நமது – விமர்சனம்

Namadhu Tamil Movie Review
மோகன்லால் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே நேரத்தில் வெளியாகியுள்ள படம் தான் ‘நமது’. இருந்தாலும் இந்தப்படம் தெலுங்கிற்காகவே எடுக்கப்பட்டு மற்ற இரண்டு மொழிகளில் அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது.

டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றின் ஸ்டோர் கீப்பர் மோகன்லால்.. தான் அடுத்த மேனேஜராக பதவி உயர்வு பெறுவதற்கு தடையாக இருக்கும் இன்னொரு நபரை, முதலாளி முன் வராமல் இருப்பதற்காக ஒரு ரவுடியை ஏற்பாடு செய்து சில மணி நேரங்களுக்கு கடத்த வைக்கிறார். எதிர்பார்த்தபடியே பதவி உயர்வும் கிடைக்கிறது.. ஆனால் இன்னொரு நபரை கடத்திய ரவுடியோ ஒன்றரை லட்சம் பணம் கொடுத்தால் தான் அவரை விடுவேன் என மிரட்டுகிறான். வேறு வழியின்றி மோகன்லால் பணம் தயார்செய்துகொண்டு போக, எதிர்பாராதவிதமாக அந்த ரவுடி ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிடுகிறான். கடத்தப்பட்ட நபரின் கதி என்ன ஆனது..?

சராசரி வர்க்கத்து குடும்பத்தலைவி கௌதமி. கணவன், குழந்தைகள் என குடும்பத்திற்காகவே தனது ஆசாபாசங்களை குறைத்து வாழும் கௌதமிக்கு அவரது முன்னாள் பேராசிரியர் மூலமாக சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரது குடும்பத்தினரும் அவரை சிங்கப்பூர் செல்லுமாறு கூறுகின்றனர். தான் பிரிந்து செல்வது அவர்களை பாதிக்கவில்லையே என புலம்பியபடி ஏர்போர்ட் கிளம்புகிறார் கௌதமி. திட்டமிட்டபடி சிங்கப்பூர் போனாரா.?

படிப்பில் படு கெட்டியான கல்லூரி மாணவன் அபிராம், பணக்கார வீட்டு பெண்ணான ஹனிஷாவின் மீது நட்பு ஏற்பட்டு, அதை காதலாக்க முயற்சி செய்து அதில் தோல்வியடைகிறார். தற்கொலை எண்ணம் மேலிட, ஆற்றில் விழுந்து தற்கொலை செய்ய செல்கிறார். அவரால் அதை செயல்படுத்த முடிந்ததா..?

பள்ளி மாணவி ரைனா ராவ்.. ஏழைக்குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் அவள், தெருவோர குடிசையில் இருக்கும் நான்கு வயது சிறுவனுடன் நட்பாகிறாள்.. அவனை பள்ளிக்கெல்லாம் அழைத்து செல்கிறாள். திடீரென ஒருநாள் அவன் காணமல் போக அவனை கண்டுபிடிக்க பலவிதமாக முயற்சிக்கிறாள்.. அவளால் அந்த சிறுவனை கண்டுபிடித்து மீட்க முடிந்ததா..?

மேலே சொன்ன நான்கு பேரின் கதைகளும் மாறி மாறி சம்பவங்களாக நடைபெற்று இறுதியில் ஒரே புள்ளியில் எப்படி இணைகிறது என்பதுதான் மொத்தக்கதையும்.

சுயநலத்துக்காக குறுக்கு வழியில் செயல்பட்டு அதன்மூலம் தேவையில்லாத மன உளைச்சலில் அல்லல்படும் ‘சாய்ராம்’ கேரக்டரில் மோகன்லால் செம பிட்.. ரவுடியிடம் கெஞ்சும் காட்சிகளில் சூப்பர்ஸ்டார் என்கிற பிம்பம் மறைந்து, சராசரி மனிதனாகவே நம் கண்களுக்கு தெரிகிறார். அவரது நடிப்பை உணர்வுப்பூர்வமாக ரசிப்பவர்களுக்கு அவரது மலையாள வாடையடிக்கும் தமிழ் பெரியகுற்றமாக தோன்றாது.

ஆசைகளை மனத்தில் அடக்கிக்கொண்டு குடும்பத்துக்காகவே வாழும் கௌதமி, தனது தோழியான ஊர்வசியிடம் புலம்பும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தனக்கு பிடித்த பொருளை தேர்ந்தெடுப்பதற்காக அவர் அலையும் காட்சி சராசரி இல்லத்தரசிகளின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது.

காதலால் படிப்பு, நட்பு என சகலத்தையும் ஒதுக்கி நட்பையும் காதலையும் போட்டு குழப்பிக்கொள்ளும் கல்லூரி மாணவன் கேரக்டரில் அபிராம் கச்சிதமாக பொருந்துகிறார். நான்கு வயது பையனுடன் மழலை நட்பு கொள்ளும் பள்ளிச்சிறுமி ரைனா ராவ் நம் மனதில் நிறைகிறார்.. காணாமல் போன அந்த சிறுவனை கண்டுபிடிக்க அவர் படு பரிதவிப்பு நம் கண்களில் நீரை வரவழைக்கிறது.

கௌதமிக்கு உற்ற தோழியாக நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஊர்வசி. நூறு ரூபாய் டிஸ்கவுண்டில் கிடைக்கும் பொருளை வாங்க, இருநூறு ரூபாய் செலவு பண்ணும் பெண்மணியாக ஊர்வசியின் நடிப்பில் நகைச்சுவை எப்போதும் இழையோடுகிறது.. கல்லூரி நிறுவனராக வரும் நாசர் கண்ணியமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் கதையோட்டத்துடன் இயல்பாக பொருந்துகிறார்கள்.. ஆனால் தெலுங்கிற்காக எடுக்கப்பட்டு தமிழில் மாற்றப்பட்டுள்ளது மட்டும் காட்சிக்கு காட்சி நன்றாகவே தெரிவது பலவீனம் தான். சிறுவனை கண்டுபிடிக்க சிறுமி எடுக்கும் முயற்சிகள் லாஜிக்கை மீறியதாக இருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.

கிளைமாக்ஸில் இந்த நான்கு பேரையும் ஒரு புள்ளியில் கொண்டு வருவதற்காக ஒவ்வொருவரையும் தனித்தனி நபர் போல காட்டியிருக்கும் யுக்தி நன்றாகத்தான் இருக்கிறது. எது உண்மையான சந்தோசம் என்பதற்கான விடையை அழுத்தமாக சொன்னதற்காக படத்தின் இயக்குனர் சந்திரசேகர் எலேட்டியை தாராளமாக பாராட்டலாம்.