நாடோடிகள் 2 – விமர்சனம்

12 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் இந்த படத்தின் மூலம் முந்தைய ரசிகர்களை அதே அளவிற்கு திருப்தி படுத்தியிருக்கிறாரா இயக்குனர் சமுத்திரக்கனி..? பார்க்கலாம்.

மதுரை அருகிலுள்ள ஒரு கிராமத்தில் மக்களுக்கு எதிரான திட்டங்களை தங்கள் பகுதியில் அமல்படுத்த விடாமல் போராடுகிறது சசிகுமார், அஞ்சலி, பரணி கூட்டணி. அதுமட்டுமல்ல ஜாதியை எதிர்க்கும் மனோபாவம் கொண்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார் சசிகுமார். இவரது போராட்ட குணத்தினாலேயே இவருக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தள்ளிப்போகிறது. இந்தநிலையில் ஆச்சரியமாக பக்கத்து ஊரில் இருக்கும் அதுல்யா ரவியுடன் சசிகுமாருக்கு திருமணம் நடக்கிறது.

ஆனால் முதலிரவிலேயே அதுல்யா ரவி தாழ்த்தப்பட்ட ஜாதி பையனை விரும்பினார் என்றும் ஆனால் தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி சசிகுமாருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என்று கூறி தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அதிர்ச்சியான சசிகுமார் யாருக்கும் தெரியாமல் காதலர்கள் இருவரையும் ஊரை விட்டு அனுப்பி வைக்கிறார். இதனால் அகல்யாவின் குடும்பத்தினரும் ஊர்க்காரர்களும் சசிகுமாருக்கு எதிராக திரும்ப இருதரப்புக்கும் மிகப்பெரிய கலகம் வெடிக்கிறது.

இந்த நிலையில் அதுல்யா ரவி இருக்கும் இடம் தெரிந்து அவரை தந்திரமாக பேசி ஊருக்கு அழைத்து வருகின்றனர் அவரது உறவினர்கள். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக சசிகுமார் எச்சரித்தும் நம்ப மறுக்கின்றனர் காதலர்கள். இறுதியில் காதலர்களின் நிலை என்ன ஆனது, இவ்வளவு போராடி அவர்களது காதலை சேர்த்து வைத்த சசிகுமாரால் மீண்டும் அவர்களது காதலுக்கு உயிர் கொடுக்க முடிந்ததா ? சசிகுமாருக்கு என ஒரு வாழ்க்கை அமைந்ததா என்பது மீதிக்கதை

சாதிக்கொடுமை, ஆணவக்கொலை, சாதி திமிர் என எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே படத்திலேயே ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. அதற்கு சசிகுமாரை சரியான ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறார். அவரும் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார் மக்களுக்காக போராடும் போராளியாக ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் நடத்தும் போராட்டம் கண்டு நமக்கே சுறுசுறுப்பு ஏறுகிறது.

அவருடன் கூடவே போராடும் தோழராக அஞ்சலி.. புதிய கதாபாத்திரத்தில் சிறப்பிக்கிறார்.. நாடோடிகள் முதல் பாகத்தில் பார்த்த பரணியின் பயணம் அதே குரூப்பில் இப்போதும் தொடர்கிறது. நல்ல இயக்குனர்களின் கைகளில் சிக்கினால் மட்டும் இவர் பளிச்சிடுகிறார்.

சாதி மீறி காதல் செய்து சங்கடத்தில் சிக்கிக்கொள்ளும் நாயகியாக அதுல்யா ரவி. கொடுத்த வேலையை செய்திருக்கிறார். காதலர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பப்ளிசிட்டி விரும்பியாக நமோ நாராயணன் வரும் காட்சிகள் எல்லாம் முதல் பாகத்தைப் போலவே இதிலும் செம சிரிப்பை வரவழைக்கின்றன இன்னொரு பக்கம் ஞானசம்பந்தன், துளசி, ஈ.ராம்தாஸ், ஸ்ரீரஞ்சனி, பிச்சைக்காரன் மூர்த்தி என பக்கபலமாக துணை கதாபாத்திரங்களும் படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். அமைதியாக வந்து திடீரென அதிரடி கதாபாத்திரத்தில் அஞ்சலியின் அப்பா ஆச்சரியப்படுத்துகிறார் திருநங்கை கதாபாத்திரம் ஒன்று போலீஸ் அதிகாரியாக உயர்வதை அழகாக சித்தரித்து இருக்கிறார்கள்.

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சாதித்திமிர் ஒழிய வேண்டும்.. அதற்கு ஒவ்வொரு சாதியிலும் சாதியை விரும்பாத இளைஞர்கள் தனியாக ஒன்றிணைய வேண்டும் என்கிற கருத்தை இந்த படம் முழுக்க வலியுறுத்துகிறார் சமுத்திரகனி. முதல் பாகத்தை போல இந்தப்படத்தையும் ரசிக்கும்படியாகவே விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். முதல் பாகத்தில் ரசிகர்களால் விரும்பி சிலாகிக்கப்பட்ட சில கிளிஷே காட்சிகளையும் இதில் கதைக்கு ஏற்றவாறு அழகாக தனது பாணியில் கோர்த்திருக்கிறார் சமுத்திரக்கனி. அனைவரும் ஒருமுறை இந்த படத்தை பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.. சொல்லப்போனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமும் கூட.