நளனும் நந்தினியும் – விமர்சனம்

நளனுக்கு கட்டிக்கொள்ளும் முறைப்பெண் தான் நந்தினி. சிறுவயதில் இருந்து அப்படி சொல்லித்தான் வளர்க்கிறார் நளனின் அம்மா ரேணுகா.. ஆனால் பெரியவர்களாகும்போது தனது அண்ணன் ஜெயபிரகாஷிடம் நந்தினியின் அப்பா மரியாதை குறைவாக நடந்துகொண்டதால் அவரிடம் சண்டைக்கு போகிறார் ரேணுகா.

இதனால் தங்கள் காதலை இவர்கள் சேர்த்து வைக்கமாட்டார்கள் என்று எண்ணி நளனும் நந்தினியும் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டு திரும்பி வர இருவரையும் ஏற்றுக்கொள்ளாமல் இரு வீட்டாரும் விரட்டுகிறார்கள். இருவரும் சென்னைக்கு வந்து சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்த, நந்தினி ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். நளனுக்கு இயக்குனராக வேண்டும் என்பது கனவு. நளனின் கனவு நிறைவேறியதா.? காதலர்களை பெற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பது க்ளைமாக்ஸ்..

நளனாக புதுமுகம் மைக்கேல். படித்துவிட்டு கிராமத்தை சுற்றும் கேரக்டருக்கு சரியான தேர்வுதான்.. நந்தினியாக ‘அட்டகத்தி’ நந்திதா. இயல்பான நடிப்பு.. இருவரின் காதலும் மிகையில்லாமல் தெரிவதும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதில் ஏற்படும் அவலங்களையும் கண் முன்னே நிறுத்துகிறார்கள்.

குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனைக்கு பார்க்கவரும் சூரி ஐம்பது ரூபாய் மட்டும் தந்ததற்கு நளனிடம் விளக்கம் சொல்லும்போது கண்கலங்க வைத்து யதார்த்த உறவை பிரதிபலிக்கிறார். இயக்குனராக வரும் வெங்கட்பிரபு கலகலப்பூட்டுகிறார்.
ஜெயபிரகாஷ், ரேணுகா, சௌந்திரராஜா, சாம்ஸ், மதுமிதா என பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஜெயபிரகாஷ் ரேணுகாவின் பாசத்தில் அவ்வளவாக அழுத்தம் இல்லாது மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. அதேபோல அனாதையாக வந்து ஜெயபிரகாஷிடம் தங்கையாக அடைக்கலம் பெற்ற ரேணுகா அண்ணனின் கௌரவத்திற்காக தன் மகனையும் அவளது மனைவியையும் ஒதுக்கி வைப்பதும் நியாயமானதாக இல்லை. காதலித்து திருமணம் செய்தபின் தனது காதலனிடம் ஒரு பெண்

அவனது இன்னொரு முகத்தை எப்படி பார்க்கிறாள் என்பதை சாடியடியாய் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் வெங்கடேஷ். மொத்தத்தில் தன்னம்பிக்கையுடன் முன்னேற நினைப்பவர்கள் விடாமுயற்சியுடன் இருந்தால் தங்கள் லட்சியத்தை அடையலாம் என்பதை இரண்டு மணிநேர படமாக ஆக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ்.