இன்றைய மெரினா போராட்டம் ; பிரபலங்களின் மனநிலை இதுதான்..!

stars

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டு, நிரந்தர சட்டமாக்குவோம் என தமிழக அரசு, கவர்னர் ஆகியோர் உறுதியளித்ததை தொடர்ந்து அலங்காநல்லூர் மக்கள் தங்களது போராட்டத்தை விளக்கி கொள்வதாக கூறிவிட்டார்கள்.. ஆனால் சென்னை மெரினாவில் கூடிய இளைஞர்கள் இது குறித்து சரியான முடிவெடுக்க முடியாமல் திணறியதால் ஆங்காங்கே போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு, அடிதடி ஆகியவை நிகழ்ந்தன.

இந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பவேண்டும் என திரையுலக பிரபலங்கள், குறிப்பாக இந்த களத்தில் மாணவர்களுக்கு துணை நின்றவர்களும் கூட வலியுறுத்தினார்கள்.

“கோரிக்கைகள் திசைமாறி போனதால் அதிர்ச்சியானேன்” – லாரன்ஸ்

மெரினாவில் ஜல்லிக்கட்டு வேண்டி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பம் முதல் ஆதரவு தெரிவித்து வருகிறார்.கழுத்து வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தாலும் கூட,அடிக்கடி மெரினா கடற்கரைக்கு வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் மருத்துவமனியில் இருந்து இன்று மெரீனாவுக்கு வந்த லாரன்ஸ் இளைஞர்களிடம் பேசினார்

‛‛ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் கவர்னர் பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் பெற்ற வெற்றியை கொண்டாடும் நேரமிது . இந்த போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமே பேச வேண்டும். அரசின் நடவடிக்கையை அலங்காநல்லூர் மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். நாமும் இதனை ஏற்று கொள்ள வேண்டும். எனவே போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுங்கள். இவ்வாறு மெரினாவில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ராகவா லாரன்ஸ் பேசினார்

ஆனாலும் கூட்டம் களைய மறுத்து முரண்டு பிடித்தது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், “ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணம், பாரம்பரிய ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும் என்பதற்காகவே உதவினேன். என்னுடன் சேர்ந்து பலரும் உணவு வழங்கினார்கள், மாணவர்கள் போராட்டம் நடத்திய வரை ஜல்லிக்கட்டு தான் ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்போது வேறு சில விஷயங்களை திணிக்கிறார்கள், போராட்ட களத்தில் வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது. கோரிக்கைகள் திசைமாறி போனதால் அதிர்ச்சியானேன்” என்று கூறியுள்ளார்.

“வன்முறை வேண்டாம். அனைவரும் வீடு திரும்புங்கள்” – ஆர்ஜே பாலாஜி

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே மாணவர்களுக்கு ஆதரவாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி, மெரினாவில் தற்போது நிலவும் அசாதாரணமான சூழல் தொடர்பாக வீடியோ மூலமாக தனது அறிவுறுத்தலை வழங்கினார்..

“மாணவர்கள் நடத்திய இந்த அறப்போர் சிறப்பாக துவங்கியது. 6 நாட்களாக அமைதியாக நடந்த போராட்டம் சரித்திரம் படைத்தது. ஆனால், தற்போது யார் நுழைந்தார்களோ தெரியவில்லை. வன்முறை சம்பவங்கள் மிக மோசமடைந்துள்ளன. போராட்டத்தில் நாம் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டோம். வன்முறையைக் கையில் எடுக்க வேண்டாம். அனைவரும் பத்திரமாக வீடு திரும்புங்கள்” என ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்

“அமைதி காத்தல் அவசியம்.. வன்முறை பயன் தராது” – கமல்

அலங்காநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை, தமிழக அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை. வன்முறை பயன்தராது, இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்க கூடாது, மக்களாக இருக்கக் கூடாது. இதுவரை பொதுச்சொத்திற்கு எச்சேதமும் இல்லாமல் நடந்த இப்போராட்டம், அமைதி இழக்கக்கூடாது.

இந்தியாவின் மூத்த தலைமை ஆவண செய்ய வேண்டும், செய்யும். வீரத்தின் உச்சகட்டமே அகிம்ஸை, அறவழிப் போராளிகள் ரத்தக்காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம்.

முதல்வருடன் பேசியுள்ளேன். கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் விரைவில் பதில் கூறுவார். உங்களை திருப்திப்படுத்த அவர்கள் தயாராகவே உள்ளனர். பொறுமை காக்கவும், நடக்கும் சம்பவங்கள் குறித்து எனக்கு தெரிந்தவர்களை வைத்து பிரதமரை தொடர்பு கொண்டேன். நீதி கேட்பவர்கள் பொறுமை காப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்

“அமைதி காப்பது தான் கண்ணியமான செயலாகும்” – ரஜினி

போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு “இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக்கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒன்று திரண்ட மாணவ, மாணவிகளுக்கும் இளைஞர்களும், தாய்க்குலமும், அனைத்து தமிழ் மக்களும் நடத்தியது அறவழிப் போராட்டம் இதுவரைக்கும் வரலாறு கண்டறியாதது. அமைதியான, ஒழுக்கமான ஓர் அறவழிப் போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்தது பாராட்டுக்கு உரியது.

கண்ணியம்: வெற்றி மாலையணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன். மத்திய, மாநில அரசாங்கம், நீதிபதிகள், வக்கீல்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டிற்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதி காப்பது தான் கண்ணியமான செயலாகும்.

இப்போது சில சமூக விரோத சக்திகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்பிற்கும், முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் போராட்டத்திற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த காவல் துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு இடம் கொடுக்காமல், உடனே அமைதியாக இந்த அறவழி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு நான் தாழ்மையுடனும், பணிவுடனும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.