பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்ட ஆனந்தி..!

mannar vahaiyara

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நடிகர் விமல் தானே தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கதாநாயகி ஆனந்தி, “இந்தப்படத்தில் காமெடி ஏரியாவிலும் நிறைய ட்ரை பண்ணியிருக்கேன். ரோபோ சங்கரை இமிடேட் பண்ணி டான்ஸ் ஆடியிருக்கிறேன். நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகிறேன். பூபதி பாண்டியன் சாரிடம், நான் உங்ககிட்ட கொஞ்சநாள் உதவி இயக்குனரா வேலை பார்க்கிறேன்” என வாய்ப்பு கேட்டேன். அந்த அளவுக்கு அவரின் காமெடி டைமிங் சென்ஸ் பார்த்து பிரமித்துப்போனேன்” என கூறினார்.

இயக்குனர் பூபதி பாண்டியன் பேசியதாவது, “எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது.. ஆனால் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதை பார்த்து பின்வாங்கிவிட்டார் போல தெரிகிறது. அதன்பின் தான் விமல் இந்தப்படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது.. என் டைரக்சனில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். அந்தவகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு படத்தயாரிப்பில் உறுதுணையாக நின்ற சிங்காரவேலனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இந்தப்படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டுலதான் ஒரு விஷயத்தை கவனிச்சேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம். ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பின்போது எனக்கும் விமலுக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசமால் இருந்தோம்.. ஆனால் பின்னர்தான் பேசாமல் இருந்ததை விட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்தோம்.

இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள சூரஜ் நல்லுசாமி, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளரின் மகன் என்பதில் எனக்கு பெருமைதான். இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார். ஆனால் அது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான். இந்தப்படத்தின் எடிட்டர் கோபியை நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின்போது உதவியாளராக சேர்த்துவிட்டேன்.. இன்று என் படத்துக்கே எடிட்டராக மாறி எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இடைவேளைக்குப்பின் இடம்பெற்றுள்ள சரண்யா-நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்” என்றார்.