மெரினா புரட்சி – விமர்சனம்

தமிழன் யார் என்று உலகுக்கே பறைசாற்றிய நிகழ்வுதான் கடந்த 2017 ஆம் வருடம் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி நடைபெற்ற மெரினா புரட்சி போராட்டம்.. உலகமே வியந்து பார்த்த இந்த போராட்டத்தின் துவக்கப்புள்ளி எது, ஆரம்ப விதை யார் போட்டனர், எப்படி மாபெரும் போராட்டமாக உருவானது, எப்படி கடைசி நாள் போராட்டம் கலவரமாக மாறியது, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தீவிரமாக வேலை செய்த அந்த இரண்டு தமிழர்கள் யார் என இந்தப் போராட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் ஒவ்வொரு நபருக்கும் அழகான தெளிவான விடைகளை தரும் படமாக வெளியாகியுள்ள படம் தான் இந்த மெரினா புரட்சி.

நாயகன் நவீனும் நாயகி சுருதியும் சேனல் ஒன்றுக்கு நேர்முகத் தேர்வுக்காக செல்லும்போது அங்கே அவர்கள் அனுபவம் பற்றி மேலதிகாரி கேட்பதாகவும் மெரினா புரட்சி குறித்து தாங்கள் ஆய்வு செய்ததை அவர்கள் விளக்குவதாகவும் கதை நகர்கிறது… கிட்டத்தட்ட 90 நிமிடம் ஓடக்கூடிய ஒரு டாக்குமெண்டரி படம் போல இது தோன்றினாலும் உண்மை சம்பவங்களுடனும் அதன் பின்னணிக்கான காரணங்களை அழுத்தமாக கூறுவதாலும் ஒரு விறுவிறுப்பான கமர்சியல் திரைப்படம் போலவே இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எம் எஸ் ராஜ்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான நவீன், சுருதி, புட் சட்னி ராஜ்மோகன் அனைவருமே ஒரு அறையில் அமர்ந்து இந்த மெரினா புரட்சி பற்றி விவாதிப்பதக கதை நகர்வதால் அவர்கள் அனைவருமே இயல்பான நடிப்பையே வழங்கியுள்ளனர். மற்றபடி படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் நிஜமான மெரினா புரட்சியில் கலந்து கொண்டவர்கள் தான் என்பதால் இந்த படத்துடன் இல்லையில்லை, நடைபெற்ற போராட்டத்துடன் நம்மால் எளிதில் ஒன்றி கவனிக்க முடிகிறது.

குறிப்பாக படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை எந்த ஒரு இடத்திலும் போரடிக்கும் விதமாக சிறிய தொய்வு கூட இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை வரிசைப்படி கோர்த்து ஒரு கமர்சியல் படம் ஆகவே இந்த மெரினா புரட்சியை ஆவணப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்

ஹேட்ஸ் ஆப் ராஜ்..!!