மம்முட்டியுடன் மூன்றாவது முறையாக ஜோடிசேரும் நயன்தாரா…!

 

கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி இடத்தை பிடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு என அப்படியே ரூட்டை மாற்றி டாப் கியரில் பாலிவுட் பக்கம் தாவி விடுகின்றனர். அதன்பின் அதிக சம்பளம் தருவதாக இருந்தாலும்கூட தமிழ் சினிமா பக்கமே தலைகாட்ட யோசிக்கும் இவர்கள், அளவான சம்பளம் தரும்மலையாள சினிமாவில் நடிக்கவா ஆர்வம் காட்டப்போகிறார்கள்.

தாய்மொழியாக இருந்தாலும் சம்பளம் குறைவு என்பதால் கால்ஷீட்டை காரணம் காட்டியே மலையாளப் படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார்கள். இதற்கு நம் கண்முன்னே நடமாடும் உதாரணம் தான் அசின்.

நயன்தாராவை இந்த லிஸ்டில் சேர்க்காததற்கு காரணம் அவர் மலையாளத்தில் தொடர்ந்து நடிக்காவிட்டாலும்கூட தன்னை வளர்த்துவிட்ட தமிழையும் தெலுங்கையும் ஒருபோதும் மறக்கவில்லை.. இந்திப்பக்கம் போகவும் இல்லை. அவரது அந்த சுபாவம் தான் இப்போது மலையாளத்தில் ஒரு படத்திலும் நடிக்க அவரை சம்மதிக்க வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல.. அவரை அழைத்திருப்பவர் ஏற்கனவே ‘பாடிகார்டு’ மூலம் நயன்தாராவுக்கு வெற்றியை தந்த இயக்குனர் சித்திக்.. ஜோடியாக நடிக்கப்போவதோ மெகாஸ்டார் மம்முட்டியுடன்.. அறிமுகமான காலகட்டத்தில் மம்முட்டியுடன் ‘தஸ்கரவீரன்’, ‘ராப்பகல்’ என இரண்டு படங்களில் நடித்த நயன், இப்போது மூன்றாவது முறையாக மெகாஸ்டாருடன் ஜோடிசேர்கிறார். அந்தவகையில் 2௦1௦க்குப்பிறகு நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளத்தில் நுழைகிறார் நயன்தாரா.