மெர்சல் இசை வெளியீட்டு விழா – ஹைலைட்ஸ்..!

mersal audio

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். திரையுலகில் விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25வது வருட படமாக உருவாகியுள்ள இந்தப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பு, என்பது இன்னொரு ஹைலைட்..

நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான், அட்லி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் சுந்தர்.சி., தனுஷ், பார்த்திபன், சமந்தா, காஜல் அகர்வால், தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி, ஹேமா ருக்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசை குழுவினரால் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் பாடப்பட்டன. நடன நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது,

“குஷி படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து விஜய்யுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். குஷி படத்தில் நடிக்கும் போது விஜய் எப்படி இருந்தாரோ, தற்போதும் அப்படியே இருக்கிறார். எனது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவாக இருந்தாலும், வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் அவரது பங்களிப்பு பெரிதாக இருக்கும். இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரம் நமது மண்ணின் மைந்தன் மதுரக்காரனாக வருகிறார். மெர்சல் படம் வெற்றி பெறுவதற்கு அந்த கதாபாத்திரம் ஒன்றே போதும்’ என்றார்.

“ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும். அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்று உற்சாகம் பொங்க பேசினார் ஏ.ஆர்.ரஹ்மான்..

இயக்குநர் அட்லீ பேசும்போது, “’மெர்சல்’ உருவாவதற்கு ஒரே ஒருவர்தான் காரணம். எனது அண்ணன், தளபதி விஜய் சார் மட்டுமே. அவரோடு நெருங்கிப் பணிபுரிந்து வருவதால் எனக்கு உங்களை எல்லாம் விட இன்னும் நன்றாகத் தெரியும். இதுவரை என் வாழ்க்கையில் பார்த்த மனிதர்களில் மிகவும் நல்ல மனிதர். அவரால் தான் ‘மெர்சல்’ கிடைத்தது. அதற்கு அவருக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

‘தெறி’யில் 5 சண்டைக்காட்சிகள் இருந்தது என்றால், இதில் 13-14 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. அனைத்து விஷயங்களிலுமே ஒரு பெரிய உழைப்பு தேவைப்பட்டது. விஜய் அண்ணாவின் முழுமையான முயற்சியை ‘மெர்சல்’ படப்பிடிப்பில் பார்த்தேன்.

படத்தில் விஜய் சாருக்கு 3 வேடங்களா என கேட்காதீர்கள். ஆனால் 3 கதாநாயகிகள் இருக்கின்றனர் வடிவேலுவின் கதாபாத்திரம் உணர்ச்சிகரமானதாக இருக்கும். மணிவண்ணன் சாரைப் போல அட்டகாசமாக நடித்திருக்கிறார். தமிழர்களின் அடையாளம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றியே படத்தின் கதை இருக்கும்” என விஜய் ரசிகர்களுக்கு உற்சாக டானிக் ஏற்றினார்.

விழாவில் யாரும் எதிர்பாரதவிதமாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் தனுஷ். அவர் விஜய் பற்றி பேசியதாவது.. “விஜய்யின் நண்பராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனாகவும் கலந்து கொண்டுள்ளேன். விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கைப் போட்டு பேசுவார். அதே போல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார். இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால் தான் முடியும்.

ஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார். விஜய் இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதி தான் மிகச்சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன்” விஜய்யை வாழ்த்தினார்

இறுதியாக பேசவந்த விஜய்யின் பேச்சில் ரொம்பவே அமைதி.. ததுதுவார்த்தமாகவும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வது போலவும் அவரது பேச்சு அமைந்திருந்தது. வாழ்க்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அதவிட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும் அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும்தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா” என்று பேசினார் விஜய்.