மணிரத்னம் படத்தில் ‘குண்டு’ ஆர்த்திக்கு என்ன வேலை..?

 

உடனே ஆச்சர்யப்பட்டுவிட வேண்டாம்.. நம்ம இயக்குனர் மணிரத்னத்துக்கும் இந்தப்படத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. இது மலையாளத்தில் ‘மணிரத்னம்’ (Money Ratnam) என்கிற பெயரில் உருவாகியுள்ள படத்தை பற்றிய தகவல். ஆனாலும் இதில் காமெடி நடிகையான நம்ம ‘குண்டு’ஆர்த்தி நடித்திருக்கிறார் என்பதற்காக வேண்டுமானால் வியப்பை கொஞ்ச நேரம் கண்டினியூ பண்ணுங்கள்.

இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் இடம்பெற்றுள்ள ஒரே ஆள் நம்ம ஆர்த்திதான். அப்ப ஹீரோ..? இருக்கிறார்.. நஸ்ரியாவின் மணவாளன் பகத் பாசில் தான் ஹீரோ.. ஹீரோயின் நிவேதா தாமஸ்.. இந்தப்படத்தின் கதையை ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாக்கி இருக்கிறார்கள் கதாசிரியர் அனில் நாராயணனும், அஜித் சி.லோகேஷும், படத்தின் இயக்குனர் சந்தோஷ் நாயரும்.

ஆடி கார் ஷோரூமில் எக்ஸிக்யூட்டிவ் ஆக வேலைபார்க்கும் பகத் பாசிலும் அவரது காதலியான நஸ்ரியாவும் ஒரு நாளில் சந்திக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை. ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை வைத்து சமீபத்தில் தான் மலையாளத்தில் அதுவும் பகத் பாஸில் நடிப்பில் ‘நார்த் 24 காதம்’ என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.