மணிரத்னம் போட்டுவைத்த காதலர் தின திட்டம் ‘ஓகே கண்மணி’..!

மணிரத்னம் எப்போது ஒரு படத்தை ஆரம்பிக்கிறார் எப்போது முடிக்கிறார்.. எப்போது ரிலீஸ் செய்கிறார் என்பதெல்லாம் அலாவுதீன் பூதத்தால் கூட கண்டுபிடிக்கமுடியாத ரகசியம். தற்போது அவர் இயக்கிவரும் ‘ஓகே கண்மணி’ படம் காதல் கதை என்கிற செய்தி மட்டும் காற்றுவாக்கில் வெளியானது.. காதலர் தினமான நேற்று வெளியான அந்தப்படத்தின் முதல் போஸ்டர் அதை உறுதி செய்துள்ளது.

கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். 25 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவிலும் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதிலும் நுழைய ‘தளபதி’ படம் மூலமாக மம்முட்டிக்கு பாதைபோட்டுத்தந்தவர், தற்போது அவரது மகனுக்கு பாதை போட்டுக்கொண்டு இருக்கிறார். கடந்த வருடம் ‘வாயை மூடி பேசிய’ துல்கரை, இந்த வருடம் சத்தமின்றி பேசவைக்க இருக்கிறார் மணிரத்னம்.

துல்கருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மலையாளத்தில் ஏற்கனவே துல்கருடன் மூன்று படங்களில் நடித்த இவர் அவருடன் இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது. பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று காதலர் தினத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மணிரத்னம்.. படத்தின் அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் விதமாக ‘ஓகே கண்மணி’ என்கிற பெயரில் பேஸ்புக்கில் அதிகாரப்போர்வமாக் கணக்கு ஒன்றையும் துவங்கி உள்ளார்கள் படக்குழுவினர்.