மணிரத்னம் பாணியில் மித்ரன் ஜவகரின் படம்’..!

தனுஷ் படங்களைத்தான் இயக்குவாரோ என நினைக்கத்தூண்டும் வகையில் வரிசையாக தனுஷ் நடித்த படங்களாக இயக்கிய மித்ரன் ஆர்.ஜவகர் இந்தமுறை அறிமுக கதாநாயகனை வைத்து படம் இயக்குகிறார்.. ஆனாலும் ரீமேக் பண்ணும் அவரது வழக்கமான பாணியில் இருந்து மட்டும் மாறவே இல்லை.

2012ல் தேசியவிருதுகளை பெற்ற, இளைஞர்களை கிறங்கடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘தட்டத்தின் மறயத்து’  படத்தைத் தான் தற்போது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற பெயரில் ரீமேக் செய்கிறார். கிட்டத்தட்ட 3௦ வருடங்களுக்கு முன் பிரதாப் போதன் இயக்கி, ராதிகாவும் பிரதாப்பும் இணைந்து நடித்த படத்தின் பெயரும் இதுதான்.

நடுத்தர வர்க்கத்து இந்துப்பையன் வசதியான முஸ்லிம் பெண் இருவருக்கிடையே அரும்பும் காதல், இருவரும் ஒன்று சேர வரும் எதிர்ப்புகள், தடைகள் பற்றியது தான் இந்தப்படத்தின் கதை.  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ போல, ஆனால் வேறு மாதிரியான இந்து-முஸ்லீம் காதல் கதை தான் இது.

மலையாளத்தில் நடித்த இஷா தல்வார் தான் தமிழிலும் நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் கௌதம் நடிக்கிறார். நாசர், மனோஜ் கே.ஜெயன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், கலைப்புலி தாணு  இந்தப்படத்தை வெளியிடுகிறார்.