நாய்கள் ஜாக்கிரதை – விமர்சனம்

 

போலீஸ் அதிகாரியான சிபிராஜ், பக்கத்து வீட்டில் ஆதரவின்றி விடப்பட்ட நாய் ஒன்றை எடுத்து வளர்க்கிறார். சிபிராஜால் பாதிக்கப்பட்ட பெண்களை கடத்தும் கும்பல் ஒன்று அவரது மனைவியை கடத்தி, முடிந்தால் மீட்கும்படி அவருக்கு சவால் விடுகிறது.. நாயின் உதவியுடன் தனது மனைவியை எப்படி சிபிராஜ் மீட்கிறார் என்பதுதான் பரபரப்பான க்ளைமாக்ஸ்..

நான்கு வருடங்கள் கழித்து களம் இறங்கினாலும் குழந்தைகளை கவரும் விதமாக நகைச்சுவையான ஒரு த்ரில்லர் கதையுடனும் கூடவே சரிக்கு சமமாக ஒரு நாயுடனும் இறங்கியிருப்பதில் சிபிராஜின் ‘தில்’ தெரிகிறது. பெரும்பாலும் சிபிராஜ் மறைந்து அவரது கதாபாத்திரம் மட்டுமே முன்னிற்பது அவருக்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல, பல காட்சிகளில் அவரது கடின உழைப்பும் நன்றாகவே தெரிகிறது.

சிபிராஜின் மனைவியாக அருந்ததி. பெரும்பாலும் மரப்பெட்டியிலேயே அடைபட்டு கிடப்பதுதான் இவரது வேலையாக இருப்பதால் நிறைய அனுதாபத்தை சம்பாதிக்கிறார். படத்தில் இவருக்கு டூயட் கூட இல்லை..

கதாநாயகியைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த, சொல்லப்போனால் ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது ‘ஈட்டோ’ என்கிற நாய். படம் பார்க்கவரும் குழந்தைகளுக்கு நிறைய என்டர்டெயின்மென்ட்டை அள்ளி வழங்குகிறது இந்த ‘ஈட்டோ’.

மரப்பெட்டிகளில் பெண்களை அடைத்து மூச்சுமுட்டவைத்து கொல்கின்ற குரூர வில்லனாக ரேடியோ பாலாஜி.. ஆனால் இதற்கு முந்தைய படங்களில் நாம் அவரை அடிக்கடி காமெடி கதாபாத்திரமாக .பார்த்ததனால் அவ்வளவு அழுத்தமாக அவரை நம்மால் வில்லனாக ஏற்க முடியவில்லை.

தரண்குமார் இசையில் ‘டாக்கி ஸ்டைல்’ இனி சுட்டீஸ்களிடம் கொஞ்ச நாளைக்கு ரவுண்டு வரும்.. நிஸாரின் ஒளிப்பதிவில் ஊட்டி சமபந்தமான தேடுதல் காட்சிகள் பரபரக்க வைக்கின்றன.  சிபி-அருந்ததி இருவருக்குமான அன்யோன்யத்தை இன்னும் நெருக்கமாக காட்டியிருந்தால் அருந்ததி கடத்தலில் நமக்கும் பெரிய தாக்கம் ஏற்படவில்லை.. ஏன் சிபிராஜூக்கே ஏற்பட்டதாக தெரியவில்லை.. அதை கொஞ்சம் கவனித்திருக்கலாம்..

ஆனாலும் பொழுதுபோக்கான ஒரு படம் கொடுத்து படத்திற்கு குழந்தைகளை இழுத்துவரும் வித்தையை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் படத்தின் இயக்குனர் சக்தி சௌந்திரராஜன்.