‘மெட்ராஸ்’ படத்துக்கு ஸ்ரீ நாகிரெட்டி நினைவு விருது..!

கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றியைப்பற்றி திரும்பவும் விவரிக்க தேவையில்லை. வடசென்னை மக்களின் அரசியலை எந்தவிதமான மேல்பூச்சும் இல்லாமல் புதிய கோணத்தில் சொல்லியிருந்த இயக்குனர் ரஞ்சித், கூடவே அதில் ஒரு அழகான நட்பையும் பதிவு செய்திருந்தார்.

ரஜினி உட்பட பலரின் பாரட்டுக்களை பெற்ற இந்தப்படத்திற்கு தற்போது மேலும் ஒரு கெளரவம் கிடைத்துள்ளது. விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் இந்த விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சென்ற வருடத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருது ‘மெட்ராஸ்’ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான இந்தப்படத்திற்கான இந்த விருதை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இதில் துணை நாயகனாக நடித்த கலையரசன் ஆகியோர் இணைந்து பெற்றுகொண்டனர்.