‘மெட்ராஸ்’ இசை வெளியீட்டு விழா – ஹைலைட்ஸ்

கார்த்தி நடித்து ஜூலையில் வெளியாகவுள்ள ‘மெட்ராஸ்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று தாஜ் கோரமண்டலில் நடைபெற்றது. ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சிவகுமாரும் சூர்யாவும் வருகை தந்திருந்தனர். விழாவில் படத்தின் பாடல்களை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக பின்னணி பாடியவர்களையே மேடையிலும் பாடவைத்தனர். ‘காகித கப்பல்’ பாடலை கானா பாலா பாடியபோது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த, படத்தில் நடித்த வடசென்னை பையன்களும் கூடவே அவ்வப்போது கோரஸ் சேர்ந்துகொள்ள, பார்வையாளர்கள் உற்சாகமாக கைதட்டினர். இந்தப்படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ள கானா பாலா இரண்டையும் தானே எழுதியுள்ளார்.

‘ஆகாயம் தீப்பிடித்தால்’ என்ற பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் கபிலன் பேசும்போது, “இந்தப்பாடலுக்கு முதலில் நான் வேறு வரிகளைத்தான் எழுதித்தந்தேன். ஆனால் அது ரொம்பவே கவிதை நடையில் இருப்பதாக ரஞ்சித் சொன்னதால் மாற்றி எழுதிய வார்த்தைகள் தான் ‘ஆகாயம் தீப்பிடித்தால்’ என்ற பாடலாக மாறியது என்றார்.

இந்தப்பாடலை மேடையில் பிரதீப் நாயர் பாட அவருடன் இணைந்து ‘மெட்ராஸ்’ படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் விருப்பத்திற்காக கிதார் வாசித்தார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.. இவர்தான் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் இசையமைப்பாளர்.

இந்தப்படத்தின் இயக்குனர் ரஞ்சித், ஒளிப்பதிவாளர் முரளி, ஆர்ட் டைரக்டர் மூவரும் ஓவியக்கல்லூரியில் படித்தவர்கள். அதனால் படபூஜை தினத்தன்றே ஓவியத்தில் கரைகண்டவரான நடிகர் சிவகுமாருடன் நட்புக்கூட்டணி அமைத்துவிட்டார்களாம். இதை சற்றே பொறாமையுடன் குறிப்பிட்டார் கார்த்தி.

தான் பேசும்போது இதை குறிப்பிட்ட சிவகுமார், “நான் நாற்பது வருடங்களில் நடித்தபோது கிடைக்காத ஆத்ம திருப்தி, நான் ஏழு வருடங்கள் ஓவியனாக இருந்தபோது மட்டும் தான் கிடைத்தது. இதைச்சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்..

என்னிடம் இதுவரை நான் வரைந்த 5000 ஓவியங்கள் உள்ளன. அவற்றை உங்களின் பார்வைக்காக விரைவில் ஓவிய கண்காட்சி வைப்பேன்” என உணர்ச்சி பொங்க கூறினார். மேலும் இயக்குனர் ரஞ்சித், ஒளிப்பதிவாளர் முரளி, ஆர்ட் டைரக்டர் மூவரையும் ‘தான் பெறாத பிள்ளைகள்” என பாராட்டி வாழ்த்தினார்.

கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா பேசும்போது, “நீண்ட நாள் கழித்து கார்த்தி தனது பாணியில் இருந்து விலகி ஒரு உணர்வுப்பூர்மான கதையில் நடிக்கிறான். ராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்து திடீரென ஷூட்டிங் கிளம்பி விடுவான். ஸ்டுடியோ கிரீன் வட்டாரத்தில் இந்த ஸ்கிரிப்ட் வந்தபோது யாரை ஹீரோவாக போடலாம் என பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.

பொள்ளாச்சியில் இருந்த கார்த்திக்கும் இந்த ஸ்கிரிப்ட் அனுப்பி வைக்கப்பட்டது. அதை படித்த கார்த்தி இதை நானே பண்றேனே என உள்ளே நுழைந்துவிட்டான். பருத்தி வீரனை தொடர்ந்து நிச்சயம் அவனது கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

கார்த்தி பேசியபோது இந்த படத்தை அவர் மிகவும் அனுபவித்து நடித்திருப்பது அவரது பேச்சிலேயே புலப்பட்டது. “ரஞ்சித் பத்துநாட்கள் நடிப்புக்காக ஒர்க்ஷாப் வைத்தபோது, உடன் நடித்த ஆட்கள் அனைவரும் வடசென்னை ஆட்களாக இருந்ததால் இவர்களுடன் நம்மால் ஒட்டமுடியுமா என்கிற பயம் ஏற்பட்டது.

ஆனால் முதல் நாளே என் தயக்கத்தை அவர்கள் உடைத்தெறிந்து விட்டார்கள்.. முதல் நாள் ஷூட்டிங் இரண்டு மணிக்கு வந்துவிடுங்கள் என்றார்கள்.. நானும் மதியம் இரண்டு மணிக்கா என்று கேட்க, நள்ளிரவு இரண்டு மணி என்றார்கள். அங்கே போனபோது எல்லாமே தயார் நிலையில் இருந்தன.

திடீரென ரஞ்சித் ஒரு காலிகுடத்தை கையில் கொடுத்து தண்ணீர் பிடித்து வாருங்கள் என்று சொல்லிவிட்டார். அங்கே போனால் வரிசையில் நிற்கின்ற அக்காக்கள் எல்லாம் “ஏய் போயி வரிசைல நில்லு” என விரட்டுகிறார்கள்.. ஆரம்பமே செம கலாட்டாவாக இருந்தது” என தான் பார்த்து வியந்த அனுபவங்களை வரிசைப்படுத்தினார் கார்த்தி.

கதாநாயகி கேத்தரின் தெரசாவுக்கு தமிழில் இதுதான் முதல் படம்.. ஆனாலும் அழகாக ஐந்து வரிகள் தமிழில் பேசி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர், பின் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாற்றம் இல்லாமல் பேசி தன்னுடன் பணிபுரிந்த அனைவருடைய ஒத்துழைப்புக்கும் நன்றி கூறினார்.

இயக்குனர் ரஞ்சித் தன் முதல் படமான ‘அட்டகத்தி’யில் காமெடி முகம் காட்டியிருந்தார். இந்தப்படத்தில் அதை அப்படியே முற்றிலும் மாற்றி சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார். “வடசென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பதிவாக இந்தப்படம் இருக்கும்.. அதை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க கார்த்தி இந்தப்படத்தின் கதாநாயகனாக உள்ளே நுழைந்ததற்கும் இதை தயாரிக்க முன் வந்த ஸ்டுடியோகிரீன் நிறுவனத்திற்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

விழாவை ரம்யா தொகுத்து வழங்க, விழாவிற்கு வந்திருந்தவர்களை படத்தின் தயாரிப்பாளர்களான ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு ஆகியோர் வரவேற்றனர். படத்தின் இசைத்தகட்டை சூர்யா வெளியிட அவரது தந்தை சிவகுமார் அதனை பெற்றுக்கொண்டார்.