண்பர்களும் காதலி நிக்கி கல்ராணியும் கடத்தப்பட்டார்கள் என செய்தி வருகிறது.

இதன் பின்னணியில் இருப்பது யார் என்கிற உண்மை தெரியவரும்போது விக்ரம் பிரபுவுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் சேர்த்தே அதிர்ச்சி.. யார் அந்த கொலையாளி, விக்ரம் பிரபு நண்பர்களையும் காதலியையும் கொலையாளியிடமிருந்து மீட்டாரா என்பது க்ளைமாக்ஸ்.

தீயணைப்பு வீரருக்கான துடிப்பும் வேகமுமாக செயல்படுகிறார் விக்ரம் பிரபு.. தனது நண்பனை காப்பாற்ற அவர் எடுக்கும் ரிஸ்க்கும், அதிலிருந்து ஒவ்வொரு முறை அவரும் நண்பர்களும் தப்பிப்பது விறுவிறுப்பு.. காதலனை தேடிவந்து காதலிக்கும், காதலுக்கு சிக்கல்கள் இல்லாத கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் பண்ணிவிட்டு போகிறார் நிக்கி கல்ராணி.

நண்பர்களாக நடித்துள்ள வருண் உள்ளிட்ட நண்பர்களும் துடிப்பாகவே தங்களது நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்கள்.. அவர்களில் இருவர் எதிர்பாரதவிதமாக மதுசூதனை தூக்கியதும் கதை சூடு பிடிப்பது உண்மை. நல்ல போலீஸ் அதிகாரிகளாக நாகிநீடு, ஆடுகளம் நரேன், விக்ரம் பிரபு அப்பாவாக பாந்தமான கேரக்டரில் பொன்வண்ணன் ஆகியோர் குணச்சித்திர நடிப்பில் மிளிர்கின்றனர்.

மொட்ட ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆமாம் அவருக்கு எதற்காக கபாலி என பெயர் வைத்தார்கள்..? ரவுடி மதுசூதன் வழக்கம்போல மிரட்டல்.. க்ளைமாக்ஸில் சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்திருக்கும் சங்கீதாவின் கேரக்டர் உண்மையிலேயே ஆச்சர்யம் தான். ஆனால் வலுவான க்ளைமாக்ஸ் அவரால் பலவீனப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. ஷான் ரோல்டனின் இசையில் ‘ஆலங்கிளியே’ பாடல் காதுகளுக்குள் ரீங்காரமிடுகிறது. நெருப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ..

அறிமுக இயக்குனர் அசோக் குமார் தீயணைப்பு வீரர்களின் பின்னணியில் கதையை யோசித்திருப்பது வித்தியாசமானது தான்.. ஆனால் அவர்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகளை விட்டு தடம் மாறி, வீரர்களின் பெர்சனல் விஷயங்கள், அதுசார்ந்த பிரச்சனைகள் என திரைக்கதையை மாற்றி பயணிக்க விட்டதில் சற்று ஏமாற்றமே.. இடைவேளைவிட்டு கால்மணி நேரத்துக்குள் க்ளைமாக்ஸ் வந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தியதாலோ என்னவோ, அடுத்தடுத்து நீளும் காட்சிகள் நம்மை ரொம்பவே யோசிக்க வைத்து தெறிக்க விடுகின்றன.. அதை இயக்குனர் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

“நெருப்புடா – நட்புடா’