மெட்ராஸ் – விமர்சனம்


வடசென்னையின் மிக முக்கியமான ஹவுசிங் போர்டு ஏரியா.. ஒரு அரசியல் கட்சியில் இருந்து பிரிந்த இரண்டு பிரிவினர், அங்கே இருக்கும் சுவர் ஒன்றை பிடித்து தங்களது தலைவரின் படத்தை வரைந்துவிட வேண்டும் என்பதை தங்களது கௌரவ பிரச்சனையாக நினைக்கின்றனர்.

அதில் ஒரு பிரிவினர் தங்களது தலைவர் படத்தை வரைந்துவிட, அதை அழித்து தங்களது உரிமையை நிலைநாட்ட முயல்கின்றனர் இன்னொரு தரப்பினர். இதற்கு தலைமை வகிக்கும் கலையரசனை எதிர்த்தரப்பினர் குறிவைக்கின்றனர். அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது நண்பர் கார்த்தி, ஒரு கட்டத்தில் தனது நண்பனை காப்பாற்ற, எதிர்கோஷ்டியின் தலைவரின் மகனை போட்டுத் தள்ளுகிறார்.

பதிலுக்கு கோர்ட் வாசலில் வைத்து கலையரசனை பழி தீர்க்கின்றனர் எதிர் தரப்பினர். அடுத்ததாக கார்த்திக்கு குறி வைக்கின்றனர்.. இந்த நிலையில் தனது நண்பன் சாவுக்கு யார் காரணம் என்கிற உண்மை என கார்த்திக்கு தெரியவருகிரது. ஆனால் அதற்குள் அவர்கள் முந்திக்கொள்ள தயாராகிறார்கள்… நண்பனின் சாவுக்கு கார்த்தி பகை தீர்த்தாரா இல்லை துரோக அரசியல் கார்த்தியை காவு வாங்கியதா என்பது க்ளைமாக்ஸ்.

ரத்தமும் சதையுமாக இன்னொரு வடசென்னை படம்.. ஆனால் அருமையான கதைக்களத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.. கடந்த சில படங்களாக நாம் பார்த்து வந்த கார்த்தியா இது நம்மை ஆசர்யப்படுத்தும் அளவுக்கு வடசென்னை பையனாகவே மாறிவிட்டார். முகத்தில் எப்போது ஒரு உக்கிரம் காட்டும் கார்த்தி நமக்கு புதுசு. நட்பு, காதல், கோபம் என சரி பங்கு கலவையாய் மிளிரும் கார்த்திக்கு இந்தப்படம் புத்துணர்ச்சிக்குளியல் தான்.

கதாநாயகி கேத்தரின் தெரசா.. வடசென்னை ஏரியாவாசியாக அவரது முகம் ஒட்டவில்லையே தவிர, நம் மனதில் பசைபோட்டாற்போல ஒட்டிக்கொள்கிறார். கார்த்திக்கு அவர் காதல் தூதுவிடும் காட்சிகள் சின்னச்சின்ன ஹைக்கூக்கள்..

கார்த்திக்கு அடுத்து முக்கிய இடத்தை பிடிக்கிறார் கலையரசன். முணுக்முணுக்கென எட்டிப்பார்க்கும் கோபமும், கட்சிக்கு காட்டும் விசுவாசமும் என ஒரு கட்சியின் வளர்ந்துவருகின்ற, வளரத்துடிக்கின்ற இளைஞனை அப்படியே அச்சு அசலாக பிரதிபலித்திருக்கிறார்.

படத்தில் நடித்துள்ள பெரும்பாலோனோர் புதுமுகங்களே. ஆனால் அதுதான் படத்திற்கு பிளஸ் பாயின்ண்ட்டாகவும் அமைந்திருக்கிறது. மேலும் கண்ணன், மாரி, பெருமாள் என அரசியல் தலைவர்களாக நடித்திருக்கும் பலரும் யதார்த்த நடிப்பை வழங்கியிருப்பதால் வடசென்னைக்குள் நாமே வாழ்கின்ற உணர்வு ஏற்படுகிறது. பைத்தியம் போல அடிக்கடி பிதற்றும் ஜானி, காமெடி டயலாக்குகளை போகிற போக்கில் கொளுத்திப்போடுவது செம கலாட்டா.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ரிப்பீட் கேட்கும் ரகம்.. ஆனாலும் பின்னணி இசையில் அவரை அவரே ஓவர்டேக் செய்கிறார். முரளியின் ஒளிப்பதிவு வடசென்னையின் இன்னொரு உண்மையான முகத்தை நமக்கு காட்டியிருக்கிறது.

இயக்குனர் ரஞ்சித் எந்த ஒரு விஷயத்தையும் டீடெய்லாக சொல்லுவதில் வல்லவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அரசியலை விட சின்ன விஷயமாக நாம் நினைக்கும் ஒன்றில்கூட மக்களின் கௌரவம் ஒளிந்திருக்கிறது என்பதை வைத்து கதை பிண்ணி, அருமையான திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டிருக்கிறார்.

ரசிகர்களின் விலைமதிப்பிலாத இரண்டரை மணி நேரத்தை உணர்ந்து, அதை கொஞ்சம் கூட வீணாக்காமல் புதிய மெட்ராஸை சுற்றிக்காட்டியுள்ளார் ரஞ்சித்.