மம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில் !

போர் வீரனின் கதையை பிரமாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி.

இது பற்றி இயக்குநர் பத்மகுமார் பகிர்ந்துகொண்டது….

மம்முட்டி சாரின் பிரபல்யம், ரசிகர் வட்டம் மலையாள எல்லைகளை கடந்தது. இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராக போற்றப்படுபவர். தமிழில் அவர் பல தொடர் வெற்றிப்படங்களை தந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். தமிழ்ப்படங்களில் அவரது தமிழ் உச்சரிப்பு மிகத்தெளிவாக, தமிழ் மண் மனம் மாறாததாக இருக்கும். தமிழர்கள் போன்றே பேசும் அவரது தமிழ்மொழி வன்மை, மலையாள நடிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும். “மாமாங்கம்” படத்திற்கு தானே தமிழில் குரல் கொடுப்பதாக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை எங்களை வெகுவாக ஆச்சர்யப்படுத்தியது. அதிலும் பழங்காலத் தமிழ் மொழியை உச்சரிப்பை தன் குரலில் தமிழ் ரசிகர்களுக்காக பலமுறை ரிகர்சல் செய்து டப்பிங் செய்துள்ளார். தமிழ் வசங்களை எழுதி , டப்பிங் பணிகளிலும் பேருதவியாய் இருந்த இயக்குநர் ராம் அவர்களுக்கு பெரும் நன்றி. “மாமாங்கம்” படத்தினை ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். தமிழ் டீஸருக்கு கிடைத்த வரவேற்பு எங்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எந்த மொழியிலும் நல்ல கருத்துக்களை, நல்ல படங்களை ஆதரிப்பதில் தமிழ் ரசிகர்கள் எப்போதும் முன்னோடிகள் அவர்களது அன்பு இதன் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.

1680 காலகட்டப் பின்னணியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பழரிப்பட்டுவின் திருநாவையாவில் நடக்கும் கலாச்சார விழாவை
களமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பின்னணியில் ராஜா ஜாமோரின் எனும் மன்னனின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய சாவேர்ஸ் எனும் ஒரு சிறு போராட்ட குழுவை மையமாக கொண்டது தான் “மாமாங்கம்” திரைப்படம். அக்குழுவில் அதுவரை எவராலும் சாதிக்க முடியாததை சாதித்த உண்மையான ஹிரோ, முடியாததை முடித்துக்காட்டிய வரலாற்றில் மறைக்கப்பட்ட மிகப்பெரும் போர் வீரனின் கதையை, அவனின் வெற்றியை பெரும் பட்ஜெட்டில் சொல்லும் பிரமாண்ட படைப்பாக இப்படம் இருக்கும்.

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியுடன் இப்படத்தில் மலையாள உச்ச நட்சத்திரங்களான உன்னிமுகுந்தன், சித்திக்,
மணிக்குட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, பிரச்சி தெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

M பத்மாநாபன் இயக்கியிருக்கும் இப்படத்தினை Kayva Film Company சார்பில் வேணு குணப்பிள்ளி தயாரித்துள்ளார்.