“மாயாவின் வெற்றி ‘மாநகரம்’ படத்திலும் தொடரும் ; தயாரிப்பாளர் நம்பிக்கை..!

maanagaram-movie 1

நயன்தாரா நடித்த ஹாரர் த்ரில்லர் படமான ‘மாயா’வை தயாரித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தது பொடன்ஷியல் நிறுவனம். எஸ்.ஆர்.பிரபு தலைமையிலான ஐவர் கூட்டணியில் இயங்கும் இந்த தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக அறிந்து, கதையை தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறை காட்டியதன் அடையாளம் தான் மாயா படத்தின் மிகப்பெரிய வெற்றி..

நயன்தாராவை வைத்து படம் தயாரித்ததால் அடுத்ததாக பெரிய நடிகர்களை வைத்துத்தான் படம் தயாரிப்பர்களோ என நினைத்தால், நிச்சயமாக பொடன்ஷியல் நிறுவனத்தின் நோக்கம் அது இல்லை என்பதை அவர்களது அடுத்த தயாரிப்பாக உருவாகியுள்ள ‘மாநகரம்’ படம் நிரூபித்துள்ளது..

காரணம் படத்தில் ஹீரோக்களாக நடித்துள்ளவர்கள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ புகழ் ஸ்ரீ, ‘யாருடா மகேஷ்’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த சந்தீப் கிஷன் என சின்ன லெவல் ஹீரோக்களையும் லோகேஷ் என்கிற குறும்பட இயக்குனரையும் வைத்தே, இந்தப்படத்தை உருவாக்கி இருந்தாலும், இந்தப்படத்தின் கதை மீது அபார நம்பிக்கை வைத்துத்தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்கள்.

சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் நான்கு பேரை இந்த மாநகரம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கிறது. ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் சார்லி, முநீஷ்காந்த் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மாநகரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது ‘மாயா’வின் வெற்றி மாநகரத்திலும் தொடரும் என்றே தெரிகிறது.