நம்பியார் – விமர்சனம்

Nambiar-movie

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து பல கட்ட சோதனைகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் படம் தான் நம்பியார். ஸ்ரீகாந்த் நடிப்போடு மட்டுமல்லாமல் இந்தப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக்கி பார்க்கவேண்டும் என்கிற தனது தந்தை ஜெயபிரகாஷின் கனவை நிறைவேற்ற ஓரளவு மெனக்கெட்டு படிக்கிறார் ஸ்ரீகாந்த். ஆனால் அவருக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அவரை அவ்வப்போது அலைக்கழிக்கின்றன. அதற்கு நம்பியார் என்கிற பெயர் வைத்து சந்தானம் என்கிற உருவத்தையும் கொடுக்கிறார் ஸ்ரீகாந்த்..

ஆனால் ஸ்ரீகாந்தின் கெட்ட மனசாட்சியாக இருந்து அவருக்கு ஒவ்வொரு முறையும் தவறான ஐடியாக்களை கொடுத்து அனைவரிடமும் அவரை கெட்ட பெயர் வாங்க வைக்கிறார் நம்பியாரான சந்தானம்.. இதனால் ஸ்ரீகாந்த் தன்னை தேடிவந்த காதலி சுனைனாவை உதாசீனப்படுத்துகிறார்.. தாய், தந்தை, அண்ணன்-அண்ணி அனைவரையும் அடித்து துவைக்கிறார்.. போலீஸ் அதிகாரி ஜான்விஜய்யிடம் வம்பிழுத்து என்கவுண்டர் பண்ணப்படும் சூழல் வரைக்கும் தள்ளப்படுகிறார்.

ஆனால் இது அனைத்துக்கும் காரணம் தனக்குள் இருக்கும் நம்பியார் தான் என முடிவுசெய்து, அவரை எதிர்த்து வெற்றிகொள்ளும் எம்.ஜி.ஆராக தன்னை பாஸிடிவ் எண்ணங்களால் மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார் ஸ்ரீகாந்த்.. ஆனால் இதையெல்லாம் ஸ்ரீகாந்தால் செய்ய முடிந்ததா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.

மேலே உள்ள கதைச்சுருக்கத்தை படித்துவிட்டு சீரியசான கதையோ, அல்லது மனோதத்துவ கதையோ என நினைத்துவிட வேண்டாம். இத்தனை பிரச்சனைகளையும் காமெடி முலாம் பூசி நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கணேசா.

நம்பியாருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் கேரக்டரில் ஸ்ரீகாந்த் சரியாக பொருந்துகிறார். சுனைனாவை காதலிப்பதற்காக போடும் ட்ராமா, சந்தனத்துடன் அடிக்கும் லூட்டி, போலீசுடன் கலாட்டா என நிறைய விஷயங்களை ரசித்து செய்திருக்கிறார். குடித்துவிட்டு வந்து அப்பா, அண்ணன் என சகட்டுமேனிக்கு அடிப்பது காமெடிதான் என்றாலும் சற்று ஓவர்தான்.

ஸ்ரீகாந்துக்கு ஏற்ற சரியான ஜோடியாக சுனைனா. ஸ்ரீகாந்தின் காதலை உண்மை என ஏற்கவும் முடியாமல், பொய் என தள்ளவும் முடியாமல் அவர் தவிக்கும் காட்சிகளில் செமையாக ஸ்கோர் பண்ணுகிறார். காமெடி ஏரியாவுக்கு சந்தானம் இருந்தாலும் அவரது பேச்சு சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு போட்டுவிட்டார்கள்.. ஆம்.. ஸ்ரீகாந்தின் கெட்ட மனசாட்சி என்பதால் படம் முழுக்க ஸ்ரீகாந்துடன் மட்டும் தான் அவரது உரையாடல் என்பது ஒரு கட்டத்திற்கு மேல் கொஞ்சம் டல்லடிப்பது உண்மை. கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாம்..

விஜய் ஆண்டனியின் இசையில் இரண்டு பாடல்கள் ஒகே.. சற்றே விஞ்ஞானப்பூர்வமான ஒரு முயற்சியில் திரைக்கதையை நகர்த்தியிருக்கும் இயக்குனர் கணேசா, அதை எளிய மக்களுக்கும் எளிதில் புரியும்படியாக காட்சிகளை அமைத்திருந்தால். நம்பியார் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருப்பார்.