மிருதன் – விமர்சனம்

miruthan  review 1
‘இப்படி நடந்தால்’ என்கிற கற்பனையில் ஹாலிவுட் படங்களின் பாணியில் தமிழில் உருவாக்க முயன்று வெளியாகி இருக்கும் படம் தான் ‘மிருதன்’

ஊட்டியில் ட்ராபிக் போலீஸ் அதிகாரியாக வேலைபார்ப்பவர் ஜெயம்ரவி.. அவருக்கு ஒரே ஆருயிர் தந்தை அனிகா.. டாக்டரான லட்சுமி மேனன் மீது ஜெயம் ரவி காதல்வசப்படுகிறார்.. இது ஒருபுறம் இருக்க, தொழிற்சாலையில் இருந்து வெளியே கொட்டப்பட்ட ஆபத்தான கெமிக்கலை நாய் ஒன்று குடித்துவிட, அது வெறிநாயாக மாறி காவலாளி ஒருவரை கடிக்கிறது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட அவர் தனது குடும்பத்தாரை கடிக்க, இப்படியே நகர் முழுவதும் பலரும் இந்த கடிக்கு ஆளாகி மனித மிருகங்களாக மாறுகின்றனர்.

இதில் ஜெயம்ரவி, அவரது தங்கை, நண்பரான காளிவெங்கட், லட்சுமிமேனன், அவரது தந்தையான மினிஸ்டர் ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோரும் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்களை காப்பாற்ற கடுமையாக போராடுகிறார் ஜெயம் ரவி.. ஒருகட்டத்தில் அவரது தங்கையும், அவருமே கூட இந்த மனித மிருகங்களின் கடிக்கு ஆளாகின்றனர்.. முடிவு என்ன என்பது நீங்கள் எதிர்பார்த்திராத க்ளைமாக்ஸ்.

புதிய முயற்சியாக இந்தப்படத்தை இயக்கியுள்ள சக்தி சௌந்தர்ராஜனை பாராட்டலாம். ஆனால் அந்த முயற்சியில் அவரால் முழுக்கிணறை தாண்ட முடியவில்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது. டிராபிக் போலீசாக ஜெயம் ரவிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேரக்டர் புதுசு.. அவரும் அதற்கு நியாயம் செய்திருக்கிறார். நாய்க்கடிக்கு ஆளான மனிதர்களை சுட்டுத்தலும் வேலையை புல் டூட்டியாக செய்திருப்பது ஒருகட்டத்தில் அவருக்கு மட்டுமல்ல நமக்குமே அயற்சியை தருகிறது.

டாக்டராக வரும் லட்சுமி மேனன் பாத்திரப்படைப்பும் சற்றே விசித்திரம் தான். வெறிநாய் கடியால் பாதித்தவர்களை சுடவேண்டாம் என ஜெயம் ரவியை திட்டுவதும், பின்னர் அதே மிருக மனிதன் தன்னை கடிக்க வரும்போது அலறி அவனை சுடச்சொல்லி ஜெயம் ரவியிடம் கெஞ்சுவதும், பின்னர் மீண்டும் மனிதநேயம் பேசுவதுமாக முரண்பட்டு நிற்கிறார்..

காளிவெங்கட் நண்பருக்கான சரியான தேர்வாக ஆர்ப்பாட்டமில்லாத நகைச்சுவையை தந்திருக்கிறார். ஜெயம் ரவியின் தங்கையாக வரும் பேபி அனிகாவும் துறுதுறு நடிப்பில் ஈர்க்கிறார்… இந்தமுறை ஆர்.என்.ஆர் மனோகர் வில்லத்தனத்தை கைவிட்டுவிட்டு காமெடியில் கலகலப்பூட்டியுள்ளார்.

இதுபோன்ற கதைகளில் லாஜிக் பார்க்க கூடாதுதான்.. நாய்க்கடியால் மாறுபவர்கள், மனிதர்களையும் கடிக்க ஆரம்பித்து அவர்களும் மிருக குணத்திற்கு மாறுவதில் நாம் லாஜிக் பார்க்க தேவையில்லை. ஆனால் அவர்களை அடக்க, அழிக்க ஜெயம் ரவியை தவிர வேறெந்த போலீசாரோ, அதிரடிப்படை அமைப்புகளோ களம் இறக்கப்படவில்லை என்பது நிச்சயம் லாஜிக் மிஸ்ஸிங் தான்.

தண்ணீரால் அவர்களை தடுக்க ஜெயம் ரவி எடுக்கும் முயற்சி கூட டூ லேட் தான். லட்சுமி மேனனை காப்பாற்ற தனி ஆளாக மிருக மனிதர்களின் கூட்டத்திற்குள் இறங்கி ஜெயம் ரவி அட்டாக் பண்ணுவது நம்பும்படியாக இல்லை. மாற்றி யோசித்திருக்கலாம்.. இடைவேளை வரையிலான நாய்க்கடி மனிதர்களின் தாக்குதலில் நம்மை நிஜமாகவே பயப்படுத்தி உள்ள சக்தி சௌந்தர்ராஜன், அதை இறுதிவரை தக்கவைக்க தவறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இருந்தாலும் ஒரு புது முயற்சியை மேற்கொண்டிருப்பதால் அதற்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஒருமுறை இந்தப்படத்தை பார்ப்பதில் தவறு இல்லை.