நாச்சியார் – விமர்சனம்

nachiyar review

பாலா படம் ரிலீஸாகிறது என்றாலே ஒரு எதிர்பார்ப்பு தானாக உருவாகி விடுகிறது. அதிலும் இதில் அதிரடி போலீஸ் கேரக்டரில் ஜோதிகா, செம்பட்டை தலையுடன் ஜி.வி.பிரகாஷ் என எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லை.. சரி.. அந்தவகையில் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறாரா பாலா..? பார்க்கலாம்.

கர்ப்பமான நிலையில் வீட்டுவேலை செய்யும் மைனர் பெண் இவானா (புதுமுகம்).. அவளது கர்ப்பத்துக்கு காரணமான ஜி.வி.பிரகாஷும் மைனர் தான்.. இந்த வழக்கை டீல் செய்யும் போலீஸ் உயரதிகாரி ஜோதிகா, ஜி.வி.பிரகாஷை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விட்டு, இவானவை தன்னுடன் வைத்து பராமரிக்கிறார். அந்தப்பெண்ணுக்கு அழகான குழந்தையும் பிறக்கிறது.

அப்போதுதான் ஜோதிகாவுக்கு அந்த குழந்தை பற்றிய அதிர்ச்சியான உண்மை ஒன்று தெரியவருகிறது. அதுபற்றிய விசாரணையில் கிணறு தோண்ட பூதம் கிளம்பியது போல இன்னும் ஒரு வில்லங்க விஷயம் ஒன்று வெளிப்படுகிறது.

அதை ஜோதிகா தனது ஸ்டைலில் எப்படி டீல் செய்கிறார், அதில் ஜோதிகா எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பதுதான் மீதிக்கதை.. இதையும் தாண்டி ஜி.வி.பிரகாஷையும் அந்த இவானாவையும் எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

க்ளைமாக்ஸ் பற்றி படிக்கையிலேயே அப்பாடா என ஒரு பெருமூச்சு வருகிறதல்லவா..? உண்மைதான் இந்தப்படத்திற்கு ஹேப்பி எண்டிங் க்ளைமாக்ஸ் வைத்து புதிய முகம் காட்டியுள்ளார் இயக்குனர் பாலா..

அதிரடி போலீஸ் அதிகாரியாக ஜோதிகாவின் அவதாரம் இதுவரை நாம் பார்க்காத ஒன்று. நவீன வீரமங்கை நாச்சியாராகவே மாறியுள்ளார் ஜோதிகா. அன்யூனிபார்மில் குற்றவாளிகளை போட்டு வெளுத்தெடுக்கும்போது நமக்கே பயம் வருகிறது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா விஷயத்தில் அவரது கனிவான இன்னொரு முகத்தையும் காட்டியிருப்பதன் மூலம் யதார்த்தம் தொட்டுள்ளார் ஜோதிகா. லஞ்சம் வாங்கும் உயரதிகாரிக்கு தெனாவெட்டாக பதில் சொல்லும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது..

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு விடலைப்பையனாக சுற்றி வந்த ஜி.வி.பிரகாஷை அரை டவுசர் மாட்டிவிட்டு ஆளையே மாற்றிவிட்டார் பாலா. சும்மா சொல்லக்கூடாது, ஜி.வியும், பாலா தன்னை தேர்ந்தெடுத்ததற்கு சரியான நியாயம் செய்துள்ளார். குறிப்பாக அவருக்கும் அந்த மைனர் பெண்ணுக்குமான வாழ்வியல் அவ்வளவு ரம்யமாக இருக்கிறது என்றால் அதில் ஜி.வி.பிரகாஷின் பங்களிப்பு அதிகம்.

ஜி.வி.பிரகாஷின் காதலியாக வெள்ளந்தியான சிரிப்புடன் வளையவரும் இவானா நம்மை முதல் காட்சியிலே வசீகரித்துவிடுகிறார். ஜி.வி.பிரகாஷுடன் அவர் யதார்த்தமாக காதலில் விழுவது எளிய மனிதர்களின் சுபாவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.

இவர்களைத்தாண்டி முக்கியமாக குறிப்பிட்டு சொல்லவேண்டியவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பில் மிடுக்கும் கம்பீரமும் அதேசமயம் யதார்த்தமும் காட்டியிருக்கும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தான்.. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு வில்லன் அல்லது குணச்சித்திர நடிகர் கிடைத்துவிட்டார் என அடித்து கூறலாம்.

ஜோதிகாவின் கணவராக நடித்துள்ளவர் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் ஆயாவாக கொலப்புள்ளி லீலா உள்ளிட்ட சிலரும் தங்களது பங்களிப்பை செவ்வனே செய்திருக்கின்றனர்.

வழக்கமாக பாலா படங்களில் மனதை அதிரவைக்கும் பின்னணி இசையை தரும் இசைஞானி, இது கொஞ்சம் கமர்ஷியல் படம் என்பதால் சற்றே ரிலாக்ஸ் மூடில் பயணித்திருக்கிறார். ஈஸ்வரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது.

போலீஸ்காரர்களின் இரண்டு முகங்களையும் நேர்மையாக காட்டியுள்ளார் பாலா. அதேபோல எளியமனிதர்களை படம் பிடித்ததிலும் எதையும் மிகைப்படுத்தவும் இல்லை. முஸ்லீம் வீட்டு திருமணத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இருப்பது, ஒரு போலீஸ் அதிகாரி எங்கே சமரசம் செய்யக்கூடாது, அதேசமயம் எப்படி அவசரப்பட கூடாது என்பதையும் சரியாக கையாண்டு இருக்கிறார்.

பதைபதைப்பில்லாமல், படபடக்க வைக்காமல் ரசிகர்களை படம் பார்க்க வைத்திருக்கும் இயக்குனர் பாலா, தனது இயல்பு எதையும் மாற்றிக்கொள்ளாமலேயே இதில் கமர்ஷியல் ரூட்டில் இறங்கியுள்ளார்.

மொத்தத்தில் இந்த நாச்சியார் – அன்பானவள் அடங்காதவள் அசராதவள்..