மருது – விமர்சனம்

Marudhu review 1

குட்டிப்புலி, கொம்பன் படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் மூன்றாவது படம் தான் இந்த ‘மருது’.

ராஜபாளையம் டவுனில் மூட்டை தூக்கும் தொழிலாளி விஷால்.. ஆதரவுக்கு ஒரே ஒரு அப்பத்தா.. நட்புக்கு ஒரு நண்பன் சூரி.. வக்கீல் மாரிமுத்துவின் மகள் ஸ்ரீதிவ்யா மீது விஷாலுக்கு காதலை ஏற்படுத்துகிறார் அப்பத்தா.. இந்தநிலையில் தான் தனது மனைவியை கொலைசெய்துவிட்டதாக உள்ளூர் ரவுடி அரசியல்வாதி ஆர்.கே.சுரேஷ் மீது மகள் மூலமாக வழக்கு தொடுக்கிறார் மாரிமுத்து.

அரசியல் செல்வாக்குள்ள ராதாரவியின் செல்வாக்கோடு வலம் வரும் சுரேஷ், வழக்கு தொடுத்த அப்பா, மகள் இருவரையும் கொல்வதற்காக துரத்த, அவர்களை காப்பற்றும் விஷால் ஆர்.கே.சுரேஷின் நேரடி பகையாளி ஆகிறார். ஒருகட்டத்தில் பாதுகாப்பு கருதி ஸ்ரீதிவ்யாவை மணம் முடிக்க, ஆர்.கே.சுரேஷோ வேறுவிதமாக ஸ்கெட்ச் போடுகிறார்.. இறுதியில் ஓரிரு இழப்புகளுக்குப்பின் நீதியை நிலைநாட்டுகிறார் விஷால்.

தனக்கு கிராமத்து கதைகள் மட்டுமே இயக்க தெரியும் என ஒவ்வொருமுறையும் அழுத்தம் திருத்தமாக இயக்குனர் முத்தையா சொல்லி வருகிறார் தான்.. தாராளமாக இயக்கட்டும்.. ஆனால் கிராமத்து மண் மணத்தோடு நூற்றுக்கணக்கான கதைகள் இருக்கையில், இவருடைய படங்களில் மட்டும் டைட்டில் மாறினாலும் கதையின் பின்புலம் ஒரேமாதிரியாக இருப்பதால் ஏற்கனவே பார்த்து சலித்த காட்சிகளையே திரும்ப திரும்ப பார்ப்பதுபோலத்தான் ஓர் உணர்வு ஏற்படுகிறது.

படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பை எந்தவிதத்திலும் குறைசொல்ல முடியாது.. மூட்டை தூக்கும் தொழிலாளியாகவே படம் முழுதும் நம் கண்களுக்கு தெரிகிறார் விஷால்.. எதிரிகளை அடிக்கும் ஒவ்வொரு அடியையும் சும்மா இடி மாதிரி இறக்குகிறார். அப்பத்தாவின் மேல் பாசத்தை பொழிபவராக சென்டிமென்ட்திலும் ஸ்கோர் செய்கிறார்.

துடுக்கு பெண்ணாக, துறுதுறு ஸ்ரீதிவ்யாவுக்கு இதில் நடிக்க கூடுதல் வாய்ப்பு.. விஷாலின் உயரத்துடன் ஈடுகொடுக்க திணறுவது செம காமெடி. படம் முழுவதும் விஷாலுடன் கூடவே பயணிக்கும் சூரி காமெடியில் மட்டுமல்ல, விஷாலின் திருமணத்துக்காக தட்டு மாற்றும்போதும், கிழவிக்கு கொள்ளிவைக்கும் காட்சியிலும் சென்டிமென்ட்டிலும் கூட நம் கண்களை குளமாக்குகிறார்.

வில்லனுக்கு ஏற்ற மூர்க்கத்தனத்துக்கு சரியாகவே பொருந்துகிறார் ஆர்.கே.சுரேஷ். நடிப்பும் டபுள் ஒகே.. பின்னே உருவாக்கி விட்டது யார்.. பாலாவாச்சே..? ராதாரவியின் கண்ணியமிக்க வில்லத்தனம் நேர்த்தி. குறிப்பாக விஷாலுக்கும் அவருக்குமான காட்சிகள், நிஜத்திலும்கூட இருவருக்கும் நட்பு பூவை பூக்க வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.. வக்கீலாக வரும் மாரிமுத்துவும் தனது பங்கை சரியாக செய்திருக்கிறார்.. அவரது மனைவியாக கொஞ்ச நேரமே வரும் வீரப்பெண்மணி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

இவர்கள் அனைவரிடமும் இருந்து தனது காமெடி கலந்த சென்டிமென்ட் நடிப்பால் பளிச்சென அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் விஷாலின் அப்பத்தாவாக நடித்துள்ள கொளப்புள்ளி லீலா.. நம்ம ஊர் காந்திமதி மாதிரி மலையாள சினிமாக்களில் இவரது காமெடியும், இழுத்து பேசும் வசனங்களும் ரொம்பவே பிரசித்தம். குறிப்பாக பேரனுக்காக சித்தரவைதைகளை தாங்கிக்கொள்ளும் காட்சிகளில் அசத்துகிறார். தமிழ்சினிமாவில் இனி இவரை அடிக்கடி பார்க்கலாம்.

இமானின் இசை பாடல்களை விட ஆக்சன் காட்சிகளில் விளையாடி இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் வேல்ராஜின் கேமராவும் சரிபங்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது. இயக்குனர் முத்தையா தனது முந்தைய படமான கொம்பனில் கூட இதேபோன்று இரு தரப்பினருக்கான பிரச்சனயை கையாண்டிருந்தாலும் கூட அந்தப்படத்தில் பல திருப்பங்களை கையாண்டு விறுவிறுப்பை கூட்டியிருந்தார்.

ஆனால் இந்தப்படத்தில் எந்தவித திருப்பங்களும் (பெரிதாக) இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ்.. அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தி பிடிக்கும் பாணியும் தேவையில்லாத ஒன்று தான். இனிவரும் படங்களில் இதை முத்தையா மாற்றிக்கொள்வார் என நம்புவோம்.