நானும் சிங்கிள் தான் – விமர்சனம்

நடிகர்கள் : அட்டகத்தி தினேஷ், தீப்தி சதி, மனோபாலா, ரமா மற்றும் பலர்

டைரக்சன் : கோபி

டாட்டூ வரையும் தொழில் செய்து வரும் அடக்கத்தி தினேஷுக்கு தீப்தியை பார்த்த அடுத்த கணமே காதல். ஆனால் பெண்ணியவாதியான தீப்திக்கோ திருமணம் என்றாலே வேப்பங்காய். ஆனாலும் தன்னை காப்பாற்றிய தினேஷுடன் நட்பாக பழகுகிறார். ஒருகட்டத்தில் நட்புக்கோட்டை தாண்டி எதிர்பாராமல் தீப்திக்கு முத்தம் கொடுத்து விடுகிறார் தினேஷ். கோபமான தீப்தி சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாடு போய்விடுகிறார்.

பிறகென்ன ஹீரோ வெளிநாடு போக முடிவு செய்வார், தூண்டிவிடும் நண்பர்களும் உடன் கிளம்புவார்கள். அங்கே வெளிநாட்டில் மொட்ட ராஜேந்திரன் போல காதலுக்கு மரியாதையை செய்யும் நபர் ஒரு இவர்களுக்கு உதவிசெய்ய முன் வருவார்.. அப்படியே காதலும் கைகூடும்.. அதுதானே..?

அதுதான். எல்லாம் நடக்கிறது.. ஆனால் காதல் மட்டும் கைகூடவில்லை. விடாப்பிடியாக தினேஷ் துரத்த விட்டேத்தியாக இருக்கிறார் தீப்தி.. மீண்டும் தமிழ்நாட்டு பயணம். இனி யாரும் தன்னை காதலிக்கிறேன் என சொல்லிக்கொண்டு பின்னால் வரக்கூடாது என தீப்தி ஒரு அதிரடி முடிவெடுக்கிறார். அந்த முடிவு தினேஷையே ஆட்டம் காண வைக்கிறது. அப்படி என்ன முடிவெடுத்தார் தீப்தி, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

அப்பாவி, அடப்பாவி என இரண்டும் கலந்த கலவையான முகத்துடன் படம் முழுக்க வளைய வருகிறார் தினேஷ். சில இடங்களில் அடடே என சொல்லவைக்கிறார். பல இடங்களில் அட போங்கய்யா என அலுப்பை ஏற்படுத்துகிறார். அதற்கு திரைக்கதையும் நண்பர்கள் என்கிற பெயரில் மொக்கை காமெடி பண்ணும் அவரது நண்பர்கள் கூட்டமும் காரணம்.

கதாநாயகியாக மலையாளத்து வரவு தீப்தி சதி.. பெண்ணிய குணம் கொண்ட கதாபாத்திரத்திற்கு அழகாக பொருந்துகிறார். ஆனால் எதற்காக காதலை வெறுக்கிறார் என்பதற்கோ, க்ளைமாக்ஸில் ஏன் அப்படி ஒரு முடிவை எடுக்கிறார் என்பதற்கோ அழுத்தமான காரணம் இல்லை என்பதால், அவர்மீது நமக்கு கோபம் தான் ஏற்படுகிறதே தவிர பரிதாபம் ஏற்படவில்லை.

ஹீரோவின் நண்பர்களில் ஒருவர் கூடவா புத்திசாலியாக இருக்க மாட்டார்கள்.. சரி அப்படியே காமெடியன்களாக இருந்தாலும் அதிலாவது உப்பு சப்பு இருக்கவேண்டாமா..? மொட்ட ராஜேந்திரனும் தன் பங்கிற்கு ஏதோ ஒப்பெற்றுகிறார்

காதலர் தினத்தை குறிவைத்து இதை காதல் படமாக எடுக்க நினைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஆனால் அவருக்கே திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டதோ என்னவோ, படத்தில் ஆங்காங்கே, இல்லையில்லை முக்கால்வாசி இடங்களில் அடல்ட் வசனங்களையும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளையும் கோர்த்து சொதப்பி விட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.