மைலாஞ்சி மோஞ்சுள்ள வீடு – விமர்சனம் (மலையாளம்)

 

நடிகர்கள் : ஜெயராம், ஆசிப் அலி, கனிகா, மீரா நந்தன், மது, சித்திக், சாய்குமார், கலாபவன் ஷாஜன் மற்றும் பலர்..

கதை : உதயகிருஷ்ணா – சிபி கே.தாமஸ்

ஒளிப்பதிவு : அஜயன் வின்சென்ட்

இசை : அப்சல் யூசுப்

இயக்கம் : பென்னி தாமஸ்

மைலாஞ்சி மோஞ்சுள்ள வீடு என்றால் மருதாணி கோலங்களால் நிரம்பிய வீடு என்று அர்த்தம்.

ஊர் முக்கியஸ்தர்களில் ஒருவர் தான் மது (சோயா சாஹிப்). அவரது மகன் சித்திக் (காசிம் பாய்). அவரது இரண்டு மகள்கள் கனிகா, மீரா நந்தன். மூத்த மகள் கனிகா, ஆயுர்வேத டாக்டரான ஜெயராமை காதலித்து வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்.

அவர் தப்பி ஓட காரணமாக இருந்த சாய்குமாரின் மகனை கோபத்தில் சுட்டுக்கொல்கிறார் சித்திக். அதனால் ஏழு வருட சிறை தண்டனை முடிந்து, திரும்பி வரும் அவர் மீண்டும் ஒரு கார் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகிறார்.

இந்நிலையில் ஆறு வயது பையனுக்கு அம்மாவாகிவிட்ட கனிகாவுக்கு தன் தந்தையையும் தனது குடும்பத்தையும் பார்க்கும் ஏக்கம் எழுகிறது. தங்கள் காதலுக்கு உதவிய தனது மாமா மகன் ஆசிப் அலி மூலம் தன் தந்தை விபத்தில் சிக்கிய செய்தி அறிந்ததும் துடிக்கிறார். அவரை சமாதானப்படுத்திய ஜெயராம் தான் முதலில் சென்று அவருக்கு சிகிச்சை அழைத்து குணப்படுத்தி அவர் மனதை மாற்றுவதாகவும் சில நாட்கள் கழித்தும் கணிகாவையும் மகனையும் அழைத்து கொள்வதாகவும் கூறி ஆசிப் அலியுடன் சித்திக்கின் வீட்டிற்கு செல்கிறார்.

சித்திக்கின் வீட்டில் நுழைந்ததும் மாதவன் குட்டி என்கிற தனது பெயரை மம்முட்டி என மாற்றிக்கொள்கிறார் ஜெயராம். தன மகள் ஓடிப்போனது யார் என்று தெரியாத, ஜெயராமை இதுவரை பார்த்திராத சித்திக், அவரது சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். கனிகாவின் தாயும் மகளை பிரிந்து நோயுற்று இருப்பதை அறிந்த ஜெயராம், சிகிச்சையின் ஒரு பகுதியாக  கனிகாவையும் மகனையும் வரவழைக்க முடிவு செய்கிறார்.

ஏற்கனவே அந்த வீட்டில் வேலை பார்க்கும் கலாபவன் ஷாஜன் கனிகா மும்பையில் இருப்பதாக கூறி கனிகாவின் தாத்தாவிடம் மாதாமாதம் பணம் வாங்கி அனுப்பிய விபரம் ஜெயராமிற்கு தெரிய வருகிறது. அதனால் அவர் மூலமாகவே அவர்கள் இருவரையும் மும்பையில் இருந்து வருவதாக கூறி வரவழைக்கிறார் ஜெயராம். கனிகாவின் வரவால் கோபம் கொள்ளும் அவரது தந்தை அந்த எதிர்ப்பை காட்ட முயற்சிக்க, அந்த கோபத்தின் விளைவாக அதன் உத்வேகத்தால் அவரால் எழுந்து நடமாட முடிகிறது.

ஒரு கட்டத்தில் கோபம் மறந்து தனது மகளை மன்னிக்கிறார் சித்திக். கனிகாவின் பையனை ஏற்கனவே செத்துப்போனாரே சாய்குமாரின் மகன், அவருக்கு பிறந்த பிள்ளை என அப்போது நிலைமையை சமாளிப்பதற்காக வேலைக்காரன் ஷாஜன் உளறிவைக்க, அப்போதிருந்து பிரச்சனை இன்னும் சிக்கலாகிறது. தனது மகனை கொன்றதற்காக சித்திக்கை பழிவாங்க துடிக்கும் சாய்குமார், குழந்தையை தனக்கு சொந்தம் கொண்டாடுகிறார்.

ஆனால் சித்திக்கோ குழந்தையை தர மறுப்பதுடன் தனது மகளுக்கு மறு விவாகம் நடத்த முடிவு செய்கிறார். ஏற்கனவே சித்திக்கிற்கு சிகிச்சை தர வந்த பிசியோதெரபிஸ்ட்டான பாபுராஜ், கனிகாவை தான் திருமணம் கொள்வதாக சொல்ல, அவரை விரட்டி அடிக்கிறார் ஜெயராம். அதனால் ஜெயராமின் நல்ல உள்ளம் கண்டு அவருக்கே கனிகாவை மணம் செய்துவைக்க சித்திக் உட்பட அந்த குடும்பத்தினர் நினைக்கின்றனர்.

தன் மனைவியை தானே இரண்டாவதாக திருமணம் செய்யும் இக்கட்டான சூழலில் சிக்குகிறார் ஜெயராம்.. இந்தப்பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு எப்படி அனைவரும் ஒன்று சேர்கிறார்கள் என்பதை சுபமாக சொல்லி முடித்திருக்கிறார்கள்.

பொய்க்கு மேல் பொய்யாக சொல்லி மாட்டிக்கொள்வது, இக்கட்டான சூழல்களை பேச்சால் சமாளிப்பது போன்ற கேரக்டர்களில் தான் ஜெயராம் வெளுத்து வாங்குவாரே.. இதிலும் அதரகு எந்த குறைவுமில்லை.. ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லா இடத்திலும் சமாளிப்பு சமாளிப்பு தான்.. அஹுவே அனைத்து காட்சிகளிலும் காமெடியை தூவி விடுகிறது.

ஜெயராமின் காதலுக்கு உதவிசெய்யும் சகளையாக ஆசிப் அலி.. ஜெயராம் கூட இவரும் சேர்ந்து சிக்கலில் மாட்டுவதும் அதை சமாளிக்க அவஸ்தைப்படுவதும், அவ்வப்போது மீரா நந்தனுடன் ரொமான்ஸ் பண்ணுவதுமாக ஜமாய்த்திருக்கிறார்.

தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தில் படம் முழுதும் தனது முக பாவனைகளால் நெகிழ வைக்கிறார் கனிகா.. மீரா நாதனுக்கு ஜஸ்ட் லைக் தட் அக்காவுக்கு தங்கையாக ஆனால் படம் முழுவதும் பயணிக்கும் கேரக்டர்.

இவர்களை தாண்டி கலாட்டா சிங்கமாக படம் முழுவதும் அதகளம் பண்ணுவது கலாபவன் ஷாஜன் தான்.. அதிலும் கனிகாவின் பெயரை சொல்லியே அவரது தாத்தாவிடம் கோடி ரூபாய் வாங்கி வீடு, தோட்டம் என வாங்கிப்போடுவதும், கடைசியில் அவரை அழைத்து வர சொல்லும்போது குட்டு வெளிப்பட்டு மிரண்டு நிற்பதும் சரியான காமெடி.

பிசியோதெரபிஸ்ட்டாக வரும் பாபுராஜ் ட்ரீட்மென்ட் கொடுப்பதாகவும் கனிகாவை ‘கவர்’ பண்ணுவதாகவும் சுற்றும் இடங்களும் காமெடி ஏரியாக்கள் தான். மது, சித்திக், சாய்குமார் மூவரும் கிராமத்து பெருசுகளின் ஈகோவை சரியாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ஒரே வீட்டிற்குள்ளேயே முக்கால்வாசி படத்தை படமாக்கியிருந்தாலும் அதை அலுப்புத்தட்டாமல் காட்சிப்படுத்திருக்கிறது அஜயன் வின்சென்ட்டின் கேமரா. கூடவே உதவிக்கு அப்சல் யூசுப்ப்பின் இசையும் இணையாக நகிர்கிறது. ஒரு சிக்கலை உருவாக்கி அதன்மேல் மீண்டும் சிக்கல் மேல் சிக்கல் போட்டு சுவராஸ்யமாக கதை பின்னியிருக்கிறார்கள் உதயகிருஷ்ணா – சிபி கே.தாமஸ் கூட்டணி.. நமக்கே இந்த சிக்கலுக்குள் மாட்டிகொண்டதாக உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அதை படமாக்கிய விதத்தில் சுவராஸ்யம் கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பென்னி தாமஸ்.