பீட்டாவின் உண்மையான நோக்கம் என்ன ; தோலுரிக்க தயாராகும் மெரினா புரட்சி

marina puratchi

கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம், மெரினா புரட்சி என்ற பெயரில் படமாக தயாராகிவருகிறது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்குகிறார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் இந்தப்படத்த்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் படத்தொகுப்பு செய்கிறார், அல்ருஃபியான் இசையமைக்கிறார். படம் குறித்து இயக்குனர் எம்.எஸ்.ராஜ் பல விறுவிறுப்பான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

“2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். ஆனால் அதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு குறித்த போர்க்குரல்கள் ஒலிக்க துவங்கிய டிசம்பர் மாதமே இந்த போராட்டத்தை நசுக்கவேண்டும் என அரசு எந்திரம் செயல்பட ஆரம்பித்தது.. மெரினாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடினாலும், அவர்களை இங்கே ஒன்றுகூடும்படி தன்னெழுச்சியாக வரவழைத்தது வெறும் 18 இளைஞர்கள் தான். மற்றபடி நடிகர்களோ எந்த இயக்கத்தை, அமைப்பை சேர்ந்தவர்களோ அல்ல.. அந்த 18 பேருக்கும் என்ன நோக்கம், மக்களை எப்படி திரட்டினார்கள், வெற்றிகரமாக இந்த போராட்டத்தை எப்படி முடித்தார்கள் என இதில் கூறியுள்ளோம்.

இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது யார், அதன்பின்னால் உள்ள அரசியல் என்ன, இந்த போராட்டத்தை ஒடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதை இளைஞர்கள் சாமர்த்தியாக எப்படி முறியடித்தார்கள், கடைசி நாள் போராட்டம் வன்முறைக்களமாக மாறியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்கிற உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டும் என்கிற நோக்கத்தில் தீவிரமாக புலனாய்வு செய்தே இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்..

நிச்சயமாக இது டாக்குமெண்டரி படமாக இருக்காது.. காரணம் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குரிய பல விறுவிறுப்பான அம்சங்கள் இயல்பாகவே இந்த போராட்டத்தில் இருக்கின்றன. போராட்டத்தை துவங்கியவர்களுக்கும், அதை தடுக்க நினைத்தவர்களுக்குமான பூனை-எலி ஆட்டமாக இந்தப்படம் விறுவிறுப்பாக இருக்கும். காரணம் இந்த போராட்டத்தை முன்னெடுத்த அந்த 18 பெரும் இந்தப்படத்தில் இடம்பெற்று இந்த போராட்டத்தை துவங்கியவிதம், ஆட்களை திரட்டியது, ஒரு சிறு தொந்தரவு கூட யாருக்கும் தராமல் போக்குவரத்தை சீரமைத்தது, சவால்களை ஒவ்வொன்றாக சமாளித்தது என அனைத்தையும் இந்த போராட்டத்தை முன்னெடுத்த அந்த 18 பேருமே இதில் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் எந்த ஒரு இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதுதான் இதை ஹைலைட்.

இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் பீட்டா என்றும், நாட்டு மாடுகளை அழிப்பதுதான் பீட்டாவின் குறிக்கோள் என்றும் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பீட்டாவின் நோக்கம் அதுவல்ல. பீட்டா இங்கே களமிறங்கியதே இன்னொரு தீவிரமான விஷயம் ஒன்றுக்காக. அதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் எங்கே இருந்து கிடைத்தது..? அந்த பணத்தை கொண்டு எந்தெந்த அரசியல்வாதிகளை, எந்தெந்த நடிகர் நடிகைகளை அவர்கள் விலைக்கு வாங்கினார்கள், அதன்மூலமாக அவர்களை எப்படி தூண்டிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்த தடையை வாங்கினார்கள் என்பதை இந்தப்படத்தில் புட்டுப்புட்டு வைத்துள்ளோம்

இதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருந்துள்ளதை இதில் அடையாளம் காட்டியுள்ளோம்.. ஆனால் அவர் நிச்சயமாக த்ரிஷா அல்ல.. அவரைப்பற்றிய உண்மை தெரியவரும்போது படம் பார்ப்பவர்களுக்கு இவரா அவர் என்கிற அதிர்ச்சி நிச்சயம் ஏற்படும். காரணம் ஜல்லிக்கட்டு மற்றும் பீட்டா விவகாரத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நமக்கு எதிரானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் நமக்கு நன்கு தெரிந்த இன்னும் பலர் இதன் பின்னனியில் இருப்பது வெளியே தெரியவே இல்லை. அதை இதில் பகிரங்கப்படுத்தி இருக்கிறோம்.

மிகப்பெரிய ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் தனது வாட்ஸ் அப்பில் தமிழ் வாழ்க என புரொபைல் பிக்சர் வைத்துள்ளவர்.. வீட்டிலேயே சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருபவர். மண் சார்ந்த, தமிழ் ஆர்வம் கொண்டவர்… இந்த படம் பற்றி சொன்னதும், இது எவ்வளவு பெரிய வரலாற்று பதிவு.. நிச்சயமாக இதை நாம் பண்ணுகிறோம் என கூறிவிட்டார். இதற்காக தனது நெருக்கடியான வேலைகளுக்கு நடுவே தான் இந்தப்படத்தில் பணியாற்றினார். ஆனால் இதுவரை அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.

பாவேந்தர் பாரதிதாசனின் ‘கொலை வாளினை எடடா’ என்கிற பாடலை இதில் பயன்படுத்தியுள்ளோம். இன்னும் படத்தை சென்சாருக்கு திரையிட்டு காட்டவில்லை. அங்கே என்ன நடக்குமென இப்போதே சொல்ல முடியாது. ஆனால் இந்தப்படத்தில் சொல்லப்பட்டுள்ள உண்மைகள் மக்களுக்கு சென்றடையவேண்டும். அதற்கு பத்திரிகையாளர்கள் தான் துணை நிற்கவேண்டும்” என கேட்டுக்கொண்ட பி.எஸ்.ராஜ், இறுதியாக, “நமது ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் என கூறி முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரண்டு தமிழர்கள் தான்.. அவர்கள் யாரென்பதை இந்தப்படம் சொல்லும்” என பெரிய குண்டை தூக்கிப்போட்டு விட்டு விடைபெற்றார்.