நயன்தாராவை முன்மாதிரியாக பின்பற்றும் ஹர்ஷிகா..!

இருபது வருடங்களுக்கு முன்பு என்றால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் புதிய ஹீரோயின்கள் யாரிடம் கேட்டாலும், நான் ரேவதிபோல ஆகவேண்டும், ராதிகா போல ஆகவேண்டும் என சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதற்கடுத்து வந்த தலைமுறை நடிகைகள் ஜோதிகா போல ஆகவேண்டும் என்றனர்.. இன்னும் சில புதிய கதாநாயகிகள் ஜோதிகாவுக்கு அடுத்ததாக நயன்தாரா போல வரவேண்டும் என கூறுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்..

அதனால் அறிமுக நாயகியாக தமிழில் களம் இறங்கியுள்ள ஹர்ஷிகா பூனச்சாவும் தமிழ்சினிமாவில் நல்ல படங்களில் நடித்து நயன்தாரவைப்போல ஆகவேண்டும் என தனது ஆசையை, விருப்பத்தை தெரிவித்ததில் எந்த தவறும் இல்லை.. ஆமாம் யார் இந்த ஹர்ஷிகா என்றுதானே கேட்கிறீர்கள்..?

கன்னடத்தில் 12 படங்களுக்கு மேல் நடித்த பிரபலமான நடிகை தான் ஹர்ஷிகா பூனச்சா. தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் அண்ணண் மகனான மக்பூல் சல்மான் தமிழில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அல்லவா..? அந்தப்படத்தில் தான் நடிகை ஹர்ஷிகா பூனச்சா நடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் விழாவில் பேசிய ஹர்ஷிகா, “தமிழில் மிக சிறந்த இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. தமிழ் திரைப்படங்களில் நடித்து நல்ல இடத்தை பிடித்து நயன்தாரா போல் பெரிய நடிகையாக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை” என கூறியுள்ளார்.

மலையாளத்தில் மிகவும் பிரபலமான நிறுவனமான ‘மரிகர் ஆர்ட்ஸ்’ நிறுவனம் இந்தப்படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழில் முதன் முறையாக அடியெடுத்து வைக்கிறது. அறிமுக இயக்குநரான ஹாஷிம் மரிகர் இந்தப்படத்தை இயக்குகிறார்.