மேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம்

எளிய மனிதர்களின் வாழ்வியலை பதிவுசெய்யும் விதமாக சில படங்கள் அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது வந்து செல்லும்.. அப்படி ஒரு படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.

கேரளாவின் அடிவாரத்தில் அமைந்துள்ள தேவாரம் மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள மலைக்கிராமம் தான் கதைக்களம். கீழே நகரத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வழியில் மலைப்பாதையில் உள்ள கிராமங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச்செல்லும் வேலை செய்பவர் ஆண்டனி. அப்படி கிடைக்கும் வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது அவரது கனவு. அதற்காக திருமணத்தையே தள்ளிப்போடுகிறார்.

பணம் இருந்தாலும் நிலம் வாங்கும் முயற்சி தட்டிப்போக, ஒருகட்டத்தில் யதார்த்தம் உணர்ந்து மாமன் மக்கள் காயத்ரி கிருஷ்ணாவை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கும் அப்பாவாகிறார். இந்த நிலையில் மலைக்கிராமத்து கிழவி, தனது பேத்தி திருமணத்திற்காக தனது நிலத்தை விற்கப்போவதாக சொல்லி அதை ஆண்டனியை வாங்கிக்கொள்ளும்படி சொல்கிறார். தன்னிடம் இருக்கும் பணம் சற்று குறைவு என்பதால் அதற்கு ஒரு மூட்டை ஏலக்காய் வாங்கி அதை விற்று வரும் பணத்தில் வாங்க முடிவுசெய்கிறார்.

ஆனால் திடீரென நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அவரது கனவையே குழிதோண்டி புதைக்கும் நிலைக்கு அவரை கொண்டு செல்கிறது. அதன்பின் அவர் வசிக்கும் எஸ்டேட் பகுதியையே அந்தப்பகுதியை சேர்ந்த பணக்காரர் ஆறுபாலா வாங்கிவிட, ஆண்டனி உட்பட அங்குள்ள குடும்பங்கள் வேலையிழந்து ஊரை காலி செய்து கிளம்பும் நிலை ஏற்படுகிறது. கம்யூனிஸ்ட் சகாவுடன் அதை தட்டிக்கேட்க கிளம்பும் ஆண்டனியின் வாழ்க்கையே அதன்பின் தலைகீழாக மாறிப்போகிறது.

சொந்தமாக கையளவு நிலம் என்பது அன்றாடங்காய்ச்சிகளுக்கு எவ்வளவு பெரிய கனவு என்பதை மனதில் தைக்கும் விதமாக படமாக்கி இருக்கிறார்கள்.

படம் தொடங்கியதும் மலைப்பாதை வழியாக நம்மை அப்படியே கேரளாவுக்குள் மலையேற்றி அழைத்து செல்கிறார்கள்.. உண்மையிலேயே நாமே அந்த பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்று வந்த உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. நாம் எப்போதாவது ஒருநாள் பாயாசத்திற்கு பயன்படுத்தும் ஏலக்காய் என்பது மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மக்களின் வாழ்க்கையை எப்படி தீர்மானிக்கிறது என்பதை டீடெயிலாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதில் நடித்துள்ள ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட அத்தனை பேரும் நடிப்பு என தெரியாத வகையில் இயல்பாகவே வாழ்ந்துள்ளார்கள். ஆண்டனியின் அம்மா, அவரது மாமா, வயதானாலும் மூட்டையை சுமந்து கொண்டு மலைப்பாதையில் வேகமாக இறங்கும் பெரியவர், டீக்கடை வைத்து பிழைக்கும் கிழவி, உரக்கடை வைத்திருக்கும் நபர், சம்பளம் கொடுக்கும் கங்காணி இவர்களை அனைவரையும் விட முக்கியமாக திருமணமே செய்து கொள்ளாமல் தொழிலாளர் நலனுக்காக வாழக்கையை அர்ப்பணிக்கும் சகாவு அபு வலையங்குளம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தனது சொந்த பகுதி மக்களின் வாழ்க்கை என்பதாலோ என்னவோ தேனி ஈஸ்வரின் கேமரா ஓவர் டைம் டூட்டி பார்த்திருக்கிறது. இந்த மொத்த கதையையும் தனது பின்னணி இசையால் அழகாக சுமந்து செல்கிறார் இசைஞானி இளையராஜா.

மக்களின் வாழ்வியலை படமாக்கினாலும், அது டாக்குமெண்டரி போல ஆகிவிடாமல் கலையம்சத்துடன் மொத்தப் படத்தையும் ரசிக்கும் விதமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் லெனின் பாரதி.

கமர்ஷியல் படமா, வசூலை குவிக்கும் படமா என்கிற ஆராய்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டு பார்த்தால் இது ஒரு நல்ல படம். அருமையான படம். ரசிகர்கள் தாராளமாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.

இப்படிப்பட்ட படத்தை தயாரிக்க முன் வந்ததற்காக ஒரு தயாரிப்பாளராக விஜய்சேதுபதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.