முப்பரிமாணம் மூலம் ‘யு டர்ன்’ அடிக்க தயாராகும் சாந்தனு..!

santhanu
எத்தனையோ பேருக்கு நல்ல அறிமுகம் கொடுத்து சினிமாவில் வளர்த்து விட்டவர் இயக்குனர் கே.பாக்யராஜ். ஆனால் அவரது மகன் சாந்தனு சினிமாவில் இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.. அவரை பொறுத்தவரை தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பங்களிப்பை தந்து வருகிறார் என்றாலும் அவருக்கான படங்களோ, கதாபாத்திரங்களோ இன்னும் அமையவில்லை என்றே தான் சொல்லவேண்டும்.

ஆனால் தற்போது அவர் நடித்துள்ள ‘முப்பரிமாணம்’ படம் அவரை ஒரு ‘யு டர்ன்’ எடுக்கவைக்கும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.. காரணம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் சாந்தனுவின் தோற்றம் அனைத்தையும் பார்க்கும்போது இந்தப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு புதிய பாதையை காட்டும் என்பது மட்டும் புரிகிறது.

குறிப்பாக இப்படத்தில் சாந்தனு இரண்டு, மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு டெக்னிஷியனாகவும் கீழே இறங்கி வேலை பார்த்திருக்கிறாராம் சாந்தனு.. அந்த அளவுக்கு அவரை படத்தின் கதை இழுத்துக்கொண்டது தெரிகிறது.

இயக்குனர்கள் பாலா, கதிர் ஆகியோருடன் பணியாற்றிய அதிரூபன் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படம் வரும் மார்ச்-3ஆம் தேதி வெளியாக இருக்கிறது.