நண்பேன்டா – விமர்சனம்

திருச்சியில் இருக்கும் நண்பன் சந்தானத்தை பார்க்க தஞ்சாவூரில் இருந்து வரும் உதயநிதி, வழக்கம்போல வந்த அன்றே நயன்தாராவை பார்க்கிறார்.. காதலிலும் விழுகிறார். சந்தானம் வேலைபார்க்கும் ஹோட்டலில் சேர்ந்துகொண்டு, அவருடனேயே மேன்ஷனில் தங்கும் உதயநிதிக்கு ஜாக்பாட் அடித்ததுபோல, எதிரில் உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் தான் நயன்தாரா தங்கி இருக்கிறார்.

சில பல பில்டப் வேலைகள், குறும்புகள் செய்து நயன்தாராவின் மனதில் இடம்பிடிக்கும் உதயநிதி, ஒருகட்டத்தில் நயன்தாரா ஜெயிலுக்கு போய் வந்தவர் என்பதைக்கேட்டு ஷாக் ஆனாலும், அதற்கான காரணத்தை கேட்டு சிரியோ சிரியென்று சிரிக்கிறார். அந்த சிரிப்புதான் அவரது காதலுக்கும் வேட்டு வைக்கிறது. நயன்தாராவின் மனதை கரைக்க சந்தானத்துடன் சேர்ந்து, மீண்டும் உதயநிதி நடத்தும் அறவழி போராட்டங்கள் தான் மீதிக்கதை.

தொடர்ந்து காமெடி பண்ணுவது என முடிவு செய்துவிட்டார்கள். அதனால் கதையைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இறங்கி அடித்திருக்கிறார்கள். இந்தமுறை தலைப்பே ‘நண்பேன்டா’ என வைத்துவிட்டதால் உதயநிதியும் சந்தானமும் கூட்டணி சேர்ந்திருப்பதுடன் கருணாகரனையும் காலத்திற்கு இழுத்து வந்திருக்கிறார்கள்.

காதல் செய்ய படும் சிரமங்கள், நண்பனை அவஸ்தைக்குள்ளாக்குவது, நண்பனால் சிக்கலில் மாட்டுவது, கோபித்து முகம் திருப்பும் காதலியை தாஜா பண்ணுவது என இதுவரை உதயநிதிக்கென வழக்கமாக உள்ள வேலைகள் இதிலும் வெவ்வேறு வடிவத்தில்.. ஸோ.. அவர் சப்ஜெக்ட் என்பதால் ஈசியாக பாஸ் ஆகிவிடுகிறார். ஆனால் அடுத்த படத்தில் புது ரூட் புடிங்க பாஸ்..

சந்தானத்தின் கெட்டப்பே சிரிப்பை வரவழைக்கிறது. இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை காமெடி பிட்டுகளை வெடிக்கவிட்டு கலகலப்பு குறையாமல் பார்த்துக்கொண்டாலும், இவர்கள் இருவரின் காம்பினேஷனில் மூன்றாவது படம் என்பதால் ஏற்கனவே பார்த்த சில காட்சிகளின் பாதிப்பு இதிலும் இருக்கத்தான் செய்கிறது.

வெட்கப்படுவது, கோபப்படுவது இது இரண்டையும் சரிவிகிதத்தில் மாற்றி மாற்றி காட்டுவது தான் நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி. தான் ஜெயிலுக்கு போய் வந்ததை உதயநிதி அனைவரிடமும் தண்டோரா போடும் இடத்தில் மட்டும் செண்டிமெண்ட் சேலை அணிகிறார் நயன்தாரா. ஹீரோயினாக இல்லாமல், சந்தானத்தின் காதலியாக பார்க்கும்போது இப்போது தனி அழகுடன் தெரிகிறார் ஷெரின்.

நானும் இருக்கிறேன் என படத்தின் ஆரம்ப காட்சியிலேயே என்ட்ரியை மட்டும் போடும் கருணாகரன், கடைசி அரைமணி போலீசாக ரவுண்டு கட்டுகிறார். ஆனால் சந்தானத்தின் முன் அவரது பவர் சற்று குறைவாகவே இருக்கிறது.. நான் கடவுள் ராஜேந்திரனை சீரியஸான வில்லனாக காட்டி, அவரது சமீபத்திய காமெடிப்படங்கள் ஹிட்டானதை மனதில் வைத்து இறுதியில் அவருக்கும் காமெடி சாயம் பூச முயற்சித்திருக்கிறார்கள்.

வழக்கமாக உதயநிதியின் முந்தைய இரண்டு படங்களின் பாடல்களை முணுமுணுக்க வைத்த ஹாரிஸ் ஜெயராஜின் இசை இந்தமுறை அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தவில்லை என்றே தோன்றுகிறது. இடைவேளைக்குப்பின், குறிப்பாக கடைசி அரைமணி நேரம் வரும் காட்சிகள் படத்தின் வேகத்தை குறைப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். உதயநிதி இப்படி இருந்தால் தான் ரசிப்பார்கள், என ஏற்கனவே போட்டு வைத்த அவுட்லைனுக்குள்ளேயே சேப்டியாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெகதீஷ்.

நண்பேன்டா – சிரிப்புக்கு உத்தரவாதம் தர்றாண்டா..!