நான் ஆணையிட்டால் ; அரசியலில் இறங்கிய ராணா..!

Naan Aanaiyittal Press Meet-1

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் மூலமும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் நடிகர் ராணா.. அதனால் இவரது படத்திற்கு தமிழிலும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது ராணாவை வைத்து தெலுங்கில் எடுக்கப்படும் படங்கள் கூட தமிழுக்கு ஏற்ற அம்சங்களையும் உள்ளடக்கியவாறு தயாராகின்றன.. அப்படி தெலுங்கில் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ என்கிற பெயரில் உருவாகியுள்ள படம் தான் தமிழில் நான் ஆணையிட்டால் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

கிட்டத்தட்ட நேரடிப்படம் என சொல்லும் அளவுக்கு இந்தப்படத்தில் மயில்சாமி, ஜெகன், ஆர்.எஸ்.சிவாஜி என நம்முடைய காமெடி நட்சத்திரப்பட்டாளமே இதில் நடித்துள்ளது. மேலும் காரைக்குடி பகுதியில் தான் முக்கால்வாசி படத்தையும் படமாக்கியுள்ளனர். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்கியுள்ளார்.. இதில் ராணா பக்கா அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லரில் ராணாவை பார்த்து நான் சி.எம் என்பதை மறந்துவிடாதே என்கிறது முதல்வர் கேரக்டர்.. அதற்கு ராணா ‘நூறு எம்.எல்.ஏக்களை கொண்டுபோய் ஸ்டார் ஹோட்டல்ல அடைச்சு வச்சா சாயந்திரத்துக்குள்ள நானும் சி.எம் தாண்டா” என கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கூத்தை நேரடியாகவே விமர்சிக்கிறார். ஆக படத்தில் நடப்பு அரசியல் அனல் பறக்கும் என்றே தெரிகிறது.

ஆனால் இந்த காட்சிகளையும் வசனங்களையும் கடந்த வருடமே படமக்கிவிட்டாராம் இயக்குனர் தேஜா. தற்போது இந்த நிகழ்வுகள் உண்மையாகவே நடந்திருப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டு அதற்கேற்ற மாதிரி சில காட்சிகளை ரீ சூட் செய்திருக்கிறாராம் தேஜா.. வரும் ஆகஸ்ட்-11ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.