மொசக்குட்டி – விமர்சனம்

ஓடும் லாரிகளில் நள்ளிரவு நேரத்தில் தார்பாயை கிழித்து பொருட்களை அபகரிக்கும் நண்பர்களான வீராவும் சென்றாயனும், அதை குவாரி நடத்திவரும் ஜோ மல்லூரியிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்குபவர்கள். அந்த ஊருக்கு வரும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் எப்படியாவது ஜோ மல்லூரியை சிக்கவைப்பதற்காக, அவர் இல்லாத நேரத்தில் அவரது மகள் மஹிமாவை ஸ்டேஷனுக்கு இழுத்து செல்ல முயற்சிக்கிறார்.

அதை தடுக்கும் வீரா, அவருக்கு பதிலாக தான் ஸ்டேஷனுக்கு செல்ல, ஜோ மல்லூரியின் மனைவி தன் கணவனிடம் இந்த தொழிலை விட்டு விடுமாறு தற்கொலை மிரட்டல் விடுகிறார். அவரும் அதற்கு சத்தியம் செய்து, தன்னை தேடிவரும் வீராவையும் சென்றாயனையும் இனி இந்தப்பக்கம் வராதீர்கள் என விரட்டுகிறார்..

ஆனால் வீராவால் காப்பற்றப்பட்ட மஹிமா அவரை விரும்புவதாக அறிவிக்க, அதனால் அதிர்ச்சியாகும் ஜோ மல்லூரி வீராவை ஆள் வைத்து தீர்க்க முயல்கிறார். அதில் தப்பி பிழைக்கும் வீரா சென்றாயன் மூலமாக, மஹிமா கேரளாவில் உள்ள அவரது சித்தப்பாவான பசுபதியின் வீட்டில் இருப்பதை அறிந்து அங்கே செல்கிறார்கள்.. பசுபதியின் காவலை மீறி மகிமாவும் வீராவும் காதலில் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்..

தார்பாய் கிழித்து பொருட்களை திருடும், போலீசிடமே உதார்விடும் ‘மொசக்குட்டி’ கேரக்டரில் வீரா ஓரளவு சரியாக பொருந்துகிறார். ஆனால் ஏற்கனவே இந்த கிராமத்து சண்டியர் படங்களில் நடித்த ஓரிரு நாயகர்களின் பாதிப்பும் அவரிடம் தெரிகிறது. தேவையில்லாத இடங்களிலும் அவர் கட்டும் சண்டியர்த்தனம் அவரது கதாபாத்திரத்தின் மீது சற்று கோபத்தை ஏற்படுத்துவதும் உண்மை..

எந்த குறையும் சொல்ல முடியாத மஹிமா அழகு. ஹீரோவை மிரட்டி காரியம் சாதிக்கும் காட்சிகளில் குறும்பு கொப்பளிக்கிறது. ஆனால் இடைவேளையின்போது ஏன் அப்படி ஒரு முடிவை அறிவிக்கிறார் என்பது மட்டும் புரியவில்லை..

அண்ணன் தம்பியாக ஜோ மல்லூரியும் பசுபதியும் உருவத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் சரியான தேர்வு. ஊருக்கே நல்லது செய்கின்ற, மலையாளிகள் கூட தெய்வமாக மதிக்கின்ற தமிழன் பசுபதியை க்ளைமாக்ஸில் ஏன் அவ்வளவு கொடியவராக காட்டுகிறார்கள் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்..

வீராவின் நண்பனாக வரும் சென்றாயனுக்கு காதல் டூயட் தவிர மற்றபடி படம் முழுவதும் பயணிக்கும் வேடம்… சிற்சில இடங்களில் காமெடி ஓகே என்றாலும் ஒரு முழுப்படத்தின் காமெடியனாக பயணிக்கும் அளவுக்கு சென்றாயன் இன்னும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.. அதேபோல தண்ணியடித்துவிட்டு சலம்பும் காமெடியில் எம்.எஸ்.பாஸ்கரை அடித்துக்கொள்ள முடியுமா..? கோபமாகவும் காமெடியாகவும் சீறுகிறார் மனிதர்.

காடு, மலைகளில் சென்று தனது காமெராவில் இயற்கை அழகை அள்ளிவரும் வித்தையை மைனா, கும்கி படங்களை தொடர்ந்து இந்தப்படத்திலும் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார். ரமேஷ் விநாயகம் இசையில் கடைசி இரண்டு டூயட்டுகள் ஒரே மாதிரி தெரிவதை தவிர்த்திருக்கலாம்.

ரவுடியின் மகளை திருடன் காதலிக்கும் கதை தான்.. இடைவேளை வரை சீராக பயணிக்கும் கதை, கேரளாவுக்கு திரும்பும்போது டாப்கியரில் சீரும் என்று பார்த்தால் சமதளத்தில் பயணிக்கவே திணறுகிறது. கடைசியாக இயக்குனருக்கு சில கேள்விகள்..

விபத்தில் சிக்கிய பள்ளிக்குழந்தைகள் பலரை, தன் உயிராய் துச்சமாக மதித்து காப்பற்றும் ஹீரோவை, தனது பெருமையை உயர்த்திவிட்டதாக பாராட்டும் பசுபதி, கடைசியில் தன் அண்ணன் மகளை காதலித்தான் என்பதற்காக கொலைவெறியுடன் துரத்தும்போது, காப்பற்றிய காட்சிக்கு எந்த மதிப்பும் இல்லாமல் இடைச்செருகலாகவே நிற்கிறதே..!

மஹிமா தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதனால் தன் தோழியின் தந்தை மூலமாக காதலனையும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருப்பதாகவும் க்ளைமாக்ஸிற்கு முன்பு கூறுகிறார். அப்படியானால் அந்த திட்டப்படியே அவர்கள் இயல்பாகவே தப்பிக்கும் வழி இருக்கும்போது மஹிமா ஏன் பசுபதிக்கு தெரியாமல் நள்ளிரவில் வீட்டை விட்டு கிளம்பி சிக்கலில் மாட்டவேண்டும்.

இன்னொன்று, தப்பியோடும்போது ஜீப் ரிப்பேராகிவிட இலக்கு தெரியாமல் காட்டிற்குள் ஓடும் ஜோடி மலை உச்சியை அடைவதும், திடீரென அவர்கள் மலையில் இருந்து குதித்து தப்பிக்க வௌவால் வடிவ தார்ப்பாய் மண்ணில் புதைந்து கிடைப்பதிலும் லாஜிக் படு மிஸ்ஸிங்.. அவர்களாவது தார்ப்பாய் கட்டி குதிக்கிறார்கள்.. ஒகே.. ஆனால் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் குதிக்கும் சென்றாயனும் தப்பி விடுகிறாரே.. அது எப்படி?

கடைசி இருபது நிமிடங்களில் இவற்றை எல்லாம் இயக்குனர் சரிக்கட்டியிருந்தால் மொசக்குட்டி இன்னும் வேகமாக பாய்ந்திருக்கும்..