‘நீ எங்கே என் அன்பே’ – விமர்சனம்

இந்தியில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்த ‘கஹானி’யின் ரீமேக் தான் இது. அதை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றி சுவராஸ்யம் கூட்டியிருக்கிறார்கள்.

காணாமல்போன தன் கணவனை தேடி அமெரிக்காவிலிருந்து வரும் நயன்தாரா ஹைதராபாத்தில் சப் இன்ஸ்பெக்டர் வைபவ் துணையுடன் அவரை தேட ஆரம்பிக்கிறார். முதலில் பிடி கிடைக்கவில்லை என்றாலும் போகப்போக நயன்தாராவுக்கு உதவி செய்யவரும் ஆட்கள் வருகிறார்கள். வந்த வேகத்திலெயே விண்ணுலகம் அனுப்பப்படுகிறார்கள்.

இடையில் நுழையும் க்ரைம் பிராஞ்ச் அதிகாரியான பசுபதி, குண்டுவெடிப்பில் 40பேர் சாகக் காரணமான ஒரு தீவிரவாதிதான் நயன்தாராவின் கணவன் என குண்டை தூக்கிப்போடுகிறார். காணாமல்போன தன் கணவர் வேறு, அவர்கள் தேடும் தீவிரவாதி வேறு என வைபவ் துணையுடன் நிருபிக்க போராடுகிறார் நயன்தாரா. அவர் உண்மையை நிருபித்தாரா.. கணவனை மீட்டாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தின் ஹீரோ, ஹீரோயின் எல்லாம் நயன்தாராதான்.. காட்சிக்கு காட்சி நயன்தாராவே அழகான ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார். கணவனுக்கு என்ன ஆச்சோ என பதறி அழுவதும், தன்னை விசாரிக்கும் பசுபதியை பதிலுக்கு துடிப்புடன் எதிர்ப்பதும், க்ளைமாக்ஸில் புதுமைப்பெண்ணாக மாறுவதும் என எல்லா இடங்களிலும் ஃபோர், சிக்ஸராக அடித்திருக்கிறார்.

வைபவ்.. இந்தப்படம் தான் வைபவின் ஆர்ப்பாட்டம் இல்லாத பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் முதல் படம் என்றுகூட சொல்லலாம். இளம் போலீஸ் ஆஃபீஸராக செம ஃபிட். க்ரைம் பிராஞ்ச் அதிகாரியாக வரும் பசுபதி மட்டும் என்ன சளைத்தவரா..? மிரட்டல் பார்வையும் அதட்டல் பேச்சும் என சரியான ஆந்திரா காரம்.

நயன்தாராவை அக்கா உரிமை கொண்டாடும் பையன், வளவளவென பேசும் லாட்ஜ் மேனேஜர், கொரியர் சர்வீஸ் போல வீடுதேடிவந்து கொல்லும் சேட்வாலா, கணவனை கண்டுபிடித்து தர நயன்தாராவையே கூலியாக கேட்கும் உயர் அதிகாரி என அனைவரும் கதையோட்டத்திற்கு ஏற்ற சரியான தேர்வு. அவ்வப்போது வந்து க்ளைமாக்ஸில் திருப்புமுனை ஏற்படுத்தும் நயன்தாரா கணவராக நடித்திருக்கும் ராணேவும் ஓகே.

மரகதமணிக்கு பின்னணி இசையில் மட்டுமே சரியான வேலை.. ஹைதராபாத்தின் நெரிசலான சந்துகளில் புகுந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது விஜய் சி.குமாரின் ஒளிப்பதிவு.

இந்தியில் இருந்து வாங்கிய கதைதான் என்றாலும் அதை தமிழுக்கும் தெலுங்கிற்கும் ஏற்ற மாதிரி திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் பிரபல தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத். அதற்கேற்ற மாதிரி படம் தொடங்கிய நான்கு நிமிடங்களில் கதைக்குள் நுழைந்து கதையைவிட்டு தடம் மாறி செல்லாமல் சேகர் கம்முலாவின் டைரக்‌ஷனில் தொய்வில்லாமல் பயணிக்கிறது கதை.

வெளிநாட்டு டூயட்டுகளோ, க்ளைமாக்ஸ் குத்துப்பாட்டோ, காதை கிழிக்கும் பஞ்ச் டயலாக்குகளோ, நெஞ்சை ரணமாக்கும் காதல் வசனங்களோ எதுவும் இல்லாமல் ஒரு படம் கொடுத்ததற்காகவே இயக்குனர் சேகர் கம்முலாவின் டீமுக்கு ஒரு சபாஷ் போடலாம்.