மிஷ்கினின் பெண் உதவியாளர் டைரக்சனில் வரலட்சுமி..!

vralaksmi new film

இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, தற்போது இயக்குனராக புரமோஷன் ஆகியுள்ளார். பெண்களை மையமாக கொண்டுத் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்ற இவ்வேளையில், இவர் அந்த ரூட்டில் பயணிக்காமல், அதிரடி, மர்மம், திரில்லர் கலந்த படைப்பை உருவாக்க இருக்கிறார்.

காதல் காட்சிகள் ஏதுமின்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்ட, இந்தப்படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமியை தேர்வு செய்துள்ளார்கள். “ஒரு அதிரடியான, மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்த கதையின் மையம் ஒரு பெண் என்பது முடிவான பிறகு, வரலட்சுமியே முதலும் இறுதியுமான தேர்வாக இருந்தார். வரலட்சுமி தன்னம்பிக்கையும், கவனமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நடிகை. இத்திரைப்படம் அவரிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர்ந்து, ஒரு புதிய பரிமாணத்தில் அவரை நிலைநிறுத்தும்” என்கிறார் இயக்குனர் நம்பிக்கையுடன்.

கதைக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்ளிடம் இத்திரைப்பட குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ புகழ் பாலாஜி ரங்கா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசை ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

சென்னையில் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி படப்பிடிப்பு துவங்கித் தொடர்ந்து நடைபெற உள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பார்வையும், பெயரும் வரும் விஜயதசமி தினத்தில் வெளியிடப்படும் என்கிறார் இயக்குனர் பிரியதர்சினி.