மரகத நாணயம் – விமர்சனம்

Maragatha-Naanayam-Movie

நூறு வருடங்களுக்கு முன் செங்குட்டுவ மன்னன் தனது உயிராக மதித்துவந்த ஒரு மரகத நாணயம், பல தலைமுறைகள் தாண்டி வெவ்வேறு காலங்களில் அதை அடைய முயற்சித்த 132 பேர்களின் உயிரை காவு வாங்குகிறது, சின்னச்சின்ன கடத்தல் வேலைகளை செய்து வரும் முநீஷ்காந்திடம் வேலைபார்க்கும் ஆதிக்கு பெரிதாக ஏதாவது செய்து கடன்களை அடைத்து செட்டிலாக ஆசை.. அவரிடம் பத்து கோடி ரூபாய் தருவதாக இந்த மரகத நாணயத்தை தேடி எடுக்கும் பணி ஒப்படைக்கப்படுகிறது..

ஆதி அந்த மரகத நாணயத்தை கண்டுபிடிப்பதற்கு மந்திரவாதி கோட்டா சீனிவாசராவை நாடுகிறார்.. அவரோ மிக அதிர்ச்சியான வழி ஒன்றை ஆதிக்கு கூறுகிறார். அவரது ஆலோசனைப்படி மரகத நாணயத்தை ஆதி கைப்பற்றினாரா..? இல்லை உயிர் விட்டோர் பட்டியலில் இடம் பிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்..

முழுக்க முழுக்க காமெடி… கொஞ்சமே கொஞ்சம் த்ரில் என்கிற கான்செப்ட்டுடன் களம் இறங்கி இருக்கிறார்கள்… நாயகன் ஆதி ஒரு கதாநாயகனுக்குன்டான பொறுப்புகள் அனைத்தையும் மிகச்சரியாக செய்திருக்கிறார் எந்தவித பில்டப்பும் இல்லாமல். காமெடி ஏரியாவில் முநீஷ்காந்தும் ஆனந்தராஜும் நின்று விளையாட, அவர்கள் கூடவே ஒடி அவ்வப்போது சிங்கிள் ரன் தட்டுகிறார்கள் டேனியும் அருண்ராஜா காமராஜும்.

நாயகி நிக்கி கல்ராணி கேரக்டரில் ஆரம்பத்தில் ஏதோ சுவாரஸ்யம் இருக்கிறது என்பதுபோல காட்டிவிட்டு அவருக்கு இப்படி ஒரு ட்விஸ்ட் வைக்கலாமா டைரக்டர் ஸார்..? கோட்டா சீனிவாசராவ், மைம் கோபிக்கு வாய்ப்பு குறைவு.. ஆனாலும் நிறைவு..

இருபது நிமிட க்ளைமாக்ஸ் செம த்ரில் ப்ளஸ் செம காமெடி.. அதுதான் படத்தின் ஹைலைட்டும் கூட.. அதிலும் அந்த வினோத வாகனத்தின் துரத்தல் இருக்கிறதே.. மிரட்டல்.. மரகத நாணயத்தை கண்டுபிடிக்க ஆவிகளை துணைக்கு அழைப்பது புது ரவுசு..

முதல் படத்தையே கலகலவென இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் சரவண். லாஜிக் எல்லாம் பார்க்கவிட்டால் இந்த மரகத நாணயம், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு மேஜிக் நிகழ்த்தி காட்டும் என்பது உண்மை.