நகுல் குடும்பத்தில் கலகம் ஏற்படுத்தும் பிரேம்ஜி..!

சென்னையில் இருந்து மதுரைக்கு கபடி விளையாடச்சென்ற விஜய், த்ரிஷாவை காப்பாற்றிய ‘கில்லி’யான சம்பவத்தை மனதில் ஒருமுறை ரீவைண்ட் செய்துகொள்ளுங்கள்.. இப்போது காப்பாற்றுவது நகுலின் முறை. கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமன் மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் நகுல், சில ரவுடிகளால் துரத்தப்படும் நாயகியை காப்பாற்றப்போய் எதிர்பாராவிதமாக பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்கிறார்.

ஒரு ஆக்சன் படத்திற்கு இந்த ஒன்லைன் இதுபோதாதா..? இதை வைத்து தான் இயக்கியுள்ள ‘நாரதன்’ படத்தில் புகுந்து விளையாடி இருக்கிறாராம் இயக்குனர் நாகா வெங்கடேஷ். நகுல் ஹீரோவாக இருந்தாலும் இதில் நாரதன் என்ற கதாபாத்திரமாக அறிமுகமாகும் பிரேம்ஜிக்குத்தான் டைட்டில் ரோல்.

விஷ்ணுவின் தாய்மாமன் குடும்பத்துக்குள் புகுந்து, பல கலகங்களை ஏற்படுத்தும் பிரேம்ஜி, இறுதியில் “நாரதன் கலகம் நன்மையில் முடியும்” என்பது போல, அனைத்து பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்த்து வைக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் ஆக்சன் கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.

இப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல், ஸ்ருதிராமகிருஷ்ணா, நடிக்க, கலகலப்பான பாத்திரங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, பஞ்சு சுப்பு, வையாபுரி, “பவர்ஸ்டார்” சீனிவாசன், பாண்டு, “கும்கி” அஸ்வின் என்ற ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளனர்.

‘சலீம்’ படத்தில் “மஸ்காரா” பாட்டுக்கு நடனமாடிய அஸ்மிதா, மும்பை அழகியுடன் சேர்ந்து ஆடும் ஒரு பாடல், பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதியில், நகுல் ரவுடிகளுடன் மோதும் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சியை, பின்னி மில்லில் பத்து நாட்களாக பரபரப்பான முறையில் படமாக்கியிருக்கிறார்களாம்.