மகளிர் மட்டும் – விமர்சனம்

magalir-mattum review

’36‘ வயதினிலே வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த மகளிர் மட்டும் மட்டும் படமும் பெண்களை மையப்படுத்திய, அதேசமயம் ஆண்களுக்கான படமாகத்தான் உருவாக்கி இருக்கிறது.

எந்த விஷயத்தையும் ஜாலியாக பாசிடிவாக அணுகும் துறுதுறுப்பான இளம்பெண் ஜோதிகா.. தனது வருங்கால மாமியார் ஊர்வசியின் பள்ளிக்கால பிளாஸ்பேக்கை தெரிந்துகொண்ட ஜோதிகா, ஊர்வசியின் தோழிகளான பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் இருவரையும் சோஷியல் மீடியா மூலமாக கண்டறிகிறார்..

பின் ஊர்வசியை அழைத்துக்கொண்டு வட மாநிலத்தில் இருக்கும் பானுப்ரியாவை சந்திக்கின்றனர். தமிழ்மணம் மாறாத, அதேசமயம் முரட்டு வட இந்திய குடும்பத்தில் தனது வாழ்க்கையை செலவிட்டு குடும்பத்தலைவியாக மாறிவிட்ட பானுப்ரியாவை, அவரது கணவன் நாசர், மகன் உள்ளிட்டோருக்கு கூட சொல்லாமல் ஜாலி ட்ரிப் அழைத்துக்கொண்டு கிளம்புகின்றனர்.. படுக்கையில் கிடக்கும் மாமியார், குடிகார புலம்பல் கணவன் லிவிங்ஸ்டன் ஆகியோரை சில நாட்கள் தள்ளிவைத்துவிட்டு இவர்களுடன் இன்னொரு தோழியான சரண்யாவும் கூடவே இணைந்துகொள்கிறார்..

பள்ளித்தோழிகள் மூவரும் மீண்டும் தங்களது இளமைக்கால வாழ்க்கையை வாழ்ந்தார்களா..? மற்ற இருவரின் குடும்பத்தினர் மூலமாக ஏதாவது சங்கடங்கள் நிகழ்ந்ததா..? இவர்கள் மூவரும் ஒன்றுகூடியதால் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்கிற வாழ்க்கை பாடம் தான் மீதிப்படம்..

இன்று கணவன், குழந்தைகள், புகுந்த வீடு என ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டுக்கொண்டு வாழ்க்கையை நடத்திவரும் தாய்மார்கள் பலரை தினசரி வாழ்வில் பார்க்கிறோம்.. ஏன்.,. நம் வீட்டில் கூட இருக்கவே செய்வார்கள். அவர்களுக்கான தனிப்பட்ட சந்தோஷங்கள் எல்லாம் பள்ளி, கல்லூரி நாட்களோடு முடிந்து விட்டதா..? அதன்பின் மற்றவர்களின் சந்தோஷத்தை தான் தனது சந்தோஷமாக பிரதிபலிக்க வேண்டியிருக்கிறதா என்கிற ஆணித்தரமான கேள்வியை ஆண்களின் தலையில் இறக்கியுள்ளது இந்தப்படம்..

ஜோதிகாவின் நடிப்பில் குறைசொல்ல என்ன இருக்கப்போகிறது..? வழக்கம்போல படத்தின் எனர்ஜி டானிக்காகவே மாறிவிட்டார் ஜோதிகா. வருங்கால மாமியாரை பெயர் சொல்லி அழைப்பதில் இருந்து, அவரின் பள்ளித்தோழிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்குள் சந்தோஷத்தை கொண்டு வருவது என பார்த்து பார்த்து செய்யும் கேரக்டரில் ஏக பொருத்தம். என்ன ஒன்று படம் முழுக்க கோபம், வருத்தம், சோகம் என எதுவுமே இல்லாமல் ஜாலியான நபராகவே அவரை காட்டியிருப்பது மட்டுமே அவரது கதாபாத்திரத்தை நம்மிடம் இருந்து சற்றே அந்நியப்படுத்துகிறது.

பள்ளியில் உய்ர்த்தோழிகளாக இருந்த மூன்று பெண்கள் வயதான காலகட்டத்தில் சந்தித்தால் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா மூவருமே போட்டிபோட்டு பிரதிபலித்திருக்கிறார்கள்.. கணவன், மகனுக்கு பயந்து வாழ்க்கை நடத்தும் பானுப்ரியா, குழந்தை பாக்கியம் இல்லாமல், குடிகார கணவனையும் கவனித்துக்கொண்டு மாமியாரின் ஏச்சும் பேச்சும் கேட்டாலும் அவரின் கடைசி நாட்களை முகச்சுளிப்பு இல்லாமல் பராமரிக்கும் மருமகளாக சரண்யா இருவருக்குமே மனதை கனக்க வைக்கின்ற அதேசமயம் கலகலக்கவும் வைக்கின்ற கேரக்டர்கள்.. மிக நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஊர்வசி போன்று ஒரு சிலருக்கே நல்ல மகன், மருமகள் வாய்க்கிறார்கள் என்பதையும் இதில் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். அதனால் ஊர்வசி கதாபாத்திரம் படம் முழுக்க கலகலப்பூட்டுவதாகவே அமைந்துள்ளது. பானுப்ரியாவின் கணவராக வரும் நாசரும், மகனாக நடித்துள்ள பாவல் நவகீதனும் வட இந்திய தமிழ் கலாச்சாரத்தை தங்களது குணாதிசயங்களில் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தாயின் அருமையை பாவல் நவகீதன் உணரும் காட்சியும் அவர் கதறி அழுவதும் நெகிழ வைக்கிறது.

குடிகாரர் என்றாலும் சலம்பல் எல்லாம் பண்ணாமல், கிடாரை எடுத்துக்கொண்டு பாட்டுப்பாடுகின்ற லிவிங்ஸ்டன் கேரக்டரும் கலகப்பூட்டுகிறது.. ஜோதிகாவின் வருங்கால கணவராக, கொஞ்ச நேரமே வந்தாலும் சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார் மாதவன்.

ஜிப்ரானின் இசையில் ‘அடி வாடி திமிரா’ பாடல் உட்பட மற்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. மணிகண்டனின் ஒளிப்பதிவில் வடநாட்டுக்கு டூர் சென்று வந்த உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அந்த மூன்று சிறுமிகளின் பள்ளி வாழ்க்கையில் தான் தான் என்ன ஒரு கலாட்டா..? குறிப்பாக தோழிகள் மூவரின் பள்ளிப்பருவ காட்சிகளை ரசனையுடன் வடிவமைத்துள்ளார் இயக்குனர் பிரம்மா.

வாழ்நாள் முழுதும் தங்களது குழந்தைகளின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் எந்த தாயையும் அவர்களுக்கென முன்பு இருந்த, இப்போது இருக்க ஏங்குகின்ற ஒரு சந்தோஷமான உலகத்தில் வாழ அனுமதிக்கும் பிள்ளைகளாக யாரேனும் ஒரு சிலர் மாறினால் கூட அதுதான் படத்துக்கும் இயக்குனர் பிரம்மாவுக்கும் உண்மையான வெற்றியாக இருக்கும்