மிக மிக அவசரம் ; விமர்சனம்


சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து எல்ஐசி வரை நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ கடந்து சென்றிருக்கும் நீங்கள் பொதுமக்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்கு இந்த மூன்று கிலோமீட்டர் தூரத்தில் எந்த ஒரு கழிப்பிட வசதியும் இல்லை என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள்.. இது ஒரு உதாரணம் தான்.. இப்படி ஆண்களுக்கே இயற்கை உபாதையை கழிக்க இவ்வளவு நடைமுறை சிரமங்கள் இருக்கும்போது, பெண்களின் நிலை பற்றி சொல்லவும் வேண்டுமோ.?

அதிலும் ஒரு பெண் காவலருக்கு அவரை பழிவாங்க நினைக்கும் ஒரு உயர் அதிகாரியால் ஒரு நாள் முழுக்க ஒரு மிக நீண்ட பாலத்தின் மீது பந்தோபஸ்து பணியில் டூட்டி போடப்பட்டால்..? அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆகும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது அல்லவா..? அப்படி ஒரு வித்யாசமான நூலிழை கருத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் மிக மிக அவசரம்

பாதிக்கப்படும் கான்ஸ்டபிளாக ஸ்ரீபிரியங்கா.. ஒரு பெண் காவலருக்கு அவர் அணிந்திருக்கும் காக்கி உடை கம்பீரத்தை கொடுத்தாலும், அவர்களுக்குள்ளும் ஒரு சராசரி குடும்ப பெண்ணின் பொருளாதாரப் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், உயர் அதிகாரிகளின் டார்ச்சர் என எல்லாமும் இருக்கும் என்பதை மிக அழகாக இயல்பான நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. குறிப்பாக இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் ஒரு பெண் படும் அவஸ்தையை பார்ப்பவர்கள் மனம் கலங்கும் படி வெளிப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் அவரது உணர்வுகளை காவல்துறை உயரதிகாரிகள் எவரேனும் கவனித்தார்கள் என்றால் நிச்சயம் பெண் போலீசார்கள் விஷயங்களில் பல மாற்றங்கள் நடைபெறும் என்பது உறுதி.

பெண்கள்மீது வஞ்சம் வைத்து பழிதீர்ப்பதற்கு உயரதிகாரிகளுக்கு காரணமும் வேண்டுமா என்ன..? அந்த குரூரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அச்சுப்பிசகாமல் பிரதிபலித்திருக்கிறார் வழக்கு எண் முத்துராமன். வேண்டுமென்றே பெண் கான்ஸ்டபிளை இக்கட்டான சூழலில் சிக்க வைப்பதும் அந்தப் பெண் அறியாமலேயே அவருக்கு இன்னும் அந்த சிக்கலை கடினமாக்குவதும் சூழலை உருவாக்குவதும் உதவி செய்ய வருபவர்களை கூட அதிகார பலத்தால் தடுப்பதும் என கல்மனம் கொண்ட போலீஸ் அதிகாரியை கண்முன் நிறுத்தி உள்ளார் வழக்கு எண் முத்துராமன்.

சக போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள ராம்தாஸ், ராஜாசேதுபதி, வி.கே.சுந்தர் ஆகியோரில் ராமதாஸின் பண்பட்ட நடிப்பு நெகிழ வைக்கிறது. ஓய்வுபெறும் காலம் வரை உயர் அதிகாரிகளுக்கு பயந்தே பழக்கப்பட்டுவிட்ட ஒரு எளிய போலீஸ்காரரை அவரது கதாபாத்திரத்தில் பார்க்க முடிகிறது. இரண்டு காட்சிகளில் வந்தாலும் சீமான் நடிப்பில் சிங்கத்தின் கர்ஜனை. இலங்கை தமிழ் பேசிக்கொண்டு திருவிழாவிற்கு வரும் ஆண்டவன் கட்டளை அரவிந்தனின் நடிப்பும், போலீஸ் அதிகாரியான பிரியங்காவிடம் அவர் கேட்கும் எதார்த்தமான கேள்விகளும் நடைமுறை உண்மையை உறைக்கும் விதமாக சொல்கின்றன.

ஸ்ரீ பிரியங்காவின் காதலராக வரும் அரீஷ்குமார் பிரியங்காவிற்கு உதவிசெய்ய நினைத்து முடியாமல் போவது ‘உச்’ கொட்ட வைக்கிறது பிரியங்காவின் மாமாவாக வரும் லிங்கா குடிகாரராக சில காட்சிகளிலேயே வந்தாலும் அவரது கண்ணியத்தால் அந்த கேரக்டர் சற்றே நம் மனதில் உயர்ந்து நிற்கிறது.

ஒளிப்பதிவாளர் பாலபரணி படம் முழுக்க கிட்டத்தட்ட முக்கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் அந்த பாலத்தில் தனது கேமராவால் ஜால வித்தைகள் காட்ட முயற்சித்திருக்கிறார். இஷான் தேவின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

ஒரே ஒரு விஷயம், ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவம் என இரண்டையும் ஒன்றிணைத்து புதியகீதை ஜெகன் எழுதியுள்ள கதைக்கு தன்னால் முடிந்த அளவிற்கு ஓரளவு விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. சொல்லப்பட்ட கருத்தும் சொல்லப்பட்ட விதமும் நன்றாக இருந்தாலும்கூட படமாக்கலில் சற்றே அமெச்சூர்தனம் தெரியவும் செய்கிறது. இருந்தாலும் சொல்லப்பட கருத்துக்காக அவற்றைப் புறந்தள்ளி விட்டால் இந்த மிக மிக அவசரம் படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.