“டைட்டில் பிரச்சனைக்கு முடிவு கட்டவேண்டும்” – ஞானவேல்ராஜா கோரிக்கை…!

 

பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி, பொங்கலுக்கு ‘கொம்பன்’ படத்தை வெளியிடவில்லை என்றாலும் தங்களது இன்னொரு தயாரிப்பான ‘டார்லிங்’ படத்தை வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்த இருக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். தெலுங்கில் ஹிட்டடித்த ‘பிரேமகதா சித்தரம்’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘டார்லிங்’. தெலுங்கில் இயக்கிய ஷாம் ஆண்டனே தமிழிலும் இயக்கியுள்ளார்.

கதாநாயகனாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகிறார்.  அவருக்கு ஜோடியாக ‘மேகா’ பட ஹீரோயின் சிருஷ்டி நடிக்கிறார்.  ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஆவியாக நடிக்கிறார் மலையாள நடிகை நிக்கி கல்ராணி.. இவர்கள் தவிர கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வாட்ஸ் அப்பில் பாடலை அனுப்பிய நா.முத்துக்குமார் சில சமயம் கேரவனிலும் உட்கார்ந்து பாடலை எழுதி கொடுத்திருக்கிறார்.

“தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டிருக்கிறதே, சின்ன பட்ஜெட் படமாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம்.. ‘அட்டகத்தி’யை நாங்கள் வெளியிட்டபோது  எங்களுக்கு கிடைத்த அதே வெற்றியை இந்தப்படமும் தரும்” என்ற தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்தது ஏன் என கேட்டோம்..

“படத்துக்கு தலைப்பு கிடைப்பதே பெரிய சிரமமாக இருக்கிறது. நல்ல கதை கூட பிடித்து விடலாம். சினிமா எடுக்க கதையே கிடைத்து விடுகிறது .தலைப்பு கிடைப்பதில்லை. எந்த தலைப்பு எடுத்தாலும் யாராவது பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். எதைக் கேட்டாலும் அது 5 வருஷத்துக்கு முன்பே,  6 வருஷத்துக்கு முன்பே தயாரிப்பாளர் சங்கத்திலோ,  தயாரிப்பாளர் கில்டிலோ பதிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.. குறிப்பிட்ட ஆண்டு வரை பதிவு செய்துவிட்டு படமெடுக்கவில்லை என்றால் அதை ரத்து செய்ய வேண்டும்” என தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துவிட்டார் ஞானவேல்ராஜா.