நம்ம வீட்டுப்பிள்ளை – விமர்சனம்

இயக்குநர் இமயம் பாரதிராஜா வைத்தியராக நடித்துள்ளார். இவரது பேரனாக நாயகன் சிவகார்த்தியகேயன். சிவகார்த்திகேயன் சிறு வயதாக இருக்கும்போதே அப்பா சமுத்திரக்கனி இறந்து விடுகிறார். பாரதிராஜாவின் மற்ற மகன்கள் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினரிடமிருந்து விலகி இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, தன்னுடைய தங்கையான ஜஸ்வர்யா ராஜேஷை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து தன்னை ஒதுக்கி வைத்த சொந்த பந்தங்களுக்கு முன்னால் தலைநிமிர்ந்து நிற்க நினைக்கிறார் சிவகார்த்திகேயன்.

தனது தங்கை ஜஸ்வர்யா ராஜேசுக்காக ஊர் முழுவதும் மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடர்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் யாருமே ஜஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்ய முன்வரவில்லை.

இந்நிலையில் நட்டி ஜஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்ய முன்வருகிறார். ஆனால் ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கும் நட்டிக்கும் ஒரு முன்பகை உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து கொண்டு பழி வாங்க தொடங்குகிறார் நட்டி. இதிலிருந்து தனது தங்கையை எப்படி காப்பாற்றுகிறார்? இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறார்? சிவகார்த்திகேயனுக்கும் ஜஸ்வர்யா ராஜேசுக்கும் இடையேயனா அண்ணன் தங்கை பாசம் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.

சிவகார்த்திகேயன் வேட்டி சட்டையில் கிராமத்து இளைஞனாக மனதை அள்ளுகிறார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையுமே கண் கலங்க வைக்கிறார்.

முன்னணி நடிகையாக உள்ள ஜஸ்வர்யா ராஜேஷ், நாயகன் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக தைரியமாக நடித்துள்ளார். அவரது நடிப்பும் பிரமாதமாக உள்ளது.

நாயகி அனு இம்மானுவேல் இயக்குநர் சொல்லியபடி கச்சிகதமாக வந்து போகிறார்.

இயக்குநர் பாரதிராஜா தனது அனுபவத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளது நிதர்சனமான உண்மை.வேலாராமமூர்த்தி, சமுத்திரகனி, ஆர்.கே.சுரேஷ், அர்ச்சனா, சூரி, சுப்பு, நட்டி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் பாண்டிராஜ் அண்ணன்-தங்கை பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார். தாத்தா – பேரன் பாசம், அம்மா – மகன் பாசம், சித்தப்பா பாசம் என குடும்பப்பாங்கான படத்தை தந்துள்ளார்.

இமானின் கிராமிய இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஆக மொத்தம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வந்துள்ளது இந்த நம்ம வீட்டுப்பிள்ளை.